திங்கள், 11 பிப்ரவரி, 2013

இணைய மைனா

அன்புள்ள வள்ளியப்பன்,
உன்னுடைய மின்னஞ்சல் பார்த்தேன். உடனே பதில் எழுதுகிறேன். "இணைய மைனா" என்று என்னுடைய இன்டர்நெட் ப்ரௌசிங் சென்டருக்கு பெயர் இட்டதிலிருந்து நண்பர்கள் அனைவரும் என்னைக் கேலி செய்கிறார்கள். உன்னையும் சேர்த்துத்தான். ஆரம்பத்தில் நானும் இந்தப் பெயரை வெறுத்தவன்தான். நீண்டதொரு மனப்போராட்டத்திற்குப் பின் இந்தப் பெயரே நிலைத்திருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். அப்புறம் எப்படித்தான் நம்மைப் பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது? இந்தப் பெயரைப் பார்த்தாவது சிலர் என்னுடைய இணைய மையத்துக்கு வந்தால் சரி என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் எனக்கே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இணைய மையத்தை ஆரம்பித்த நாளிலிருந்து வாடிக்கையாளர்கள் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த ஆறு மாதங்களில் என்னுடைய இணைய மையம் நானே கிறங்கிப் போகுமளவு வளர்ந்து நிற்கிறது. எங்கே முன்னேறி விடுவோமோ என்று எனக்கே பயமாகத்தான் இருக்கிறது. நீ என்னை முறைத்துக் கொண்டிருக்கிறாய் என்று தெரியும். இருந்தாலும் என்ன செய்வது? நானெல்லாம் இருந்த இருப்புக்கு இந்த நிலைமையே மேலல்லவா? பாப்பநாயக்கன்பாளையம் முழுக்க என்னுடைய இணைய மையத்தைப் பற்றித்தான் இளவட்டங்கள் பேசித் திரிகிறார்களாம். அரைமணி நேரம் ப்ரௌசிங் செய்ய முப்பது ரூபாய் கட்டணம் என்பது பாப்பநாயக்கன்பாளையத்தில் பகல் கொள்ளைதான். ஆனாலும் என்ன செய்வது? கடை வாடகை முதல் பி.எஸ்.என்.எல். கட்டணம் வரை என்னுடைய செலவாதிகள் யாவும் என் கல்லாவைக் கலகலக்க வைப்பதால்தான் நான் என் வாடிக்கையாளர்களின் பணப்பையைப் பதம் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆரம்பத்தில் இணையத்தை நானும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நீ எனக்கு இதைப்பற்றி விளக்கியபோதெல்லாம் நான் முரட்டுத்தனமாக புரிந்து கொள்ள மறுத்தேன். ஒரு கட்டத்தில், இணையத்தின் மீதான வெறுப்பு உன் மீதான வெறுப்பாகவும் மாறியது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒரே போன்று சிந்தனைகளும், கருத்துகளும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே. அப்போதெல்லாம், உன்னுடைய கருத்துகளுக்கு எதிரான தரப்பையே எடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக நான் என் ஆழ்மனதைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தேன். “ஒரே படுக்கையில் படுக்கிறோம். வெவ்வேறு கனவுகள் காண்கிறோம்” என்ற கவிதையையும் ஓயாது முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். இணைய மையத்திற்கு நீ என்னை அழைக்கும் போதெல்லாம், தந்திரமாக நான் என்னை உன்னிடமிருந்து துண்டித்துக் கொண்டேன். கல்லூரி முடிந்து, நம் நண்பர்கள் யாவரும் வேலையில் சேர்ந்த பிறகும், நான் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தது எனக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், பிறர் வந்து எனக்கு பாடமெடுப்பது சகிக்க முடியாத துயரமாக இருந்தது. பல நூறு ஆண்டுகள் தாண்டியும் வாழும் மரங்கள் சில, கல்லாக மாறி விடுமாம். அப்படித்தான், என் மனமும் மாறிப் போனது. உண்மையாகவே என்மீது கரிசனம் கொண்டு எனக்கு உபதேசம் சொன்னவர்களைக்கூட, வேட்டையாடும் ஆதி மனிதனின் மூர்க்கத்தோடு சினந்திருக்கிறேன். தேவாலயத்தில் போய் இந்தப் பிரசங்கங்களை ஆற்றுங்கள் என்று சொல்லி அவர்கள் முகங்களைச் சிறுக்க வைத்திருக்கிறேன்.
என்னை நானே சிறையிட்டுக் கொண்டு என் மனதின் கீழ்மைகளோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில்தான், நல்லதொரு மீட்பராக நீ வந்து அமைந்தாய். சிங்கப்பூர் செல்வதற்கு முன் மூன்று மாதங்கள் என்னுடனே தங்கி என்னை ஆற்றுப்படுத்தினாய். என்னுடைய மனநிலைக்கு நான் பிறிதொருவரிடம் அடங்கி வேலை செய்வது முடியாத காரியம் என்பதை உடனடியாக நீ புரிந்து கொண்டது இப்போதும் எனக்கு வியப்பை உண்டாக்குகிறது.
கண்ணாடி பார்த்து உருவத்தைத் திருத்திக் கொள்வது போல என் உணர்வுகள் அனைத்தையும் உன் சொற்கள் வழியாக அகவயமாகக் கண்டு திருத்திக் கொண்டேன். ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் மனத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மாறுவது எப்போது? அவர்கள் இருவரின் மனங்களும் தர்க்கங்களைத் தாண்டிய ஒரு புள்ளியில் சமநிலை அடையும் போதுதானே?
நட்பு என்ற சொல் எவ்வளவு எடை மிக்கது.  என்னுடைய எதிர்ப்பையும் மீறி என்னை இணைய மையத்திற்கு அழைத்துச் சென்று மிகவும் பொறுமையாக , இணையம், மின்னஞ்சல் போன்ற விஷயங்களைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை கற்றுக் கொடுத்து ஒரு லயிப்பினை ஏற்படுத்திக் கொடுத்தாய். நீ சிங்கப்பூர் சென்றபிறகு என் மனவெளியெங்கும், இணையம் பற்றிய ஆசையே பூத்துக் கிடந்தது. கண்களில் ஆவல் மின்ன இத்துறை சார்ந்த நண்பர்களிடம் மேலதிகமாகக் கற்றுக் கொண்டு, சில பயிற்சிகளையும் எடுத்துக் கொண்ட பிறகுதான் நானும் சொந்தமாக இணைய மையம் துவங்கி நடத்தலாம் என்ற எண்ணம் வந்தது. வங்கி உதவியாலும் நீ தந்த பணத்தாலும் இது சாத்தியமாயிற்று. வாழ்வின் நதியோட்டத்தில் மெல்ல நானும் என்னை இணைத்துக்கொண்டேன்.
நீ மீட்டுக்கொடுத்த வாழ்வு இது. நம் இருவரிடையே சம்பிரதாயங்களுக்கு இடமில்லை எனினும் என் ஆழ்மனத்தின் தூண்டுதலால் இந்த வார்த்தைகளைச் சொல்லவேண்டி இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது மின்னஞ்சல் அனுப்பு. எழுத்தின் மூலமாக நாம் புக விரும்பும் உலகம், செல்பேசிகளால் ஒருபோதும் தீண்டிவிட முடியாதது.
நண்பன்,
சத்திய சீலன்.
பாப்பநாயக்கன்பாளையம்.
கோயம்புத்தூர்.
ஆகஸ்ட் 2010.
கோப்பி- ஓ எடுத்துக் கொள்ளுங்கள். இனிய புன்னகை தாங்கிய சீனப் பணிப்பெண் வள்ளியப்பனின் தனிமையைக் கலைத்தாள். வள்ளியப்பன் தற்காலிகமாக தன் மடிக்கணினியை மூடி வைத்தான்.
அவள் தன்முன் இருக்கும் மேஜையில் காப்பியை வைத்ததும், அவள் கண்களைப் பார்த்து வள்ளியப்பன், "ஷீ ஷீ" என்று சீன மொழியில் நன்றி சொன்னான். அவள் புன்னகை மேலும் கூடியது. அவள் முகத்தில் மின்னிய பொன்னொளி, வள்ளியப்பனுக்கு ஏனோ, தான் மிக விரும்பும் சிதம்பரம் கோயில் விமானத்தை நினைவூட்டியது.
சொற்களின் வல்லமையை சிலாகித்துக் கொண்டே வள்ளியப்பன் தன்முன் வைக்கப்பட்ட பாலில்லாத காப்பியைப் பருகத் துவங்கினான். காப்பியின் இனிப்பும் கசப்பும் கலந்த சுவை பாறையிடுக்கில் நீர் கசிவது போல அவனுக்குள் சில ஞாபகங்களை வரவழைத்துக் கொண்டிருந்தது. சொற்களால் ஆனது இந்த உலகம் என்று அவனுக்குத் தோன்றியது. சொற்களே காயம் ஏற்படுத்துகின்றன. சொற்களே மருந்தாகவும் மாறுகின்றன. இது என்ன வினோத ரசவாதம். தன்னருகே இருக்கும் காலியான இருக்கைகளிலெல்லாம் ஆயிரமாயிரம் சொற்கள் தங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல வள்ளியப்பனுக்குத் தோன்றியது. மீண்டும் மடிக்கணினியைத் திறந்து, சத்திய சீலனுக்குப் பதில் எழுதத் தொடங்கினான்.


அன்புள்ள சத்திய சீலன்,
உன் மின்னஞ்சல் பார்த்தேன். உன் மனதிலிருக்கும் எண்ணங்களை வார்த்தைகளாக வார்த்தெடுத்துவிடுவது உனது மிகப்பெரிய பலம். ஆனால், என்னுடைய பலவீனமே, எண்ணங்களை வார்த்தைகளாக்கத் தெரியாததுதான். உன் போல செறிவாக எழுத முடியாவிட்டாலும், எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். முதலில், உன்னுடைய "இணைய மைனா" ( அது என்னடா பெயர்? இன்றளவும் என்னால் இந்தப் பெயரைச் சகித்துக் கொள்ள முடியவில்லை) வேகமாகப் பறந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. உனக்கே பயமாக இருந்தாலும் நீ முன்னேறித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்து வெளிவரும் நம் போன்ற இளைஞர்களுக்கு வாழ்க்கை குறித்த பயம் வருவது இயல்பே. ஆனால், நீ அதீத பயம் கொண்டதுடன், தாழ்வுணர்ச்சி என்ற சங்கிலியால் உன்னைப் பிணைத்துக் கொண்டதுதான் உன்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஆதி காரணமாக இருந்தது. அந்தச் சங்கிலியிலிருந்து உன்னை விடுவித்ததுதான் நான் செய்தது.
மற்றபடி உன்னுடைய நெகிழ்ச்சிக்கும், நன்றிக்கும் நான் தகுதியானவனில்லை. சாப்பிட்டுக் கொண்டே எப்படிக் கை கழுவ முடியாதோ, அது போலத்தான், நட்பு பாராட்டிக்கொண்டே, நன்றி சொல்லவும் முடியாது. நன்றி என்ற வார்த்தை நண்பர்களுக்கிடையில் எப்போதும் இல்லை.
இணையம் தான் எவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டது. நம்மைச் சுற்றியிருக்கும் காற்று போல இணையம் மாறியிருக்கிறது. உணவு, உடை, உறையுள் போல இணையமும் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறி வரும் காலம் வந்துவிட்டிருக்கிறது. இன்று எந்த ஒரு படித்த இளைஞனும் இணையத்தைத் தொடாது முன்னேற முடியாது என்ற நிலைமை. இதற்கு மேல் இதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நீ இந்தத் துறையைத் தேர்வு செய்தது குறித்து பெருமைப் படத்தான் போகிறாய்.
இங்கே நான் ஒரு உணவங்காடியில் இருந்து உனக்கு இந்தப் பதிலை எழுதிக் கொண்டிருக்கிறேன். பானு அலுவலகத்தில் இருக்கிறாள். நான் இன்று வேலைக்குச் செல்லவில்லை. ஒரு காரணமும் இல்லை. போக வேண்டாம் என்று தோன்றியது. போகவில்லை. இந்த உணவங்காடியை சிங்கப்பூரில் "கோப்பிடியம் (KOPITIAM)" என்று அழைக்கிறார்கள். இங்கு வந்து அமர்ந்ததுமே ஒரு ஜனநாயக உணர்வு தோன்றி விடுகிறது. சிங்கப்பூரின் எளிய மக்களோடு நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சிறந்த இடம் இதுதான் என்று நான் நினைக்கிறேன். பானுவின் எதிர்ப்பையும் மீறி, நான் என்னுடைய ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் இங்குதான் இருக்கிறேன். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு கோப்பை காப்பியும் திறந்த மனதும் இருந்தால் நண்பர்களைப் பெறுவது எவ்வளவு எளிதான காரியமாய் இருக்கிறது என்று இங்குதான் நான் தெரிந்து கொண்டேன். குறிப்பாக, டென்னிஸ் லிம் என்று எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். நான் தினமும் இங்கு காபி அருந்த வரும் நேரத்தில்தான் அவனும் வருவான். ஒரு பெரிய ஓட்டலில் பீட்ஸா டெலிவரி மேனாக வேலை செய்கிறான். அவனிடம் ஒரு வினோதமான பழக்கம் இருக்கிறது. தன் நண்பர்கள் என்று அவன் உணரும் யாவரையும் அவர்கள் கைகளில் பச்சை குத்திக்கொள்ளச் செய்வதுதான் அது. அதுவும் சீனாவின் புகழ்பெற்ற "டிராகன்" உருவத்தைத்தான் பச்சை குத்திக் கொள்ளச் சொல்லுவான். நண்பர்களிடம் பேசிப் பேசி இடைவிடாது அவர்கள் மனதில் நுழைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தி விடுவான். இதுவரை தன்னுடைய இருபது நண்பர்களைப் பச்சை குத்திக் கொள்ளச் செய்து விட்டான். என்னிடமும் இதுகுறித்துப் பேசி வருகிறான். ஒரு நண்பனுக்காக  கையில் பச்சை குத்திக் கொள்வதில் எனக்கேதும் சிக்கலில்லை. ஆனாலும், பானுவை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.
நான் காபி குடித்துக் கொண்டே என்னுடைய மடிக்கணினியில் முகநூலில் நண்பர்களுக்கு ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்போதெல்லாம் என்னை அவன் வினோதமாகப் பார்ப்பான். அவனுக்கு ‘முகநூல்’ விலாசம் இல்லை. மின்னஞ்சலும் இல்லை. இருப்பினும், ஏராளமான நண்பர்களோடு இருக்கிறான். அவனுக்கு இணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. நண்பர்களோடு தொடர்பு கொள்ள நினைத்தால் அலைபேசியில் பேசி விடுகிறான், அல்லது தன்னுடைய அலைக்கழிக்கும் வேலைக்கு நடுவிலும், அவர்கள் வீட்டுக்கே சென்று விடுகிறான். நண்பர்களின் முகங்கள் நம் அன்றாட வாழ்விலிருந்து விலகியதால்தான், ‘முகநூல்’ நமக்குத் தேவைப்படுகிறது, நான் நண்பர்களின் முகங்களோடு நேரடிப் பரிட்சயம் கொள்வதால், முகநூல் தனக்குத் தேவையில்லை என்கிறான். சில நண்பர்களுக்குத் தன் கைப்படக் கடிதம் எழுதுகிறான். நானெல்லாம் கடிதம் எழுதி பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனாலும், ஒரு நண்பனிடமிருந்து மின்னஞ்சல் பெறுவதைக் காட்டிலும் அவன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைப் பெறுவது என்பது ஆத்மார்த்தமான ஒரு நிறைவைத் தரும் விஷயம் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
ஆச்சர்யமாக இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டில், இணையப் பரிச்சயம் இல்லாத, ஒரு வாழ்க்கை வாழக்கூடிய மனிதனும் இருக்கிறான்...
வேறு விஷயம் ஒன்றுமில்லை. அடிக்கடி எழுது. இப்போதெல்லாம் நான் ஒரு கோப்பை காபிக்காகவும், உன்னுடைய மின்னஞ்சலுக்காகவும்தான் அதிகம் ஏங்குகிறேன்.
நண்பன்,
வள்ளியப்பன்.
புக்கிட் பாத்தோக்
சிங்கப்பூர்
ஆகஸ்ட் 2010.
*********
பானு குழந்தையின் பொன்னிறமான தலைமுடியினை அளைந்து கொண்டிருந்தாள். மென்மை கொண்டு செய்த உடலும், தீபத்திற்கு அருகே உள்ளங்கையைக் கொண்டு போனால், தெரியக்கூடிய சிவப்பு நிறமும் கலந்த குழந்தை உத்தரத்தைப் பார்த்து யாரிடமோ அளவளாவ முயற்சித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய துடிக்கும் விரல்களால், குழந்தை தன்னைச் சுற்றியிருக்கும் காற்று வெளியினில், ஏதோ ஒரு அரூபத்தைச் சுட்டிக்காட்டியது போலிருந்தது.
பானு, வள்ளியப்பனை நோக்கி இரைந்தாள்.
அந்த கம்ப்யூட்டர விட்டு இப்படி அப்படி நகரவே தோணாதா உங்களுக்கு? லீவு விட்டா போதும். கம்ப்யூட்டர கட்டிக்கிட்டே அழ வேண்டியது. உயிருள்ள ஜீவன்களும் இந்த வீட்ல இருக்கோம்ங்றது ஞாபகம் இருக்கட்டும்.
அர்ச்சனை வாங்குவதற்கென்றே பிறந்தவன் போல புன்முறுவலுடன் வள்ளியப்பன் மின்னஞ்சலைப் படித்துக் கொண்டிருந்தான்.  எதிரே இருந்த கணினித் திரை வள்ளியப்பனுக்கு சத்திய சீலனின் மின்னஞ்சலைக் காட்டிக் கொண்டிருந்தது.
அன்புள்ள வள்ளியப்பன்,
குழந்தை எப்படியிருக்கிறான்? அதிசயமாக இந்த முறை நாமிருவரும் கோயம்புத்தூரில் அதிக நேரம் ஒன்றாகச் செலவழிக்க முடியவில்லை. நீ பானுவின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அலைந்து கொண்டிருந்தாய். என்னையோ "இணைய மைனா" கட்டிப்போட்டு விட்டது. இருவருக்குமே இம்முறை மேலும் பல வேலைகள் இருந்தன. வாழ்க்கை இனிமேல் இப்படித்தான் போகும் போலும். மனதிற்கு பிரியமில்லாத விஷயங்களுக்காக அதிக நேரம் செலவிடுவதும், பிரியமானவர்களுக்காக குறைந்த நேரம் செலவிடுவதுமே வாழ்வின் போக்காக அமைந்துவிடும். இருப்பினும், கிடைத்த கொஞ்ச நேரத்தில், நாம் பகிர்ந்து கொண்ட பிரியங்கள் நம்மால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியவை.
நம்முடைய உறவினர், வாடிக்கையாளர், உடன் வேலை செய்வோர் என ஒவ்வொருவரிடமும் பேசும்போது நாம் ஒவ்வொருவிதமான முகத்திரை போட்டுக் கொண்டுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். நண்பர்களிடம் மட்டும்தான் அந்த முகத்திரைக்கு அவசியமில்லாமல் போகிறது. நீ வந்துவிட்டுப் போன இந்த ஒரு மாதத்தில், மனம் திருநீறு போட்டுத் துடைத்த வெள்ளி விளக்கு போலத் தெளிவடைந்திருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களில் என் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சி நீ சொன்னது போலவே  என்னைப் பெருமையடையச் செய்திருக்கிறது. இன்னொரு கடை துவங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா? இப்போது காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஒரு இடம் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட இருபது கணினிகளை வாங்கிப் போட்டு ஒரு பெரிய இணைய மையம் திறக்கலாம் என்றிருக்கிறேன். மன்னித்துக் கொள். இந்தக் கடைக்கும் "இணைய மைனா" என்றுதான் பெயர். இதில்லாமல், இப்போதிருக்கும் இணைய மையத்தையும் விரிவாக்கி விட்டேன்.
நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான்காண்டுகளுக்கு முன்பெல்லாம் , நான் கடை வைத்திருக்கும் இந்தத் தெருவில்தான் கல்லூரிப் பெண்கள் சாயங்கால வேளைகளில் கூடிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதை விடவும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே மனம் ஒரு பாதரசத் துளியாக மாறி தெருவினில் அவர்களை நோக்கி சப்தமின்றி ஊர்ந்து செல்லத் துவங்கிவிடும். என்னைப் போலவே அந்தியும் அவர்களைப் பார்த்து மயக்கம் கொள்ளும். கடற்கரையில் நிலாக் காயும் கரும் பாறையைப் போல் என்னை நான் உணர்வேன். அவர்கள், தெருவை விட்டு அகன்ற சில நொடிகளில், மீண்டும் இருளில் புதைந்த தெருவினில் நான் மட்டும் தனிமையின் விரல் பற்றி நடந்து செல்லுவேன். சாக்கடையினுள் தூர்வாரும் பெருச்சாளிகளும், டீக்கடை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்திருக்கும் நாய்களுமே என்னைக் கவனித்துப் பார்க்கும் ஜீவன்கள். மற்றபடி இந்தத் தெருவில் என்னை எவருக்கும் தெரிந்ததில்லை அப்போது.
ஆனால், இப்போது என் நிலக்காட்சி மாறிப் போயிருக்கிறது. என்னைத் தெரியாதவர்கள் இந்தத் தெருவினில் யாரும் இல்லை. கோயம்புத்தூரின் வணிகர் சங்கத்தில், நான் இப்போது ஒரு முக்கியமான பெரும்புள்ளி. வணிகர் சங்கத் தலைவர் நான் கேட்கும் உதவிகளைச் செய்து கொடுக்கத் தயாராய் இருக்கிறார்.
கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் தோழிகளுக்கும் காதல் வளர்க்கும் மையமாக என்னுடைய கடை மாறிப்போயிருக்கிறது. ஜோடி ஜோடியாக வந்தமர்கிறார்கள். அவர்களுக்கென்று படைக்கப்பட்ட ஒரு உலகினில் சஞ்சரிக்கிறார்கள். அவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் பேசுகிறார்கள். அவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு லிபியில் எழுதுகிறார்கள். ஐஸ்க்ரீம் உருக உருகக் காதலிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இன்னும் இரண்டொரு ஆண்டுகளில் பிரியப்போகிறவர்கள்தான். இருப்பினும், வாழ்க்கை முழுதும் தங்கள் உடம்போடு சேர்த்து இந்த நினைவுகளையும்தானே சுமந்தலையப் போகிறார்கள். இவர்கள் சேர்ந்திருக்கும் இந்த தருணங்களை விடவும் இந்த தருணங்களைத் தங்கள் நினைவிலோட்டிப் பார்க்கும் பொழுதுகள்தான் அதிகமுமிருக்கப் போகின்றன. அப்படியான பொழுதுகளில், காலத்தில் உறைந்து நிற்கும் கல்வெட்டினைப் போல என் இணைய மையமும் இவர்கள் மனதில் அழியாது நிலைப்பெற்று விடும் அல்லவா. பெருமைக்காகச் சொல்லவில்லை, அகல்விசும்பைப் போலவும், மலைகளைப்போலவும், சாஸ்வதமாக என் இணைய மைனாவும் இந்த உலகில் இருக்கத்தான் போகிறது.
என் வாடிக்கையாளர்கள் யாவரும் என் இணைய மையத்தில், நிரந்தர உறுப்பினர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். இவர்களை மௌனமாக கவனித்துக் கொண்டிருப்பது என்னுடைய பொழுது போக்காக மாறி வருகிறது. சிலர் வேலை தேடுவதற்கு வருகிறார்கள். இன்னும் சிலர் இணையத்தில் வேலை செய்வதற்கு வருகிறார்கள். சிலர் முகநூலில் முரசறைகிறார்கள். சிலர் இணையம் மூலமாக வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். சிலர் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்கிறார்கள். சிலர் முன்தினம் தாங்கள் காணத் தவறிய நெடுந்தொடர்களைக் காண்பதற்காக வருகிறார்கள். சிலர் தங்கள் ரகசிய வேட்கைகளுக்கு வடிகால் தேடி இணையத்தைத் தங்கள் இருண்ட உலகிற்குள் இழுத்துச் செல்கிறார்கள். யாவரின் விருப்பத்தின் பாதையிலும் இணையம் எவ்விதப் புகாருமின்றிப் பயணிக்கிறது. அரூப நாய்க்குட்டியைப் போல இணையம் இவர்களின் மடிக்கணினிகளை, ஐ-பேட்களை, கைபேசிகளைப் பின்தொடர்ந்தபடியே சென்று கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் தங்கள் மகனையும் பேரனையும் பார்த்துப் பேசுவதற்காக, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முதிய தம்பதி வந்து என் இணைய மையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உலகம் இணையத்திற்கும் கணிப்பொறிக்கும் வெளியே எங்கோ தொலைதூரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய டைரியில் தங்கள் மகனின் "ஸ்கைப்" முகவரியை எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் பேரன் கடந்த முறை ஊருக்கு வந்திருந்தபோது என்னுடைய இணைய மையத்தில்தான் அவர்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியினையும், "ஸ்கைப்" முகவரி ஒன்றினையும் தோற்றுவித்துக் கொடுத்திருந்தான். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் அவனோடு பேசுவதற்காகவே உயிரினைச் சுமந்து கொண்டிருப்பதாக என்னிடம் ஒருமுறை அந்த முதியவர் சொன்னார்.
கணினிமுன் அமர்ந்து தங்கள் வாரிசோடு பேசி முடித்து வெளியே வரும்போதெல்லாம், அவர்கள் கண்களின் ஆழத்தில் நீர் வற்றிப் போயிருக்கும் சுனை ஒன்று தென்படும்.
என் கதைக்கு வருகிறேன். எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. விண்ணப்பங்கள் அதிகம் வந்து கொண்டிருந்தன. நீண்ட தேடுதலுக்குப் பின், ஒரு பெண் கிடைத்திருக்கிறாள். பெயர், கோமதி. பேசிப் பார்த்தோம். என்னை அவளுக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் இல்லாத மதி அவளிடம் இருப்பதாலேயே அவளை எனக்குப் பிடித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதத்திற்குள் திருமணம் என்று பேசியிருக்கிறது. தேனிலவுக்கு சிங்கப்பூருக்குத் தான் வரப்போகிறோம். நான் வருவது தெரிந்து , விடுப்பு எடுத்துக்கொண்டு எங்கேயும் ஓடிவிடாதே.
நண்பன்,
சத்திய சீலன்.
பாப்பநாயக்கன்பாளையம்.
கோயம்புத்தூர்.
ஏப்ரல் 2012
*********
வெகு காலத்திற்குப் பின் அதிகாலையில் எழும் கணவனை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பானு. முதலில் அவள் அக்காட்சியைத் தான் அதுவரை கண்டுகொண்டிருந்த கனவின் நீட்சியாகத்தான் நினைத்தாள். ஆனால் அவசர அவசரமாக அவன் பாத்ரூமிற்கும் ஹாலுக்கும் இடையில் புழங்கிய சப்தம் கேட்டு குழந்தை விழித்துக் கொண்டு அழ ஆரம்பித்ததும்தான், தான் ஒருபோதும் நம்பவே முடியாத ஒரு காட்சியின் சாட்சியாக இருப்பதை உணர்ந்தாள்.
ஒருநாளும் இல்லாத திருநாளாக தன் கணவன் அதிகாலையில் எழுந்து கொண்டு வீட்டைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவளுக்கு அன்று ஏதோ அபகீர்த்தி நேரப்போகிறது என்று தெரிந்தது. என்ன ஒரு துர்ச்சகுனம் என்று எண்ணிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.
குழந்தையை மடியிலிட்டுத் தாய்ப்பால் புகட்டினாள். உணவைக் கண்டதும் உயிர்களுக்கே ஏற்படும் ஒரு துள்ளலுடன் ஆவேசமாகப் பாலைப் பருகியது குழந்தை.
என்னத்துக்கு ஞாயத்துக் கிழமையுமதுவுமா இப்படிக் காலங்காத்தால எந்திருச்சு வீட்டுக்குள்ள ஜாக்கிங் போயிட்டிருக்கீங்க? என்று ஆரம்பித்தாள்.
வள்ளியப்பன் எதுவும் பேசவில்லை. நெஞ்சுக்குள் பொங்கிவரும் துக்கத்தை அடக்குவதிலேயே அவன் தன்னுடைய ஆற்றலின் பெரும்பகுதியைச் செலவிட்டுக் கொண்டிருந்தான். நெருப்பு அணைந்து விட்டாலும் காற்று பட்டு உயிர்த்தெழும் தீக்கங்கு போல அவன் மனம் தன் துக்கத்தை முகத்தில் காட்டிக் கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து தன் நண்பனின் மின்னஞ்சல் படித்ததிலிருந்து அவன் மனம் துயரத்தின் நெடுங்கதவத்தைத் தட்டத் துவங்கி விட்டிருந்தது.
அவளுக்கு பதில் சொல்லாமல் மெளனமாகத் தன்னுடைய சூட்கேஸில் பாஸ்போர்ட்டையும் உடைகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
தன்னுடைய கணவனின் உடல்மொழி பானுவுக்குப் பீதியைக் கிளப்பியது. இவர் இயல்பாக இருந்தாலே சிங்கப்பூர் தாங்காது. இன்று ஏனோ சோகமாக  இருக்கிறார். இந்த அதிகாலையில் எங்கோ கிளம்பிக் கொண்டு வேறு இருக்கிறார்.
தன் மடியில் இருந்த குழந்தையைப் பார்த்தாள். அதுவோ, பால் குடித்து விட்டதே பெரிய சாதனை என்றெண்ணி அலுப்பினில் தூங்கிப் போயிருந்தது. குழந்தையை மெல்ல படுக்கைக்கு அருகில் இருந்த தொட்டிலில் கிடத்தி விட்டு, கணவனின் அருகில் வந்தாள்.
என்னாச்சுங்க உங்களுக்கு இன்னைக்கி. சங்கடமாவே இருக்கீங்க. என்ன விஷயம்னு சொன்னாத்தானே தெரியும்.
வள்ளியப்பன், தன்னையே பார்த்து நிற்கும் மனைவியைத் தன்னருகே இழுத்துக் கொண்டான். சில விநாடிகள் தழுவி நின்றதில், அவள் உடலில் இருந்து கொஞ்சம் தைரியத்தைப் பெற்றுக் கொண்டான். பின் மெதுவாகச் சொன்னான்.
சத்திய சீலனுக்கு ஒரு பிரச்சனை. கோயம்புத்தூருக்கு போயிட்டு நாளைக்கே திரும்பி வந்துர்றேன்.
இப்போது அவனது துயரம் அவளுக்கானதாக மாறியது.
என்ன பிரச்சனை அவருக்கு?
அவன் தொழிலே நடத்த முடியாத அளவுக்கு ஒரு பிரச்சனை. மீதியை நான் திரும்பி வந்ததும் சொல்றேன். அவனுக்கு பிரச்சனை வந்தா அழத்தான் தெரியும். அதுல இருந்து வெளிவரத் தெரியாது. நான் போனா அவனுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும், என்றான்.
அவள் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் வராது என்று தெரியும்.
தழுவி நின்ற, அவர்கள் இருவரின் உடலுக்கு நடுவினில் சில நிமிஷங்கள் புகுந்தோடின.
முடிவில் பானு கேட்டாள், நாளைக்கே கண்டிப்பா வந்துடுவீங்கல்ல?
கண்டிப்பா வந்துடுவேன் என்று சொல்லிவிட்டு, தன் குழந்தைக்கருகே சென்று அதனைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்துக்கே கேட்காதவாறு மெல்லிய முத்தம் ஒன்றை ஈந்தான்.
பானு சமையலறைக்குள் போய் வேகமாக ஒரு காபி போட்டுக் கொண்டு வந்தாள். மனைவியின் காபி வள்ளியப்பனின் உதடுகளை நனைத்துக் கொண்டிருந்தபோது, அவன் மனம் ‘கோபிடியத்தை’யும், டென்னிஸ் லிம்மையும் ஒரு கணம் தொட்டு மீண்டது. பானுவிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டு அவளை மீண்டுமொருதரம் அணைத்து விடைப்பெற்று வெளியேறுகையில் வைகறையின் அரைவெளிச்சம் அவர்கள் வீட்டுக் கதவிடுக்கில் வழிந்து கொண்டிருந்தது.
கதவைத் தாழிட்டுவிட்டு பானு மீண்டும் கட்டிலில் வந்தமர்ந்தாள். பிரிவென்னும் வாதை அவளை வதைத்துக் கொண்டிருந்தது. இந்த அதிகாலையில் தன் கணவன் எழுந்து இந்தியாவிற்கு செல்ல வேண்டுமென்றால் விஷயம் மிகவும் சிக்கலானதாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்தாள்.
சத்திய சீலனுக்கு அப்படி என்னதான் பிரச்சனை இருக்க முடியும்? அதிகாலையில், வாடிய முகத்தோடு, ஒரு காபி மட்டுமே குடித்துப் போன கணவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகளாவது பேசியிருந்திருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றியபோது திடீரென்று தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. அவள் கண்களில் பொங்கிய கண்ணீரை அறையின் குளிர்ந்த சுவர்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
வெகு நேரம் கழித்து அறைவிளக்கை அணைப்பதற்காக எழுந்து ஸ்விட்சின் அருகே வந்தபோது, ஹாலில் தனது கணவனின் மடிக்கணினி மூடப்படாமலே இருந்ததைக் கவனித்தாள். அதனை மூடுவதற்காக வந்தவளை , அவன் சற்றுமுன் வாசித்துப் போயிருந்த மின்னஞ்சல் வரவேற்றது. சத்திய சீலன் வள்ளியப்பனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் அது. பொறுமையாக அதை வாசிக்க ஆரம்பித்தாள் பானு.

அன்புள்ள வள்ளியப்பன்,
எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நான் ஒரு சிக்கலில் மாட்டிகொண்டேன்.
இணையத்தின் மீதான என்னுடைய மூர்க்கமான காதலை நீ அறிந்தவன்தான். ஆனால் இதுவரை நான் கண்டிராத ஒரு முகமும் இணையத்திற்கு இருக்கிறது என்று கடந்த பத்து நாட்களாய் நடந்து வருகிற சம்பவங்கள் எனக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. என்னை வாழ்வில் மேலேற்றிய ஏணி என்றுதான் இணையத்தை நினைத்திருந்தேன். ஆனால், அது இருபக்கமும் கூர்மையான கத்தி என்பதும், சூடான ரத்தம் வேண்டி பசித்தலையும் ஒரு வனமோகினி என்பதையும் நான் இப்போதுதான் அறிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன்.
கடந்த பத்து நாட்களாக தேசம் முழுதும் என் இணைய மைனா தன் சிறகுகளைப் படர விட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்கிறேன். எவனோ ஒருவன் என்னுடைய இணைய மையத்தில் இருந்து இந்திய ஜனாதிபதிக்கு மிரட்டல் ஈமெயில் அனுப்பியிருக்கிறான். விளைவாக, ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் ஈட்டி முனைகளும் என்னுடைய இடுப்புக்குக் கீழே குறி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
மிரட்டல் ஈமெயில் கடந்த வாரம் வெள்ளியன்று காலையில் அனுப்பப்பட்டிருக்கிறது. ஐ.பி. முகவரியை வைத்து அந்த ஈமெயில் என்னுடைய இணைய மையத்திலிருந்துதான் அனுப்பப்பட்டது என்று கண்டுபிடித்து விட்டார்கள்.
அதன் பிறகான இரண்டு நாட்களில் என்னை மட்டுமல்லாது என் கடை இருக்கும் தெருவையே தனிமைப்படுத்தி விட்டார்கள் காவல்துறையினர். 'சைபர் கிரைம்' அதிகாரிகள் மூன்று பேர் சென்ற வாரம் முழுதும் என்னுடன்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இரவும் பகலுமாய் என்னிடம் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். “ஈமெயில் அனுப்பியவன் யார்? அவனுக்கும் உனக்கும் என்ன உறவு”. என்று சொல்லிவிட்டால் விட்டுவிடுகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கேள்விகள் இதுவரை என்னிடம் கேட்டிருப்பார்கள். ஒரு ஆட்டுக்குட்டியிடம் ஐன்ஸ்டீன் பற்றிக் கேட்டால் என்ன தெரியும்.
ஒரு கட்டத்தில் நான் ஒரு தீவிரவாதி என்று முடிவு கட்டி விசாரணையை "வேறு" கோணத்தில் நடத்தத் துவங்கினார்கள். என் சுட்டு விரலை நசுக்கினார்கள். என்னைத் தூங்க விடாமல் ஒரு இரவு முழுதும் கமிஷனர் அலுவலகத்தில் வைத்திருந்தார்கள். ஒரு போன் செய்து பேசக்கூட அனுமதிக்கவில்லை.
என்னை விடவும் என் குடும்பம்தான் இந்த ஒரு வாரமாக நிலைகுலைந்திருக்கிறது. என்னை அவர்கள் கண்ணால் பார்த்ததே நான்கு நாட்கள் கழித்துத்தான். நான் கிட்டதட்ட பைத்தியமாகும் மனநிலைக்கு மிக அருகில் செல்வதும் மீள்வதுமாக இருந்தேன். சொன்னால் நம்ப மாட்டாய். நான் கமிஷனர் அலுவலகத்திலேயே இறந்து விடுவேன் என்று நம்பத் துவங்கி விட்டேன்.
உன்னையும் என் குடும்பத்தையும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல நழுவத் துவங்கியிருந்தது. வெப்பமிகுந்து புழுக்கமேறி இருந்த அந்த மூடிய விசாரணை அறையில் சாவதைக் காட்டிலும் ஒரு துண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு திறந்த வெளியில் இறந்தாலே போதும் என்பதே என்னுடைய கடைசி ஆசையாக அதிகாரிகளிடம் சொல்ல நினைத்திருந்தேன்.
கரிய இருளில் அடியற்ற பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்த என்மேல் வெளிச்சத்தின் கீற்று என்னுடைய வக்கீலின் மூலமாக விழுந்தது. நாட்கள் செல்லச் செல்ல காவல்துறையினரும் என்மேல் நம்பிக்கை இழந்து இவன் ஒரு "டம்மி பீஸ்" என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள் போலும். விசாரணைக்கு கூப்பிடும்போதெல்லாம் வரவேண்டும் என்ற நிபந்தனையோடு என்னை வெளியே விட்டார்கள்.
என் பெற்றோரோடும் வக்கீலோடும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கோப்பைத் தேநீர் குடிக்க நாவு துடித்துக் கொண்டிருந்தது. தேநீர் குடித்துக்கொண்டே கண்ணெதிரே விரிந்திருந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எண்ணற்ற சக்கரங்களால் இயங்கிக் கொண்டிருக்கிற இந்த உலகம் தன்னுடைய ஒளிமிகுந்த பகுதிக்கு என்னை வரவேற்பது போலிருந்தது.
இந்த விவகாரங்களையெல்லாம் உன்னிடம் ஏன் தெரியப் படுத்தவில்லை என்று நீ என்மேல் கோபப்படாதே. நான் இருந்த நிலைமையில் நான் யாரிடம் பேசினாலும், அவர்களுக்கும் ஆபத்து காத்திருந்தது. இப்போதும் என்னுடைய நடவடிக்கைகளை யாரோ ஒரு போலீஸ்காரர் ' ப்டியில்' கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடும். எல்லா களேபரங்களும் முடிந்த பிறகு வேறொரு இணைய மையத்திலிருந்து உனக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புகிறேன்.
இப்போது எனக்கு யார் மீதும் கோபமில்லை. என்னுடைய இணைய மையத்திலிருந்து ஜனாதிபதிக்கு மிரட்டல் ஈமெயில் அனுப்பியவன் மீதோ, என்னை வறுத்தெடுத்த போலீஸ் மீதோ கூட எனக்கு கோபமில்லை. ஆனால், என்னை சகல கோணங்களில் இருந்தும் நிராகரித்த இந்த சமூகத்தின் மீதுதான் வருத்தமாக இருக்கிறது. என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடிய வணிகர் சங்கமோ, மற்ற நண்பர்களோ, வாடிக்கையாளர்களோ எனக்கு ஆறுதல் சொல்லக் கூட வரவில்லை. என்னைப் பார்த்தாலே நழுவி மறைகிறார்கள். புறக்கணிப்பின் வலியை விழுங்கிக் கொள்ள முடியவில்லை. கடைத் தெருவிற்கு போகவே பிடிக்கவில்லை. கோமதி குடும்பம் கூட எங்களிடம் முன்பு போல பேசுவதில்லை. கோமதிக்கு என் நிலைமையை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.   
என் இணைய மைனாவை இனியும் நான் தொடர்ந்து நடத்தப் போவதில்லை. இணையம் என்ற இனிய யட்சிதான் இதுவரை மைனா ரூபத்தில் என்னுடனேயே இருந்து முடிவில் என் ரத்தத்தை ஒரு துளி மிச்சமின்றிக் குடித்துவிட்டாளோ என்று தோன்றுகிறது. நரகத்தின் தலைவாசலைத் தொட்டு மீண்டவன் என்ற முறையில் சொல்லுகிறேன், இனி இந்த இணைய உலகில் இருந்து என்னை நானே துண்டித்துக் கொள்வதுதான் உத்தமம். மின்னஞ்சல் கூட இனி நான் அனுப்பப் போவதில்லை. என் இணைய மைனா எங்கோ வெகு தூரத்தில் , காட்சிகளுக்கெட்டாத தொலைவில், வெண்மேகங்கள் விரிந்திருக்கிற வான் வெளியில் தன் வலிய சிறகுகளை அசைத்து மேகப் பொதிகளினூடாக இலக்கற்று சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்.
ஏனோ, உன்னை பார்க்க வேண்டும் என்றுதான் மனம் ஒருகணம் ஏங்குகிறது.
நண்பன்,
சத்திய சீலன், 
பாப்பநாயக்கன்பாளையம்.
கோயம்புத்தூர்.
ஆகஸ்ட் 2012.
(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக