வியாழன், 5 நவம்பர், 2015

பின் நவீனத்துவம் –ஓர் அறிமுகம்


பின் நவீனத்துவம் என்பது ஒரு உத்தியோ, ஒரு இலக்கிய வகைமையோ அல்லது ஏதோ ஒரு “இஸமோ” அல்ல. அது தற்காலத்தில் புழங்கி வரும் ஒரு இலக்கியப் போக்கு(Trend). பின் நவீனத்தைப் புரிந்து கொள்வதற்கு முன், நவீனத்துவம் பற்றிய புரிதல் மிக அவசியம். கவிதையில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை என்ற வடிவங்கள் இருப்பது போல உரைநடையிலும் பல கூறுகள், கோட்பாடுகள் இருக்கின்றன. இவை காலத்திற்குத் தகுந்தவாறு மாறிக்கொண்டே இருக்கும்.

படைப்பாளி எப்போது எழுதத் தொடங்குகிறானோ அப்போதே மரபின் துருவேறிய பகுதிகள் உதிரத் தொடங்குகின்றன. அவன் தன் முதல் கதையிலோ கவிதையிலோ கூட மரபை மீறும் ஒரு ஆவேசத்தைதான் முன்வைக்கிறான். தன் சமூகம் தன் முன் வைக்கும் நம்பிக்கைகள், மேன்மைகள், புனிதங்கள் எல்லாமே அவனுடைய படைப்பில் தூசுதட்டப் படுகின்றன. கேள்வி கேட்கப்படுகின்றன. அவ்வகையில், தமிழின் முதல் நாவலான மாயூரம் வேத நாயகம் பிள்ளையின் “பிரதாப முதலியார் சரித்திரமும்” சரி, முதல் சிறுகதையான வ.வே.சு ஐயரின் “குளத்தங்கரை அரசமரமும்” சரி, சமூகத்தின் அதுவரையிலான அற்ப நம்பிக்கைகளையும் பொய் விழுமியங்களையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகின்றன.

நவீனத்துவத்திற்கான விதை இங்கே துவங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க ஒரு அலை கிளம்பியது. அந்த அலை அதுவரை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனை செய்தது. எல்லாத் துறையிலும் இந்த அலையைத் துவக்கி வைத்த முன்னோடிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நவீன தலைமுறை நன்றிக்கடன் பட்டிருக்கிறது.   இந்து மதத்தில் நிலவிய மூடப் பழக்கங்களைக் களைந்து, அதனை நவீனப்படுத்தியவர்கள் என்று சுவாமி விவேகானந்தர் துவங்கி பலரைச் சொல்ல முடியும். சமூக தளத்தில் நிலவிய பல கண்மூடி வழக்கங்களைக் களைந்து (இன்றளவும் முழுமையாகக் களைய முடியவில்லை என்பது வேறு விஷயம்) சமூகத்தை நவீனப்படுத்திய சான்றோர் என ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்களைச் சுட்டலாம். அதுபோல், கல்வி, மருத்துவம் முதலான பல துறைகளையும் நவீனமயமாக்க முன்முயற்சி எடுத்த பல சான்றோர்கள் இருக்கிறார்கள். இந்த முன்னோடிகள் யாவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

உலக இலக்கியத்திலும் ஏறக்குறைய இந்த காலகட்டத்தில் நவீன மறுமலர்ச்சி ஏற்பட்டது. உலக அளவில் சிறுகதைகளில் நவீனத்துவத்தை முன்னெடுத்தவர் என்று “சிறுகதைகளின் பிதாமகன்” ஆண்டன் செக்காவைச் சொல்லலாம். நாவல்களில் பால்சாக், சார்லஸ் டிக்கன்ஸ், ஜாக் லண்டன் போன்றோர் நவீனத்துவ முன்னோடிகள். (தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி இருவரையும் நவீனத்துவ முன்னோடிகள் வரிசையில் சேர்க்க நான் விரும்பவில்லை, அவர்கள் அப்போதே பின் நவீனத்துவக் கூறுகளை தங்கள் எழுத்துகளில் கொண்டுவந்து விட்டார்கள் என்று நான் நம்புகிறேன்)

உலக இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் இருபதாம் நூற்றாண்டு நவீனத்துவத்தின் உச்சம் என்றானது. தமிழ்க்கவிதையில் பாரதி கிளப்பிய அலையின் வீச்சு தமிழ் வாசகனை சுருட்டி வேறொரு உயரத்திற்கு எறிந்தது. உரைநடையில் அந்த வேலையைச் செய்தவர் புதுமைப்பித்தன்.
நவீனத்துவத்தின் மிக முக்கியமான கருவிகள்: அறிவியல் (புதிது புதிதாகக் கண்டுபிடித்து புழக்கத்திற்கு வந்த அறிவியல் கருவிகள்), நவீன ஆங்கில மருந்துகள், தொழிற்சாலைகள், மேம்படுத்தப்பட்ட கல்வி, போக்குவரத்து போன்றவை. இவை யாவும் அதுவரை இருந்த சமூக யதார்த்தத்தை மாற்றின. இதே கருவிகள் இலக்கியத்திலும் பயன்படுத்தப்பட்டு சமூகத்தின் சிந்தனை முறையை மாற்றியமைத்தன. “முற்போக்கு”, “நவீனத்துவம்” போன்ற புதிய சொற்கள் தமிழுக்குக் கிடைத்தன. பேச்சு வழக்கில் “அதாவது... சயன்டிபிக்கா பாத்தா....” என்று யாராவது பேசத் தொடங்கினால் சுற்றியுள்ளவர்கள் கவனிக்கத் துவங்கினர்.

புதுமைப்பித்தனில் தொடங்கிய நவீனத்துவம், சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே.சில குறிப்புகள்” நாவலில் முழுமையடைந்தது. “ஜே.ஜே. சில குறிப்புகள்” நவீனத்துவத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய அதே வேளையில், ஒருவகையில் பின்நவீனத்துவத்திற்கு, நவீனத்துவத்தின் கதவுகளைத் திறந்து வைத்ததே “ஜே.ஜே.சில குறிப்புகள்” தான் என்று சொல்லத் துணிவேன். அந்த நாவலின் அழகும், கம்பீரமும், முன்னறியப் படாத வடிவமும் இன்றும் ஒரு இலக்கிய வாசகனுக்கு அது அளிக்கும் வாசிப்பு அனுபவமுமே சாட்சி.

புதுமைப்பித்தன் தன் முன்னிருந்த சமூகத்தின் மனசாட்சியைத் தன் எழுத்தின் மூலம் இடையறாது தொந்தரவு செய்தார். அவரது நவீனத்துவ பேனாதான் தமிழ் இலக்கியத்தை வேறு திசையில் மடை மாற்றியது. “பொன்னகரம்”, “மகாமசானம்”, “நிகும்பலை”, “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” போன்ற கதைகள் நவீனத்துவத்தின் தீப்பொறிகள். இதனைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சா.கந்தசாமி, கி.ராஜநாராயணன், வண்ணநிலவன் போன்றோர் நவீனத்துவத்தை முன்னெடுத்தனர்.

நவீனத்துவத்தின் ஒரு கூறாக யதார்த்தவாதம்(Realism) எழுந்தது. “உள்ளது உள்ளபடியே” என்பதே இதன் கொள்கை. எமிலி ஜோலாவின் புகழ்பெற்ற வாசகம் “ A Slice of Life” என்பதன் தமிழ் எதிரொலி. இந்த கூற்றின்படி, உள்ளது உள்ளபடியே, கண்டதைக் கண்டபடியே சொல்வது என்ற முறை உருவானது. அதாவது, யதார்த்தவாதக் கதைகள் வாழ்வின் ஒரு துண்டை வெட்டி எடுத்து வாசகன் முன் ரத்தமும், சதையுமாகத் துடிக்கத் துடிக்க முன்வைப்பது. இந்த விதியின்படி, ஒரு கதாபாத்திரத்தின் குண இயல்புகளை அதன் ஒரு செயல் மூலமோ, அது பேசும் முறையின் மூலமோ, அது பார்க்கும் காட்சியின் மூலமோ எழுத்தாளர் உணர்த்திவிடுவார். “Minimalism” என்ற ஆங்கிலப் பதத்தின் செயல் வடிவம். மேலதிக கற்பனைக்கு இடம்கொடுக்காமல், ஒரு பொருளையும், காட்சியையும் அப்படியே குறைந்த சொற்களில் (எந்த அளவிற்குக் குறைக்க முடியுமோ அந்த அளவிற்குக் குறைத்துவிடுவது – தற்போதுள்ள தமிழ் குத்துப்பாடல் நடிகைகளின் உடை போல) சொல்லுவது. இன்னும் சொல்லப் போனால், “காட்டுவது”. வாசகன் தன் கற்பனை மூலம் தான் வாசிக்கும் பிரதியை விரிவு செய்யவே இடமளிக்காமல், ஆவண நடையில் எழுதப்படும் பிரதிகள் இவை. அதனால்தான் பெரும் நாவல்களாக விரியக்கூடிய ஹெமிங்வேயின் “கிழவனும் கடலும்”, சுந்தர ராமசாமியின் “புளிய மரத்தின் கதை”, வண்ணநிலவனின் “கடல்புரத்தில்” போன்ற நாவல்கள் ரியலிஸ சல்லடைகளில் சிக்கி பாதி மலர்ந்த மலர்களாக நின்று விடுகின்றன.

நவீனத்துவத்தின் முக்கியத் தன்மைகள், ஒருமைப்படுத்துதல் (Univalent), மையப் படுத்தல் (இந்தப் படைப்பின் திரண்ட கருத்து யாது என்று பள்ளி, கல்லூரிகளில் இலக்கியப் படைப்புகள் குறித்து கேட்கப்படும் அபத்தமான கேள்விகள் இதிலிருந்துதான் தோன்றியிருக்குமோ?), திட்டமிட்ட வடிவம், குறிப்பிட்ட நோக்கம் போன்றவை. பின் நவீனத்துவம் இதற்கு நேரெதிர் கூறுமுறை. கிட்டத்தட்ட புதுக்கவிதைக்கும், நவீன கவிதைக்கும் உள்ள வேறுபாடுதான் (கிட்டத்தட்ட என்ற வார்த்தையைக் கவனிக்கவும், இதையே முழு முடிவாகக் கொள்ளக் கூடாது).

ஆனால், நவீனத்துவத்தின் முக்கியத் தன்மையான மையப்படுத்துதல், ஒருமை போன்றவை வாசகனின் அடிப்படைக் கற்பனைக்கே வேலையில்லாமல் செய்து விடுகிறது. எழுத்து என்பது இரண்டு விதமான அடிப்படைத் தன்மைகள் கொண்டதாக இருக்கிறது. வாசிப்புத்தனம் (Readerly), எழுத்துத்தனம் (Writerly). வாசிப்புத்தனம் என்பது ஒரு பிரதியில் உள்ள மொழி எந்த அளவுக்கு யதார்த்தமாக இருக்கிறது என்பது. எழுத்துத் தனமோ எழுதுபவனின் சுயப் பிரக்ஞை சார்ந்தது. ஆக, ஒரு பிரதியைப் படிக்கும்போது இரண்டு விதமான அர்த்தங்கள் கிடைக்கின்றன. ஒன்று, பிரதியில் கிடைக்கும் அர்த்தம். இன்னொன்று, வாசகன் புரிந்து கொள்ளும் அர்த்தம். ஆக, ஒரு பிரதியில் குறைந்தது இரண்டு வித அர்த்த சாத்தியங்கள் இருக்கும்போது மையப்படுத்துதலும், ஒருமைப்படுத்துதலும் எங்ஙனம் சாத்தியம். பின் நவீனத்துவம் பிறப்பது இங்கேதான்.



ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்: சுந்தர ராமசாமியின் “புளிய மரத்தின் கதை” நவீனத்துவ நாவல். கிராமத்தின் நடுவில் உள்ள ஒரு புளிய மரம். அந்த மரத்தின் அருகாமையில் பேருந்து நிறுத்தம், கடைகள் போன்றவை. கிராமம் மெல்ல மெல்ல ஓரு சிறுநகரமாக மாறத் துவங்குகிறது. ஆனால், நகர விரிவாக்கத்திற்கும் சுய லாபத்திற்கும்  பெரும் முட்டுக்கட்டையாக ஒரு புளிய மரம் நிற்கிறது. ஆகவே, அதை வெட்ட வேண்டும் என்று கிளம்பும் ஒரு கும்பல். அந்த மரம் காலம் காலமாக அங்கே நின்றிருக்கிறது. ஆகவே, அதை வெட்டக் கூடாது என்று தடுக்கும் ஒரு கும்பல். கடைசியில், எதிர்பாராத முறையில் அந்த மரம் இறக்கிறது. இந்தப் புளிய மரம் சமூக மாற்றத்திற்காக நாம் கொடுக்கும் விலைக்கான குறியீடாக நாவலில் வருகிறது. கிட்டத்தட்ட இந்த நாவலுக்கு இணையாக சா.கந்தசாமியின் “சாயாவனம்” நாவலைச் சுட்டலாம். இந்த இரண்டு நாவல்களிலும், நாவல் வடிவம் கச்சிதமாக, குறைந்த சொற்களில், Slice of Life ஐக் காட்டக்கூடிய, ஒருமைத் தன்மையும், திட்டமிட்ட வடிவ ஒழுங்கும், மையமும்,குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதை வாசகன் உணரலாம்.



தொண்ணூறுகளில் எழுதப்பட்ட ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” மேற்சொன்ன எந்த வடிவ ஒழுங்கும் அற்றது. நாவலின் மொழி கச்சிதமான, குறைந்த சொற்களில் சொல்லப்பட்டதல்ல. மாறாக, கட்டற்றுப் பாய்வது. கரையை நிறைத்து, சில சமயம் கரையை மீறி வழியும் ஆற்று நீர் போல, கிடைத்த இடைவெளிகளில் திமிறிப் பாயும் மொழி. நாவலின் வடிவம் நெடுஞ்சாலை போல துல்லியமானதல்ல. காட்டுச் செடிகளின் வழியே செல்லும் ஒற்றையடிப் பாதை போன்றது. வடிவமற்ற வடிவம் கொண்டது. துண்டாடப்பட்டு, முன்னும் பின்னும், ஜெயித்தும் தோற்றும் அலையும் வடிவம், நாவலில் மையம் மற்றும் திட்டமிட்ட நோக்கம் என்று ஒன்றும் இல்லை. கற்பனையால் இந்திய ஞான மரபையும், அதன் செழுமையையும், காவிய தரிசனங்களையும் ஒருசேர அள்ள முயல்வது. அதே சமயம் அதன் அழகின்மையையும், அபத்தத்தையும் சொல்லி உடைத்துப் போடுவது. வாசகனையும் எழுத்தாளனுக்குச் சமானமாய் இயங்க வைப்பது. வாசக உழைப்பைக் கோருவது. பன்முக அர்த்த தளங்களை விரித்தெடுப்பது. பின் நவீனத்தின் கிட்டத்தட்ட அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய நாவல். இந்த நாவலுக்குப் பின்தான், இனிமேல் வாசகன், கட்டிலில் குப்புறப் படுத்துக்கொண்டே, வாயில் எதையாவது போட்டு மென்றுகொண்டே ஒரு இலக்கியப் படைப்பை படிக்க முடியாது என்ற நிதர்சனம் உருவானது.
சிறுகதையில் இதற்கிணையான கதைகளாக, பிரேம்-ரமேஷின் “கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்”, கோணங்கியின் “பாதரஸ ஓநாய்களின் தனிமை”, எஸ். ராமகிருஷ்ணனின் “தாவரங்களின் உரையாடல், நாளங்காடி பூதம்”, ஜெயமோகனின் “படுகை”, முருக பூபதியின் “சின்னமனூர் சர்க்கஸ்காரி”, யுவன் சந்திரசேகரின் “நான்காவது கனவு”, பவா செல்லத்துரையின் “பச்சை இருளன்” போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நவீனத்துவம், ஒரு பெரியவர் மிக கவனமாக அடுக்கிவைத்த சீட்டுக்கட்டு போன்றது. பின் நவீனத்துவமோ ஒரு சிறுவன் விளையாட்டாக கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டு. தன் குழந்தைக்கு தலையில் எண்ணெய் வைத்து, படிய சீவி, அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்பும் அம்மா நவீனத்துவத்தின் பிரதிநிதி என்றால், அம்மாவுக்கு கைகாட்டிவிட்டு பள்ளி செல்லும் வழியில் தன் தலைமுடியைத் தானே கலைத்துக் கொள்ளும் குழந்தை பின் நவீனத்துவத்தின் பிரதிநிதி. நவீனத்துவத்தின் சிக்கல்களை மறுபரிசீலனை செய்து கொண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதே பின் நவீனத்துவம். நவீனத்துவத்தின் பார்வையில் சிக்காத அல்லது நவீனத்துவம் கண்டு கொள்ள மறந்த அம்சங்களை அல்லது நவீனத்துவத்தின் விளைவால் உருவான சீர்கேட்டைத் தன் போக்கில் அவதானித்து, பரிசீலனை செய்து வளர்ந்ததே பின் நவீனத்துவம்.

மீண்டும் ஒரு எளிய உதாரணம் வழியாக இதைப் புரிந்து கொள்ளலாம்:  ஜாக்கி ஜானின் திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு பார்வையாளன் படம் முடிந்தவுடன், படம் முடிந்தது என்ற உணர்வை அடைந்து தன் இருக்கையிலிருந்து எழப்போகும் சமயம், “Making of the film”  அவன் முன் விரியும். படப்பிடிப்பில் ஜாக்கி ஜானும் அவர் குழுவும் பட்ட அவஸ்தைகள், வேடிக்கைகள் என அனைத்து இன்பதுன்பங்களும் கோர்வையாக இல்லாமல் முன்பின் சிதறடித்துக் காட்டப்படும் அந்த காட்சிகள் பார்வையாளனுக்கு ஓட்டு மொத்த படமும் காட்டிய சித்திரத்திற்கு இணையான அல்லது அதையும் மீறிய உணர்வெழுச்சியைத் தரும். ஜாக்கி ஜானின் படம் நவீனத்துவம் என்றால் படம் முடிந்தபின் தோன்றும் படப்பிடிப்புக் காட்சித் துணுக்குகள் பின் நவீனத்துவம் என்று சொல்லலாம். இந்த உதாரணங்கள் யாவும் பின் நவீனத்துவத்தை எளிதாக புரிந்து கொள்வதற்காகவேயன்றி அதன் அர்த்தத்தை சுருக்கி எளிமைப்படுத்துவதற்காக அல்ல.

தமிழில் பின் நவீனத்துவம் எண்பதுகளின் இறுதியில் கிட்டத்தட்ட சோவியத் ரஷ்யா உடைந்தபின் பரவலாக வளர்ச்சியடைந்தது. பின் நவீனத்துவ யுகம் மலர்ந்தது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழவன் மற்றும் நாகார்ச்சுனன் போன்றோர் பின் நவீனத்துவம் பற்றிய அறிமுகத்தை உருவாக்கினர். ஆனால், அவர்களின் பிரதிகள் உண்மையில் பின் நவீனத்துவப் பிரதிகள் அல்ல. பிரேம் ரமேஷின் “முன்னொரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன” போன்ற சிறுகதைத் தொகுப்புகளே பின் நவீனத்துவ பிரதிகளாக அடையாளம் கொள்ளத்தக்கன. பின் நவீனத்துவம் பற்றிய அறிமுகத்தை பிரேம்-ரமேஷ், ஜெயமோகன், எஸ். ராமக்கிருஷ்ணன் முதலிய எழுத்தாளர்களின் கட்டுரைகள், முக்கியமாக எம்.ஜி.சுரேஷ் (பின் நவீனத்துவம் பற்றிய பல்வேறு அறிதல்களை நான் இவரது கட்டுரைகளின் வழி பெற்றேன்), க.பூர்ணசந்திரன் போன்றவர்களின் கட்டுரைகள், அறிமுக வாசகர்களுக்கு இன்றியமையாதவை.



பின் நவீனத்துவப் படைப்புகளின் முக்கிய அம்சங்கள்: முன்பின் மாற்றிச் சொல்லுதல்(Non-Linear – ஜெயமோகனின் “காடு” நாவல்), கட்டுடைத்தல் மற்றும் துண்டாடப்பட்ட அத்தியாயங்கள்  (De-construction and Fragmentation, ஜெயமோகனின் “பின்தொடரும் நிழலின் குரல்),  தெளிவற்ற வடிவம் ( Obscure layout – கோணங்கியின் “இருள்வ மௌதீகம்”), மீ மொழிபு (Meta fiction – எஸ்.ராமகிருஷ்ணனின் “உபபாண்டவம்”), அதிகதை மற்றும் மாய யதார்த்தம் (Modern Fables and Magical realism – எஸ்.ராமகிருஷ்ணனின் “வெயிலைக் கொண்டு வாருங்கள்”) , விரிவாகச் சொல்லுதல் ( Maximalism – ஜெயமோகன் - வெண்முரசு).

நவீனத்துவத்தின் எல்லைகள் மற்றும் போதாமை காரணமாக அதனிலிருந்து முளைத்த மற்றொரு கூறே பின் நவீனத்துவம். உதாரணமாக, நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான “மையப்படுத்துதல்” என்பது அதிகாரத்தின் முகமாக ஒரு கட்டத்தில் மாறத் துவங்குகிறது. அதிகாரத்தின் கூர்மையான நகங்களுக்குள் சிக்கிக் கொண்ட விளிம்பு நிலை மக்களின் கதை அங்கே கவனிக்கப்படாமல் ஆகிறது. பின் நவீனத்துவம் இந்த மக்களைத் தத்தெடுத்துக் கொள்கிறது. இவர்களின் குரலைத் தங்கள் படைப்புகளாக ஆக்குகிறது.

நவீனத்துவத்தின் மற்றொரு அம்சமான “தொழில் வளர்ச்சி” மற்றும் “தொழிற் புரட்சி” என்பது ஒரு கட்டத்தில் ஒரு தேசம் இன்னொரு தேசத்தை விழுங்குவதற்கான முகாந்திரமாக மாறி முடிவில் இரண்டு உலகப்போர்களை உருவாக்கியது (தொழிற் வளர்ச்சியை இதற்கு முழுமுதற் காரணமாக சொல்வது விவாதத்திற்குரியது என்றாலும் போருக்கான மூல காரணிகளில் இது முக்கியமானது) .இந்த இடத்தில் தொழில் வளர்ச்சி என்பதன் பின்விளைவுகள் அதன் சாதகத்தோடு பாதகங்களையும் கொண்டு வந்திருப்பதின் அபத்தங்களை பின் நவீனத்துவம் குறித்துக் கொள்கிறது.

அதேபோல “மருத்துவம்” என்ற நவீனத்துவ அம்சம், பணம் வைத்திருப்பவர்களுக்காக மட்டுமே என்று மாறிப்போன ஒரு அபத்தநிலையையும் பின் நவீனத்துவம் ஒரு சங்கடமான புன்னகையுடன் குறித்துக் கொள்கிறது.

நவீனத்துவம் பெரிதும் சிலாகித்த ஜனநாயகம், சுதந்திரம், சோஷலிசம் போன்ற கருதுகோள்கள் தற்காலத்தில் எவ்வாறு பொருளிழந்து போய்விட்டன என்பதையும் பின் நவீனத்துவம் தன் படைப்புகளின் மையமாக ஆக்குகிறது. உடைந்த ரஷ்யாவுடன் தானும் கிட்டத்தட்ட காலாவதியாகி விட்ட சோஷலிசத்தின் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையும், ஜனநாயகம் என்பது சுதந்திர தினத்தில் மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்கப்படும் ஒரு தேய்வழக்காக (Cliche) மாறிப் போனதின் நிதர்சனமும் (உதாரணம்: ராஜீவ் காந்தியுடன் செத்துப் போன எத்தனையோ பொதுமக்களும், போலீஸ்காரர்களும் இன்றும் ஏன் அஞ்சலிக்குரியவர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை?  சுதந்திர போராட்டத் தியாகிகள் எல்லாம் செல்லாக் காசுகளாக கருதபடுவதன் காரணம் என்ன? வ.உ.சியின் வாரிசுகள் இன்றும் ஏன் வறுமையின் உச்சத்தில் இருக்கிறார்கள்? மாறி மாறி வந்த சுதந்திர அரசுகள் ஏன் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. மாறாக வ.உ.சியின் சிலைக்கு மட்டும் ஆடம்பரமான மாலைகளும், மேடைப் பேச்சுகளும் இத்யாதி இத்யாதிகளும்.. ராணுவ வீரர்களின் புல்லட் ப்ரூப்களின் உள்ள ஓட்டைகள் உண்மையில் ஜனநாயகத்தின் ஓட்டைகளா? அம்பானிகள் தங்கள் வீடுகளுக்கான மின்கட்டண நிலுவையாக லட்சக்கணக்கான ரூபாய்களைத் தள்ளுபடி செய்து அறிவிக்கும் அரசுகள் சாதாரண குடியானவனின் வீட்டுக்குள் புகுந்து மின்கட்டையைப் பிடுங்கிக் கொள்வது ஏன்? தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளுக்கு சாதாரண பொதுமக்கள் பஸ்நிலையங்களிலும் ரயிலடிகளிலும் சாகும்போது அறிக்கை விடும் அரசுகள், ஐந்து நட்சத்திர தாஜ் ஹோட்டலில் பணக்காரர்கள் சாகும்போது மட்டும் துள்ளிக் குதித்து அதிரடி நடவடிக்கை எடுப்பது ஏன்? ஒரு நடிகன் கொலை செய்தால் மட்டும் ஏன் அனைத்து தரப்பிலும் இருந்து அவனுக்கு ஆதரவு குவிகிறது. ஒரு நாள் கூட சிறைக்குச் செல்லாமல் கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு படு டீசன்ட்டாக வெளியே வருகிறான். நடைமுறையில் ஒரு படைப்பாளி இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஜனநாயகம், சுதந்திரம். மேன்மை போன்ற நவீன வார்த்தைகளின் உண்மையான பெறுமதி என்ன என்று தன் படைப்புகளில் தேடும்போது ஆழ்ந்த அவநம்பிக்கையுடன் அவனை அறியாமல் அவன் பின் நவீனத்துவ சட்டங்களுக்குள் வந்து சேர்கிறான்.     

ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் வரும் கோயில் அர்ச்சகரான போத்தி என்பவர், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் தனக்கு சிறுநீர் முட்டும்போது யாரும் அறியாமல் மூலவரின் சிலைக்குப் பின்னே சிறுநீர் கழிக்கும் நிகழ்வைப் பற்றிய பேச்சு வரும்போது போத்தி கேட்கும் கேள்வி: வேறென்ன செய்ய முடியும்? மத பீடங்கள் என்பன எவ்வாறு உடைந்து சிதறுகின்றன என்பதை இந்நாவல் வாசிப்பவர் உணரமுடியும். மதம், பக்தி, ஒழுக்கம் போன்றவைகளின் மேன்மைகள் ஒருபுறம், பக்தர் கூட்டத்தில் மணிக்கணக்கில் சிறுநீர் கூட கழிக்க முடியாத அர்ச்சகரின் பரிதவிப்பு மற்றொருபுறம். இத்தகைய கேள்விகளை எழுப்பிப்பார்த்துக் கொள்வது பின் நவீனப் படைப்புகளின் முக்கிய அம்சமாகும்.

ஒட்டுமொத்தமாக நவீனத்துவப் படைப்புகள்  x பின் நவீனத்துவப் படைப்புகளின் தன்மைகளை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம்.

நவீனத்துவம்                                    பின் நவீனத்துவம்
உருவம்                                 எதிர் உருவம்
நோக்கம்                                 விளையாட்டு
வடிவம்                                 சந்தர்ப்பவசம்
படிநிலை அமைப்பு                       ஒழுங்கற்ற அமைப்பு
படைப்பு                                 நிகழ்வு
இருத்தல்                                இல்லாதிருத்தல்
மையப்படுத்துதல்                        சிதறடித்தல்
படிப்படியாக வளர்தல்                    முன்பின் அலைதல்
வரிசைக்கிரமமாக கதை சொல்லல்       துண்டாடப்பட்ட விவரணை

இலக்கிய அறிமுக வாசகர்களும், எழுதத் துவங்கும் படைப்பாளிகளும் எப்போதுமே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் சுருக்கமாக இந்த கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விவரம் வேண்டுவோர், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளையும், படைப்பாளிகளையும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.


 - கணேஷ் பாபு​ ​