செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

அ கா பெருமாள் - வயக்காட்டு இசக்கி



                         எங்கள் வீட்டு மணி நாய் ( நாய்னு சொல்லகூடாது அம்மா வோட இன்னொரு பையன்னு தான் சொல்லணும்  அவ்வளவு நெருக்கம்). என்ன தான் நான் சோறு போட்டு  விளையாடினாலும் , அம்மா சொன்ன பேச்சைத்தான் கேட்கும். நான் சோறு போட்டாலும் அம்மா இருந்தால் அவளை பார்ப்பான், அவள் சாப்புடறா  என்று சொன்னால் தான் சாப்பாட்டில் வாய் வைப்பான். சில முறை அம்மா ஒன்றும்  சொல்லாமல் நின்றால் அவளையே பார்ப்பான், அவளது ஆணைக்காக. தெரியாதவர்கள் யார் வந்தாலும் குரைத்து அவர்களை அலற விடுவதில் அலாதி பிரியம் அவனுக்கு . அப்படிபட்டவன் குடுகுடுப்பைகாரன் (குறி சொல்பவன்)  வந்தால் அமைதியாக கட்டிலுக்கு அடியில் பதுங்குவான் ஏன் என்று பல முறை யோசித்தும் பதில் தெரியவில்லை. ஒரு முறை அவனிடமே கேட்டேன்.  அத்தா உத்தரவு இருந்தாதான் அந்த வீட்டுகே வருவோம். அப்படி வரும் போது எந்த ஆபத்தும் நேராமல் அம்மா பார்த்துகொள்வாள் என்று என் நெற்றியில் திருநீர் வைத்து டகால்டி உட்டு சென்றான். இது நடந்தது என் பத்து வயதில்.
அதற்கான பதில் இருபது வருடம் கழித்து (ரொம்ப லேட்)  அ கா பெருமாளின் வயல் காட்டு இசக்கி படித்த போது தான் தெரிந்தது.

 . நேற்று  அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகதான் தணுர்மலயான் ஆலயம் புத்தகம் எனக்கு காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான  கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்கு காட்டியது .
ராபாடிகளை   பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லி செல்கிறார் .
ஓநாயின் மலத்தை தேய்த்து குறி சொலவருவதால் தான் அவர்களின் அருகில் நாய் வருவதில்லை மற்றும் ராபாடிகளை  உழவுதொழிலை வாழ்த்தி வெகுமதி பெரும் பாடகர்கள்  போன்ற தகவல்களையும் தனக்கே உரித்த முறையில் கல்வெட்டுகளின் சான்றுடன் சொல்லி செல்கிறார் . 
ராபாடியின் பாட்டில் இருந்து பல நெல்வகைகளை பட்டியல் இடுகிறார் .  அப்படியே நெல்வயல்களை தாக்கும் நோய்களை பற்றியும் அதை தடுபதற்கான முறைகளையும் சொல்லுகிறார்.
          
  இசக்கியின் கதையை சொல்லி முடிக்கும்போது  அவள்  கணவன் மேடான அவள் வயிற்றை தடவி தடவி அழுதான் என்று அவர் சொல்லி செல்லும் இடம் ஒரு உச்சகட்ட இலக்கியமாக எனக்கு பட்டது . ( அந்த அளவுக்கு எனக்கு ரசனை குறைவோ ? (: (: ).    எப்பொதும் சிறுகதையோ அல்லது நாவலோ படித்து முடித்த பின் அதில் வரும் காட்சிகள் நம் மனதில் ஓடிகொண்டே இருக்கும்.  இதுவும் படித்ததில் இருந்து ஓடிகொண்டே இருக்கிறது .  இரவெல்லாம் அவன் அவள் வயிற்றை தடவிய காட்சியே கனவாக ஓடியது .
முடிக்கும் போது  இப்படியாக வயல்வெளியை  காப்பாற்ற உயிரை விட்டவர்கள் தெய்வம் ஆனார்கள். ஆபுர்வமான நெல்வகைகளை பயிரிட்டு பரிமாறி கொண்டவர்கள் மட்டும் மனிதராய் செத்து போனார்கள் என்று முடித்து ஒரு research முடிந்த உடன் researchers எல்லாம் ஒரு conclusion கொடுப்பார்கள் என்ற நியதியையும் காப்பாற்றி விட்டார்  .
இதை படித்த போது என் தாத்தா என்னை அவர் மடியில் உட்காரவைத்து கதை சொல்லிய காலம் மனதில் தேர் ஓடுவதுபோல் ஓடியது. அவரும் தகவல்களை சொல்லும் போது  இடையில் கதையை போட்டு அவர் சொன்னது கதையா என்று நினைபேன் .  என் தாத்தாவிடம் பேசியது போலவே இருந்தது இதை படித்து முடித்தபின் .

ஜெயமோகன் அறம் சிறுகதைகளை போலவே எனக்கு இந்த வயக்காட்டு இசக்கியும் close to heart  .

மரண ஓசை






தற்கொலையின்  வாக்குமூலம்
தண்டவாளத்தில் ரயிலடியின்
கால்வைக்கும் மரண ஓசை
செவி முழுதும் நிரப்பி
மேல் எழும் ஆன்மாவின்
இசையாய் .
குருதி குளங்களை நிரப்பி
பிரபஞ்ச நாதங்களை
மீட்டியபடி


----
மீட்பராய் வரும் பறவை,
காலை பனித்துளி , குழந்தையின் சிவபேரிய
விரல் , தெருவில் விளையாடும் சிறுவனின் நாய் ,
அன்னையின் அடையாளமற்ற உருவம் ,
சிலுவைகளை சுமந்தபடி .

------
மழைத்துளி விழுந்த நதி 
முழுதும் பூக்களாய்   
ஓடிகொண்டிருகிறது
இன்னும் பூக்களை வேண்டியபடி ,
கருத்தரிக்கும் நாள் வரும்
என்று எதிர்பார்த்து கரையோரம் 
பூக்கள்  .

------------
பிரபஞ்சம் முழுதும் கரு மௌனமாய் 
ஓடிகொண்டிருக்கிறது.
மனம் முழுதும் எண்ணமாய் 
ஓடிகொண்டிருக்கிறது
நதி முழுதும் நீராய்
ஓடிகொண்டிருக்கிறது
கடலை எதிர்பார்த்து


--------------
பிரபஞ்ச கூடாறத்தில் 
இசையை இறகு
முழுதும் நிரப்பி எழுதி கொண்டிருகிறது 
பறவை ,
தன போக்கில் போய் கொண்டிருகிறது 
 நதி
நிலவொளியின் தடம் பார்த்து
சிறகடிக்கிறது  விட்டில்
பூச்சி
காற்றின் தீராத பக்கங்களில் ,
வரைந்து கொண்டிருகிறது
தென்றல் 

--------------
கருத்த பேரண்டம் வெடித்து
புல்லாய் ,
புல் வெடித்து பறவை
மேயும் விதையாய்
பறவை வெடித்து
மீண்டும் பிரபஞ்சம் நோக்கி 

திங்கள், 11 பிப்ரவரி, 2013

நீரின் புன்னகை

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.
                             - பிரமிள்

வருடம்: கி.பி. 1889
முதலில் தாங்கள் பார்ப்பது கடல்தானோ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது.  மலைச் சிகரங்களுக்கிடையே எப்படி கடல் பொங்கிப் பிரவகிக்க முடியும் என்ற சிந்தனை தோன்றியதும், அவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள். பின் நெடுநேரம் அந்த வெள்ளையர்கள் இருவரும் தங்கள் கண்களுக்கு முன் விரிந்து செல்லும் காட்டாற்று வெள்ளத்தையே மௌனமாக அவதானித்துக் கொண்டிருந்தனர். நீல வானத்தையே நூறு நூறு துண்டுகளாக்கி தன்னுடன் இழுத்து ஆங்காரத்துடன் ஓடிக் கொண்டிருந்தது நதி. அவர்களின் வெள்ளைத் தோல், குளிர்ந்த நீர்ச் சாரல் பட்டு புல்லரித்துப் போயிருந்தது. வானம் இடைவிடாது அழத் துவங்கியது. திசைகளுக்கப்பால் குடிகொண்டிருக்கும் ஏதோ ஒரு பெருந்தெய்வம் தன்னுடைய வலிய கரங்களால் வானத்தைத் துணியாக்கிக் கசக்கிப் பிழிவது போலத் தோன்றியது அங்கிருந்த மலைக்காணிகளுக்கு. தாங்கள் காலங்காலமாக வேரூன்றிப் போயிருந்த இந்த மேற்கு தொடர்ச்சி மலை தங்களை எட்டி உதைப்பது போலிருந்தது அவர்களுக்கு. காட்டாற்று வெள்ளம் அவர்களுக்கு புதியதில்லை என்றாலும் இந்த முறை பெரியாற்றின் ஊர்த்துவ தாண்டவம் வனத்தின் குழந்தைகளான அவர்களுக்கே அச்சமூட்டும் பயங்கரத்துடன் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அந்த மலைக்காணிகளுக்கு அருகில் நின்றிருந்த கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும், முல்லைப் பெரியாறு அணை கட்டுமானத் தொழிலாளர்களும் அழுது ஓய்ந்திருந்தனர். தங்கள் கால்களுக்கு கீழிருக்கும் நிலம் நழுவுவது போலிருந்தது அவர்களுக்கு. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கள் குழந்தைகளையும் நண்பர்களையும் வெள்ளம் காந்தப் புலம் இரும்புத் துகளை ஈர்த்தது போல ஈர்த்துக் கொண்டு போய் விட்டது. காப்பாற்றப் போனவர்களும் கரையொதுங்கவில்லை. அந்த அகோர வெள்ளத்தில் எப்படியோ தப்பிப் பிழைத்த சில குழந்தைகள் வாய் பேசும் ஆற்றலை இழந்திருந்தன.
நதிக்கு ஒரு குரல் இருப்பதை அப்போதுதான் வெள்ளையர்கள் உணர்ந்தார்கள். அந்தக் குரலால் நதி பேசத் துவங்கினால் பிற எந்த உயிர்களும் பேச முடியாது என்பதை உணரத் துவங்கினார்கள் அந்த இருவரும்.
 லோகன் துரை உண்மையில் ஆடிப் போயிருந்தான். அவன் தன் வாழ்வில் ஒரு நதி இவ்வளவு விசையுடன் பாயக் கூடும் என்பதை சற்றும் நினைத்துப் பார்த்தவனில்லை. பாறையில் மோதிச் சிதறும் நீர்த் துளிகள் போல காட்டானைகளும், கரடிகளும், குரங்குகளும் வெள்ளத்தில் சிதறி இழுபட்டு உயிருக்கு ஏங்கும் கண்களுடன் நதியின் வயிற்றில் சென்று மறைவதை அவன் தன் வாழ்வில் முதன்முதலாக இங்குதான் பார்க்கிறான். எப்போதும் சௌந்தர்யவதியாய் அடங்கிய குரலில் பேசிக் கொண்டும் மென்னடை பயின்று கொண்டும் இருந்த அந்த மோகனச் சுந்தரி இப்போது வனத்தையே ரத்தச் சேறாக்கி தன் நீலிப் பற்களால் பிள்ளைக் கறி வேண்டி பசித்தலைகிறாள்.
கண்களுக்கு முன்னால் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நீர்தான். நதியோட்டத்தின் மேல் கிளர்ந்தெழுந்த வெண்புகை, நதியின் கோர முகத்தை காற்று வெளியில் சித்திரமாக அவனுக்கு வரைந்து காட்டியது போலிருந்தது. லோகன் துரையின் வயிற்றுத் தசைகள் பயத்தில் இறுகிக் கொண்டன. எந்த இழப்பையும் அவனால் தாங்கிக் கொள்ள இயலும். ஆனால், தாங்கள் அதுவரை சொற்களால் விளக்க முடியாத உழைப்பைக் கொட்டி உருவாக்கிக் கொண்டிருந்த அணை உடைந்து போய் நீரின் கோர நகங்களால் கிழிபட்டுக் கொண்டிருந்ததைத்தான் அவனால் பார்க்க முடியவில்லை. தனக்கே அந்தக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய மேலதிகாரி பென்னிகுக் அவரின் செல்லக் குழந்தையான இந்த அணையை காட்டாறு அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டோடியதை  எப்படி சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவன் மட்டுமல்ல, பெரியாறு முல்லையாறுடன் சேரும் அந்த நாற்பத்து எட்டாவது கிலோமீட்டரில் நின்றிருந்த கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளும், பென்னிகுக்கின் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் சுழித்துக் கொண்டோடும் நீரின் பிரவாகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 
ஒரு தியானத்தைப் போல காடாற்றையே பார்த்துக் கொண்டிருந்தார் பென்னிகுக். துயரத்தின் முடிவற்ற நீள்வெளியில் அவர் மனம் தட்டழிந்து கொண்டிருந்தது. அவரைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கும் துயரத்தின் வாதையை வெள்ளைத் தாளில் கொட்டிய செந்தூரத்தைப் போல வெண்மையும் செம்மையும் பின்னிப் பரவிக் கிடந்த அவர் முகம் காட்டிக் கொண்டிருந்தது.
அபீசினியாவின் யுத்த களத்தில் அவர் எத்தனையோ பயங்கரங்களை சந்தித்ததுண்டு. அவையாவும் மனிதனால் நிகழ்த்தப் பட்டவை. ஆனால், இயற்கை நிகழ்த்திய இந்த பயங்கரம் அவர் இதன்முன் கண்டறியாதது. தன் கண்முன்னால் வன ஓநாய் ஒன்று தன் கைக்குழந்தையை கூறு போட்டு தின்று கொண்டிருக்கிறது. குருதியும் நிணமும் சொட்டும் அதன் பற்களின் முன் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று தான் வணங்கும் தேவகுமாரனிடம் மனதிற்குள் முறையிட்ட போது தூய கண்ணீர் துளிகள் அவர் மீசையை நனைத்துக் கொண்டிருந்தன.
முதன்முதலாக இயற்கையின் பேரிருப்பின் முன் மனிதன் காற்றில் மிதக்கும் உமித்தூள் போன்றவன் என்ற உண்மை அவருக்கு புலனாகியது.
ஒரு மின்னலைப் போல யாவும் நடந்து முடிந்து விட்டது. இரவு முழுதும் அணை கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள், அதிகாலையிலும் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். சுரங்கம் அமைக்கும் வேலைக்காக தான் இங்கிலாந்திலிருந்து வாங்கி வந்திருந்த இயந்திரங்களைப் பார்வையிடுவதற்காக மலையின் அடிவாரம் வரை சென்று திரும்புவதற்குள் இந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது. யாவரின் ஆவியையும் தன்னுடன் பத்திரமாக அழைத்துக் கொண்டு காட்டாறு அரபிக் கடல் நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட கட்டி முடிந்த நிலையில் இருந்த அணை நீருக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு விட்டது. செடிகொடிகள் மண்டிய இந்த பசிய வனத்தை நீர்க்கத்திகள் பல நூறு துண்டங்களாக வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. தன்னுடன் வேலை செய்யும் கிழக்கிந்திய கம்பெனியின் வெள்ளை அதிகாரிகள் பலரும் அரபிக் கடலின் அடிவயிற்றில் அமிழ்ந்து விட்டார்கள். ஊழியர்களின் குடியிருப்புப் பகுதியையே காணவில்லை. எங்கும் சேதாரம். ஆயிரக்கணக்கான மனிதர்களின் இரவு பகலற்ற உக்கிர உழைப்பு வீணாகி விட்டது. 
 அனைத்துக்கும் மேலாக தன்னை நம்பி வந்த இந்த தமிழ் மக்கள். தன் கனவோடு சேர்ந்து இவர்கள் கனவும் பொசுங்கிப் போய்விட்டது. அடர்வனத்தில் ஒரு பெருங்கனவுடன் வேலை செய்ய வந்தவர்கள் பாதிக்கும் மேலாக மலேரியாவுக்கும், காலராவுக்கும், காட்டு மிருகங்களுக்கும் பலியாகிப் போனார்கள். மீதி இருந்தவர்களை நீர் புசித்து விட்டது. புசித்த ஏப்பம் வானத்தில் இடியாக எதிரொலிக்கிறது.
சோர்வே அறியாத பென்னிகுக்கின் தொண்டையில் கல்லடைத்தது. மெல்ல தன் அருகிலிருந்த லோகன் துரையின் தோள்களைப் பற்றினார்.
வெள்ளத்தின் கரையினில் நின்ற வாயுள்ள மனிதர்கள் வெகு நேரம் பேசிக்கொள்ளவேயில்லை. வாயற்ற நதி மட்டும் சப்தமெலுப்பிக் கொண்டே ஓடியது.
வெகு நேரம் சென்ற பின், பென்னிகுக் துரையின் முன் தயங்கியவாறே வந்து நின்றனர் விவசாயிகள்.
பென்னித்துற! இந்தப் பெரியாத்துக்கு எப்போ அருளு வரும்னு யாராலயும் கணிக்க முடியாதுங்க.  வெள்ளம் வடியறதுக்கே பல நாள் பிடிக்கும் போலிருக்கு. பெருங்கொண்ட எழவுய்யா இது.ஆம்பள பொம்பள நண்டு சிண்டு எல்லாம் தண்ணியோட போயிருச்சுக. கொள்ளி வைக்கிறதுக்கும் நெய்ப்பந்தம் தூக்குறதுக்கும் ரத்த உறவும் இல்ல. நல்லது கெட்டதுக்கு வந்து போற சொந்தமுமில்லன்னு ஆய்ப்போச்சு. வம்பாடு பட்டாவது எங்க ஆட்கள நாங்க மெல்லத் தேத்திக் கொண்டு வந்துருவோம்ங்க. நீங்க மட்டும் மனசு விட்டுராதீகய்யா. கொண்டு செலுத்தறதுக்கு நீங்க இல்லன்னா எங்க மண்ணுக்கு வேற கெதியில்லேங்க, என்று மன்றாடி விண்ணப்பம் செய்தனர்.
லோகன் துரை தன் உடல்மொழியால் அவர்களை வழிமொழிந்தான். பின் தயங்கியவாறே, மெட்ராஸில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி விளக்கம் தெரிவிக்க வேண்டுமென்றான்.
அதற்கு முன் மதுரைப் பொதுப் பணித்துறை அலுவலகம் சென்று தகவல் சொல்ல வேண்டும் என்றார் பென்னிகுக்.
இரு கையெடுத்துக் கும்பிட்டு அவர்களுக்கு விடை கொடுத்தார்கள் சூழ்ந்திருந்தவர்கள்.
வலுத்துப் பெய்த மழையினூடாக அடிவாரத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த வெள்ளை அதிகாரிகளை சூட்சும ரூபத்தில் இருந்த ஒரு மாபெரும் கனவும் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

வருடம்: கி.பி. 2012 (டிசம்பர்)
அதிகாலையின் ஊமை வெயிலில் சூடான தேநீர் குடிப்பது பன்னீர் செல்வத்துக்கு எப்போதுமே பிடித்தமானது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான கூடலூர்தான் அவன் வாசஸ்தலம். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் மழையும் குளிரும் பனியும் நிரம்பியவை. மார்கழி மாதமும் தை மாதமும் மட்டும் பனி மேலும் அடர்த்தியாக ஊடுருவி அந்த ஊரின் நிலப்பரப்பை ஆசையுடன் ஆசிர்வதிக்கும். பனியும் நிலமும் மோகத்தில் முயங்கிக் கொண்டிருக்கையில் அவர்களைப் பிரித்து வைப்பதற்காக வெயில் மெல்ல தன் முகத்தை காட்டத் துவங்கியிருக்கும்.
கடந்து செல்லும் கால்நடைகளின் லாடங்கள் எழுப்பும் தூசி காற்றில் மேலெழும்பி காலையின் இளவெயிலில் பொன்துகள்களாக மினுமினுக்கும். வாழ்வில் காண்பதற்கு அரிய இந்த ரசவாதத்தை இயற்கை நிகழ்த்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய இந்த ஊரை பருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிச் செல்வது போல இயற்கை ஏதோ ஒரு ரஷ்ய கிராமத்தில் இடம்பெயர்த்து வைத்தது போன்ற ஒரு மனமயக்கம் ஏற்படும். இந்தச் சூழ்நிலைக்குப் பழகிப் போய்த்தான் நகர வாழ்விலிருந்து தன்னை வேண்டுமென்றே துண்டித்துக் கொண்டான்.
தவிர்க்க முடியாத சில வேலைகளினால், நகரத்துக்கு செல்ல நேர்ந்தாலும் இரண்டொரு நாட்களில் ஊர் திரும்பி விடுகிறான். தன்னுடைய தாத்தாவிற்கும் தந்தைக்கும் கிடைத்த இந்த கிராம வாசம் பணம் சம்பாதித்தல் என்ற ஒரு காரணத்துக்காக தன்னிடமிருந்து பறிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை.
கண்ணாடித்  தம்ளரின் பாதிவரை தேநீர் இருந்தது. அவனுக்கு இந்த உலகமே தேநீரின் நிறமுடையதாகத் தோன்றியது. தான் அமர்ந்திருக்கும் இந்த பெஞ்சு, இந்த பெஞ்சுக்கருகில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு வெயில் குளிக்கும் நாய், அருகிலிருக்கும் குட்டைச்சுவரில் ஓட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர், தொலைதூரத்தில் சென்று கொண்டிருக்கும் அம்பாசிடர் கார் என்று யாவும் தேநீரின் நிறத்திலேயே ரூபம் கொண்டிருந்தன.
கண்ணாடித் தம்ளரின் வழியாகத் தோன்றும் காட்சிகள் சோபித்ததுடன் தோன்றின.
பெரிய சாமி வாத்தியாரோடு சேர்ந்து முன்னாள் ஊர்ப் பிரெஸிடென்ட்டும் தன்னை நோக்கி வருவதை அந்தக் கண்ணாடித் தம்ளர் வழியாக காண முடிந்தது. ஏதோ முக்கியமான விஷயமாக வருகிறார்கள் என்று ஊகித்துக் கொண்டே அவசரமாக தம்ளரிலிருந்த மீதித் தேநீரை பெஞ்சினடியில் படுத்திருந்த நாயின் மீது ஊற்றினான். சட்டென கழுத்தை நிமிர்த்திய நாய், அவனை பயத்துடன் பார்த்தது. பின் மீண்டும் படுத்துக் கொண்டு வெயில் காயத் துவங்கியது.
இன்னும் சின்னப் புள்ள மாதிரியே இரு! டீ கிளாஸு வழியா என்னத்தப் பாத்துக்கிட்டு இருக்கறவேன் என்று கர்ஜித்துக் கொண்டே வந்தார் பெரியசாமி.
ஒண்ணுமில்ல சார். பள்ளிக் கூடம் படிக்கையில மைக்ரோஸ்கோப் வழியா கிருமிகளப் பாக்க சொல்லிக் குடுத்தீங்கள்ள. இப்ப டீ கிளாஸு வழியா உலகத்தப் பாத்து ஏதாவது கத்துக்க முடியுமான்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நீ கிழிச்சுக் கேப்பைய நட்ட! மைக்ரோஸ்கோப் வழியாவும் ஒண்ணும் கத்துக்கல. டீ கிளாஸ் வழியாவும் ஒண்ணும் கத்துக்கப் போறதில்லை. பத்து பதினஞ்சு ஸ்லைடுகள வேற களவாண்ட்டு போய்ட்டெங்களேடா ?
அந்தக் கூத்த இன்னமுமா ஞாபகம் வச்சுருக்கீங்க? என்று அர்த்தமுள்ள சிரிப்புடன் கேட்டான் பன்னீர். மாரி அண்ணே! சார் தவிச்சுப் போயி வந்துருக்காரு. ஒரு டீயப் போட்டு அசத்துணே! என்று ஒரு டீ சொன்னான்.
தவிச்சு வந்தவனுக்கு போயும் போயும் இவங்கடையிலேதேன் டீ சொல்லணுமாடா என்று அச்சத்துடன் கேட்டுக் கொண்டே பன்னீரின் அருகில் அமர்ந்தார் பெரியசாமி. அது சரி.... இவன் கடை டீய எப்பிடிறா ரசிச்சு ரசிச்சு குடிக்கிறே என்று உண்மையிலேயே சந்தேகம் கேட்கும் பாவனையில் கேட்டார் பெரியசாமி.
அது ஒண்ணும் இல்ல சார். மனுஷன் செத்த பிறகு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோதான போறான். சொர்க்கத்துக்கு போற அளவு நான் ஒரு புண்ணியத்தையும் சேக்கல. கெரகம், நரகத்துக்குதேன் போயாகணும்னு தெரிஞ்சு போச்சு. அதான், இவன் கடை டீய குடிச்சு இப்பத்துல இருந்தே 'ரிகர்சல்' பாத்துகிட்டு இருக்கேன், என்றான் பன்னீர்.
கடையில் இருந்தவர்கள் வேண்டுமென்றே சத்தம் போட்டு சிரித்தார்கள். வாத்தியார் மட்டும் இன்னும் சற்று நேரம் அண்ணாந்து டீக்கடையின் கூரையைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.
மாரி, ஊரறிந்த சாந்த சொருபீ. இருங்கடி வெளக்கெண்ணெகளா, ஒரு நாள் ஒங்களுகெல்லாம் வெஷம் வெச்சுக் கொல்றேன் என்று மனதிற்குள் கருவிகொண்டே முகத்தில் புன்சிரிப்பு தோன்ற டீயாற்றிக் கொண்டிருந்தான். 
லந்தடிச்சதெல்லாம் போதும் சார். வந்த வேலையப் பாப்பமா? என்று காராசேவை மென்று கொண்டே கேட்டார் அருணாச்சலம். பல வருடங்கள் ஊரின் 'பிரஸிடென்டாக' இருந்தவர். சில 'உள்ளடி'  வேலைகளால் பதவி இழந்து மீண்டும் அந்தப் பதவி வேண்டி ஊருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
வந்த வேலை உடனே நினைவுக்கு வந்து விட்டது வாத்தியாருக்கு. ஆமாண்டா பன்னீரு! ஒரு முக்கியமான விஷயம். இந்த ஊர்லயே உன்னாலதான் அந்தக் காரியத்த சிந்தாம சிதறாமச் செய்து கொடுக்க முடியும்.ஓங் கடைக்குப் போலாம் வாடா என்று எழுந்தார் பெரிய சாமி.
பீடிகை பலமானவுடன், சுதாரிப்பு அதிகமாகிவிட்டது, பன்னீருக்கு. அவசரமாகத் தானும் எழுந்து கொண்டே கேட்டான், யாருக்கு சார் காரியம் செய்யணும்?
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே இந்த சல்லிப் பய வாய வச்சுட்டானே! அதுவும் ஒரு 'பிரெஸிடென்ட்' பக்கத்துல இருக்குறப்ப இந்த மாதிரி அபசகுனமா பேசலாமாடா? என்று குரலை உயர்த்தினார் அருணாச்சலம்.
நீ 'பிரெஸிடென்ட்டா இருந்தது நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடிரா! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே டீக்கடையை விட்டு வெளியே நடந்தான் பன்னீர். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
 டீக்கடைக்கு அடுத்திருந்தது இரும்புக் கடை. இரும்புக் கடைக்காரன் தன் கடைவாசலில் தொங்க விட்டிருந்த வண்ண வண்ண கயிறுகளையும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களையும் தாண்டி வந்தால் பன்னீரின் 'எலெக்ட்ரிகல்' கடையின் தரிசனம் கிடைக்கும். பிரதான சாலையாக இல்லாவிட்டாலும் அந்த சாலையிலும் ஒரு சில பேருந்துகள் அவ்வப்போது தடம் பதித்துக் கொண்டிருந்தன. சாலையை ஒட்டி இருப்பதால் பேருந்துப் புகை நுரையீரலைத் தேடி வந்து மையம் கொள்ளும். டீசல் மணம் நாசியை நிறைக்கும். இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த சாலையோர பாதசாரிகளுக்கு பெரும் தொல்லையாக இருப்பது கடந்து செல்லும் பேருந்தின் சாளரங்களிலிருந்து எந்த அண்ணனோ அண்ணியோ துப்பக்கூடிய கோழை வடியும் எச்சில்தான்.  பேருந்துக்கு வழிவிட்டுவிலகி நடந்து செல்கையில் அருவருப்பூட்டும் ஆச்சர்யமாக தங்கள் கன்னங்களில் எச்சில் பட்டதும் பாதசாரிகளின் அபாரமான கவி மனம் விழித்துக் கொண்டு ஆதி மொழியான தமிழுக்கு சில புதிய வார்த்தைகளை அளிக்கும்.
பன்னீரைப் பார்த்ததும் கடைப் பையன் எழுந்து நின்றான். இந்த மரியாதையெல்லாம் வேற நடக்குதா? என்று ஆச்சர்யப்பட்டார் பெரியசாமி.
இந்த மரியாதையெல்லாம் மனசுல இருந்தாப் போதும்டா. உட்கார்ரா! என்ற பிரெஸிடென்ட்டைப் பார்த்து பையன் புரியாமல் விழித்தான். நகர்ந்து சென்று எல்லோர்க்கும் 'சேர்' எடுத்துப் போட்டான்.
அந்தச் சிறிய கடையில் இரும்பாலான கதவற்ற நான்கு அலமாரிகள் இருந்தன. ஒவ்வொரு மூலைக்கும் ஒன்றாக சுவரையொட்டி சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. வண்ண வண்ண பல்புகளும், அட்டைப் பெட்டிகளும், மஞ்சளும் பச்சையும் சரிவிகிதத்தில் கலந்த ஒயர் சுருள்களும், ஒயர் போர்டுகளும் நான்கு அலமாரிகளையும் நிறைத்திருந்தன. அலமாரிகளுக்கு மேலே வயலில் நீர்ப் பாய்ச்சுவதற்கு ஏற்ற பி.வி.ஸி. குழாய்களும் கப்ளிங்களும் பிளாஸ்டிக் நாரால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. ஒரு வயர்மேனுக்கு பயன்படும் எல்லா துணைக் கருவிகளும் சிறிய பிளாஸ்டிக் குடுவைகளில் ரப்பர் பேண்டு சுற்றி நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அலமாரிகளுக்கு கீழிருந்த காலி இடங்களில் புதிதாக 'வைண்டிங்' செய்யப்பட்ட மோட்டார் காயில்கள் அணிவகுத்திருந்தன. எலெக்ட்ரிகல் பொருட்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு உடைந்த புல்லாங்குழல் சுவர் மூலையில் படிந்திருந்த ஓட்டடையை ஊடுருவிக் கிடந்தது.
சுவரில் மீதி இருந்த இடத்தில் மரத்தாலான ஒரு பெரிய சுவிட்ச் போர்டு தென்பட்டது. இவை போதாதென்று அந்த சிறிய இடத்தில் கூடுதலாக இன்னும் இரண்டு இருக்கைகளை போட்டதும், காற்றில்லாத அறையின் மூச்சுத் திணறியது.
பெரிய சாமி மெல்ல விஷயத்தை ஆரம்பித்தார். பன்னீரு! கவனமாக் கேட்டுக்க. பென்னிகுக் துரையோட 172 -வது பிறந்த நாள் அடுத்த மாசம் வருது. அரசாங்கம் நம்ம 'லோயர்கேம்ப்'ல அவருக்காக கட்டிக்கிட்டிருக்கிற பெரிய மணிமண்டபத்த அடுத்த மாசம் தெறந்து வைக்கிறாங்க. முதலமைச்சர் அந்த விழாவுக்கு வர்றதா பேசிக்கிறாங்க.
பன்னீருக்கு இதுவெல்லாம் பழைய செய்திகள். ஆனாலும் தனக்குப் பிடித்தமான ஒரு மனிதரைப் பற்றிப் பேச்சு சுழன்றதும் அவன் கண்களில் ஆவல் ததும்பியது.
தெரிஞ்ச செய்திதான சார் இது.
ஆமாம்ப்பா! விஷயம் என்னான்னா இதுவரைக்கும் அரசாங்கம் சார்பா யாரும் அவரு கொள்ளுப் பேரனுக்கு தகவல் சொல்லலயாம்.
இவெங்ய்க நம்ம ஊர்ல இருக்குற முக்கியஸ்தர்களுக்கே தகவல் சொல்ல மாட்டாய்ங்கே. இதுல 'லண்டன்'ல இருக்குற ஆளுக்கு எப்பிடி சொல்லுவாய்ங்க? என்று எதிர்கேள்வி போட்டான் பன்னீர்.
இவெங்ய்க வேல நமக்குத் தெரிஞ்சுததுதான! நேத்துதான் தேனிக்கு போய் கலெக்டர் கிட்ட மனு குடுத்துட்டு வந்தோம். மேலிடத்துல இது விஷயமா பேசிட்டேன். இன்னும் தீர்மானமாஎந்த உத்தரவும் வரலன்னு சொன்னாரு. இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு திறப்பு விழாவுக்கு. அரசாங்கம் அவர கூப்புடுமாங்கிறது சந்தேகம்தான். அதுக்காக நாம சும்மா இருந்திரக் கூடாது. இங்கிலாந்துல இருந்து வந்து படாத பாடு பட்டு நமக்கெல்லாம் ஒரு வாழ்வு கொடுத்துட்டு போன ஒரு தெய்வத்துக்கு நாம நம்ம நன்றியத் தெரிவிச்சுதான் ஆகணும். தமிழண்ட எது இருக்கோ இல்லையோ, நன்றின்னு ஒண்ணு இருக்குன்னு காட்டிப்புடணும்.
ஒன்னப் பாக்க வந்ததே இது விஷயமாத்தான்.ஒன்னோட லேப்டாப்ல இருந்து பென்னிகுக் பேரனுக்கு ஒரு 'ஈமெயில்' அனுப்பணும். நீதான் 'இங்கிலீஸ்' நல்லா எழுதுவியே. உருக்கமா எழுதி அனுப்பு. ஈமெயில்ல படிச்ச மாத்திரத்தில அந்த மனுஷன் கிளம்பி இங்க வந்துறணும்.
நெற்றியைச் சுருக்கி கொஞ்ச நேரம் யோசித்த பன்னீர் நிதானமாக கேட்டான். நீங்க சொல்றதெல்லாம் சரித்தேன். ஆனா, அவரு லண்டன்ல இருந்து வந்து போற செலவ யாரு குடுக்குறது?
அத நான் பாத்துக்கிறேன். பென்னிகுக் கட்டிக் கொடுத்த அணையில இருந்து வார தண்ணில பாசனம் பண்ணி சம்பாதிச்ச எல்லா பெரிய விவசாயியும் சந்தோசமா காசு குடுப்பான்.வேண்டிய பணத்த நான் வசூல் பண்ணித் தாறேன். என்று சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் பிரெஸிடென்ட்.
யோசனைகளின் வலையில் சிக்கிக்கொண்ட பன்னீர் கடையின் கல்லாப்பெட்டிக்கு மேல் மாட்டியிருந்த பென்னிகுக்கின் புகைப்படத்தை பார்த்தான். பதிலுக்கு பென்னிகுக்கின் கண்களும் புன்னகையுடன் பன்னீரையே பார்த்துக் கொண்டிருந்தன.

வருடம்: கி.பி. 1890

வானின் வெளிச்சம் தேக்கடியின் குளிர் நிரம்பிய வனத்தில் மெல்ல தரையிறங்கிக் கொண்டிருந்தது. வனவிருட்சங்களை ஈரப் புகை மூடியிருந்தது. காற்று பனியேறி அடர்ந்திருந்தது.அந்தக் குடிலைச் சுற்றி ஓநாய்க் கூட்டத்தைப் போல நிசப்தம் சூழ்ந்திருந்தது. மங்கிய ஒளியில் அருகிலிருந்த மலை முகடுகளில் வரையாடுகள் மேய்ந்து கொண்டிருப்பது குடிலின் சாளரம் வழியாக க்ரேஸ் ஜார்ஜினாவுக்குத் தென்பட்டது.
ஜார்ஜினா தேக்கடிக்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது. பனிக்கட்டி போலிருந்த தரையில் கால் வைக்க முடியாதலால், எதிரே இருந்த மர இருக்கையில் காலை நீட்டி வைத்திருந்தாள்.கனப்பு அடுப்பின் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் அவள் உடல் காற்றிலாடும் இலையைப் போல நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னும் சில வினாடிகளில் மானுட உடலில் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி எடுக்கப்பட்டு தன்னுடைய ஆவி இந்த பனி ததும்பும் வனத்தில் கலந்து பெரியாற்றின் படுகைகளில் பரவிவிடுமோ என்று கற்பனை செய்து நடுங்கிக் கொண்டிருந்தாள். எந்தப் பொருளைத் தொட்டாலும் பனியின் பரு வடிவையே தொடுவது போலிருந்தது. குளிர் நிரம்பிய லண்டனில்தான் அவள் பிறந்து வளர்ந்தாள். குளிரும் பனியும் அவள் பால்யத்தில் இருந்தே அவளுடன் பயணிப்பவைதான்.  எனினும், கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில் இருக்கும்  இந்த மலையின் குளிர் அவள் இதற்கு முன் கண்டறியாதது.இந்த மலையும், வனமும், வனத்தை ஊடறுத்துப் பொங்கிப் பாயும் அகன்ற பெரியாறும், வனமெங்கும் நிறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத பனிப் பிசாசும் அவள் உடலையும் மனதையும் கொஞ்சம் கொஞ்சமாக காவு வாங்கிக் கொண்டிருந்தன. இவை யாவற்றையும் விடவும் அவளுக்கு பேரச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தவை இந்த மலை நாட்டில் முடிவற்றுப் பெருக்கம் கொண்டிருந்த கொசுக்கள்தான்.வண்டுகளை விடவும் அளவில் பெருத்த கொசுக்கள் தினமும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருந்தன. பனியின் பாடலை இசைத்துக் கொண்டே பிரயாணிக்கும் காற்று சூழ்ந்த இந்த எல்லைகளற்ற வனப் பிராந்தியத்தில் ஏன் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அவள் ஒருகணம் நினைத்துப் பார்ந்தாள். மறுகணம் அப்படி நினைத்துப் பார்த்தமைக்காக வெட்கப்பட்டாள். சரித்திரம் தன் கல்வெட்டில் பெருமையுடன் பொறித்துக் கொள்ளவிருக்கும் தன் அன்பான கணவனுக்காக இந்தத் துன்பத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாவிட்டால் எப்படி? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்த அறையின் மூலையில் நிலை கொண்டிருந்த கட்டிலில் கனத்தபோர்வைக்குள் ஆழ்துயில் கொண்டிருந்த தன் கணவனையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் என்ன விதமான மனிதன்? இந்த நாட்டிற்கு வேலைக்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியின் பெரும்பாலான அதிகாரிகள் இங்கிருக்கும் செல்வத்தை ரகசியமாக சுருட்டிக் கொண்டு இங்கிலாந்துக்கு அனுப்பி தங்கள் வசதியைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இவனோ இங்கிலாந்தில் இருந்த தன் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்தையும் விற்று பணம் திரட்டி இங்கு வந்து இந்த மக்களுக்காக அணை கட்டிக் கொண்டிருக்கிறான்.
கறுப்புக் காப்பி கோப்பையில் ஆறிக் கொண்டிருந்தது. எடுத்துக் குடிக்க ஆரம்பித்தாள்.
மெல்ல கதவைத் திறந்து வெளிக்காற்று முகத்திலறைய மலையின் பள்ளத்தாக்கினைப் பார்த்தாள் ஜார்ஜினா. தூரத்து வெளிச்சத்தில், அந்த அதிகாலையிலும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இவர்கள் இரவு முழுதும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள். காலையிலும் வேலையைத் தொடர்கின்றனர்.
அவர்களைப் பற்றி தன் கணவன் பென்னிகுக் வெகு உயர்வாகப் பேசுவார். இவர்கள் வெறும் காசுக்காக உழைப்பவர்கள் அல்ல. ஒரு பெரும் கனவினை நிஜமாக்குவதற்காக தன் கணவனோடு சேர்ந்து இந்த எளிய இந்தியர்களும் முடிவின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம் கனவுதான். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு முன், இந்த மக்களை ஆண்ட மன்னர்களுக்குத் தோன்றிய கனவு இது. ஆனால், மனித சக்திக்கு அப்பாற்பட்ட உழைப்பையும், கஜானாவைக் காலியாக்கக் கூடிய நிதியையும், இந்த அணை கோரியதால்,அவர்களால் இந்த அணையைக் கட்ட முடியவில்லை. தன் கணவனுக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. திட்டமிட்டபடி இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு விட்டால், என் கணவன் இந்தப் பகுதியில் நிலவும் குளிரைப் போல இந்த மண்ணில் நிரந்தரமானவனாகிவிடுவான் என்றெண்ணி ஒருகணம் கண்மூடினாள்.
மீண்டும் அந்த தொழிலாளர்களை நோக்கி அவள் பார்வை சென்றது. இந்த இந்தியத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் குடும்பத்தையும், சொந்தங்களையும் சில வருடங்களுக்கு முன் நிலவிய கொடும்பஞ்சத்தில் இழந்து விட்டவர்கள்.
மீதியுள்ளவர்களை கடந்த வருடம் இந்த மலையில், திடீரென்று தோன்றிய பிரமாண்டமான காட்டாற்று வெள்ளம் பறித்துக் கொண்டது. இருந்தாலும், தங்கள் இழப்புகளைப் பொருட்படுத்தாது இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த அணை மட்டும் கட்டி முடிந்தால் இவர்களின் காய்ந்த நிலவெளி இந்தியாவின் நீர் வளமுள்ள ஒரு பகுதியாகிவிடும். மெட்ராஸ் மாகாணத்தின் தென்பகுதி இந்த அணையின் நீரால் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் என்று தன் கணவர் சொல்லியிருக்கிறார். இன்னுமொரு பஞ்சம் தங்கள் தலைமுறையைத் தீண்டிவிடக்கூடாது என்று ஒரு வழிபாட்டினைப் போல இந்த மக்கள் இங்கு குளிரையும், கொசுக்களையும், வன மிருகங்களையும், வியாதிகளையும், காட்டாற்றுவெள்ளத்தையும் தாங்கிக் கொண்டு வேலை செய்கிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளுக்கு கம்பெனி வீடு கொடுத்திருக்கிறது. பாவம், இவர்களுக்கு என்ன வசதியிருக்கிறது?
குளிரும், வியாதியும், அட்டைகளும், காட்டு மிருகங்களும் தின்ற உயிர் போக மீதி உயிரை இந்த அணைக்காகத் தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெயரையெல்லாம் வரலாறு ஞாபகம் வைத்திருக்குமா?இந்த மனிதர்களின் ஆவி என்றென்றும் இந்த அணையின் நீரில் தானே புதைந்திருக்கும். இயேசுவே! இவர்களை நலமுடன் வைத்திரும். இவர்கள் கனவினை நிஜமாக்கி, இவர்களின் வாரிசுகளை வாதையும், இருளும் தீண்டாமல் என்றும் ஒளியின் மையத்திலேயே வீற்றிருக்கச் செய்யும் என்று ஒரு கணம் மனம் கசிந்து வேண்டினாள். 
காலை வணக்கம். அதிகாலையில் என்ன சிந்தனை என்று புன்முறுவலுடன் கேட்டான் லோகன் துரை.
தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த லோகன் துரை தன்னோடு பூரண வெளிச்சத்தையும் கொண்டு வந்தது போலிருந்தது ஜார்ஜினாவுக்கு.
புன்சிரிப்புடன் லோகனுக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு , காபி அருந்துகிறீர்களா என்று கேட்டாள்.
வேண்டாம். காலையில் இரண்டு கோப்பை காப்பி என் வயிற்றுக்கு பாரமேற்றிவிடும் என்று சொல்லி விட்டு உரக்கச் சிரித்தான் லோகன். அந்த சிரிப்பொலி கேட்டு பக்கத்து மரக்கிளையில் அமர்ந்திருந்த ஏதோ ஒரு பறவை சட்டென்று சிறகடித்து வானில் மறைந்தது.
என்ன சிந்தனை என்று கேட்டேன். மீண்டும் தன் கேள்வியை அவளுக்கு ஞாபகப்படுத்தினான்.
ஒன்றுமில்லை லோகன். இந்த மக்களின் உழைப்பு வீணாகிவிடக்கூடாது என்று தேவகுமாரனை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அதிகாலையில் தன் தாய்மொழியில் தன் தாய்நாட்டினைச் சேர்ந்த ஒருவனோடு பேசுவது அவளுக்கு இனிமையாய் இருந்தது.
நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள். கடந்த முறை காட்டாற்று வெள்ளம் வந்தபோது 'தடுப்பணைகள்' கட்டாததால்தான் நாங்கள் பேரிழப்பைச் சந்திக்க வேண்டி வந்தது. இந்த முறை தடுப்பணை கட்டி முடித்தாகிவிட்டது. மலையைக் குடைந்து குழாய்களின் மூலமாக நீரை மெட்ராஸ் மாகாணத்தின் வைகை நதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்தப் பணிகள்தான் இப்போது தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு நீங்கள்தான் காரணம் ஜார்ஜினா. கடந்த முறை வெள்ளம் வந்தபிறகு, ஆங்கில அரசாங்கமே இந்த அணை கட்டுவதற்கு மேலும் எந்த நிதியையும் ஒதுக்க முடியாது என்று அறிவித்த பிறகு கர்னலுக்கு நீங்கள் தான் லண்டனில் உள்ள உங்கள் சொத்தை விற்று அணையைக் கட்டலாம் என்று தெரிவித்ததாக அறிந்தேன். மிகத் துணிச்சலான முடிவு இது. உங்களுக்கு இந்த தமிழ் பேசும் மக்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள். உங்களுக்கு என் வந்தனம் என்று தன் பாராட்டைத் தெரிவிக்கும் விதமாக தன் தொப்பியைத் தலையிலிருந்து எடுத்துப் பின் மீண்டும் அணிந்து கொண்டான் லோகன்.
நான் செய்தது பெரிய உதவியேயில்லை லோகன். என் கணவருடன் உங்களைப் போன்ற அதிகாரிகளும், இந்த மண்ணின் மக்களும் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்தீர்கள்.இயற்கையோடு கிட்டதட்ட மல்யுத்தம் செய்துதான் இந்த அணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மகத்தான பணி பணப்பற்றாக்குறையால் ஒருபோதும் நின்று விடலாகாது.ஒரு மகத்தான லட்சியம் நிறைவேறாமல் பாதியில் நின்றுவிடுவதைப் போல ஒரு துயரம் எதுவுமில்லை. தேவன் தயவில் என் குடும்பச் சொத்து, நகைகள் மற்றும் லண்டனில் இருந்த அவரது 'எஸ்டேட்' என்று எல்லாவற்றையும் விற்று மலையைக் குடையும் இந்த அசுரப் பணிக்காக கருவிகள் வாங்கி வந்தோம். உண்மையில் நான் இந்த மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
என் கணவர் மீது கம்பெனியில் உள்ள யாரோ சிலர் கொடுத்த பொய்ப் புகாரால் கம்பெனி நிர்வாகம் திடீரென்று அவரை பணிநீக்கம் செய்தபோது துடித்துப் போன இந்த கம்பம் பகுதி பொதுமக்கள் மதுரை கலெக்டரை நேரில் சந்தித்து இவரை நீக்க வேண்டாமென்று உணர்ச்சியுடன் வாதிட்டது உண்மையிலேயே என்னை நன்றியில் நிறைத்துப் பேச்சற்றவளாக்கி விட்டது. தன்னை இந்தப் பணியிலிருந்து நீக்கியதும் என் கணவர் துடித்த துடிப்பு எனக்குத்தான் தெரியும். உறக்கமில்லாமல் அவர் விழித்திருந்த இரவுகள்தான் எத்தனை? பெருமூச்செறிந்தாள் ஜார்ஜினா. 
ஆமாம் ஜார்ஜினா! கர்னலின் மீது இந்த மக்கள் கொண்ட பேரன்பு கலெக்டரையே திகைக்கச் செய்து விட்டது. தனக்குக் கிடைத்த தகவல்களை மீண்டும் ஆராய்ந்து அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்று உறுதி செய்து, கர்னலின் பதவி நீக்கத்தை ரத்து செய்தார்.இந்த மக்களின் நன்றி உணர்ச்சி உண்மையில் நெகிழ்வூட்டக் கூடியது.
மேலும் ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தபோது லோகனின் கண்கள் மின்னின. கடந்த மாதம் நானும் கர்னலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிக்கான 'சர்வே' நடத்திக் கொண்டிருந்தபோது கம்பம் பகுதி விவசாயிகள் ஒரு இருபது பேர் எங்களை அணுகினார்கள். என்னவென்று விசாரித்தபோது, இந்த அணை கட்டுவதற்கு கர்னல் படும் சிரமங்களை அறிந்து அவரை மரியாதை செய்வதற்காக தங்கத்தாலான தட்டின் மேல், தங்க வெற்றிலை, பாக்கு மற்றும் எலுமிச்சைப் பழம் என்று யாவும் தங்கத்திலேயே செய்து கர்னல் முன் நீட்டினார்கள்.
கர்னலும் நானும் மூச்சற்றுப் போனோம். பின் அவர்களைப் பார்த்து கர்னல் சொன்னார், எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உண்மையில், நீங்கள் நன்றி செலுத்த வேண்டியது இந்த இயற்கைக்குத்தான். இன்னும் சில வருடங்களில் இந்த அணை கட்டி முடித்த பிறகு, தண்ணீர் ஒரு மாபெரும் புன்னகையோடு உங்கள் வயல் வெளிகளைத் தேடி வரும். உங்கள் விவசாயம் செழிக்க, உங்கள் பஞ்சம் பறக்க, உங்கள் சந்ததியினர் வளம் பெற இந்த நீர் ஓயாது உங்கள் நிலத்தினை ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட நீருக்குத்தான் நீங்கள் இந்த மரியாதையைச் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்.
ஜார்ஜினாவின் கண்களில் நீர் பெருகி, காட்சியை மறைத்தது. முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். திரும்பிய திசையில்,தூரத்தில் மாட்டு வண்டிகள் வரிசை கட்டி பெரும் சிரமத்துடன் மலையேறிக் கொண்டிருந்தன. வண்டிகளில் பெரிதும் சிறிதுமாக வித விதமான டின்கள் கட்டப்பட்டிருந்தன.
ஜார்ஜினாவின் சிவந்த முகத்தில் ஆச்சர்யம் அப்பிக் கொண்டது. மாட்டு வண்டிகளில் என்ன ஏற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்?
குறும்புச் சிரிப்புடன் லோகன் சொன்னான். இந்த பொதிமாடுகள் சாராய கேன்களைச் சுமந்து வந்து கொண்டிருக்கின்றன. கலெக்டரின் சிறப்பு அனுமதியின் பேரில் இவை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப் படுகின்றன. இது இல்லாவிட்டால் தொழிலாளர்கள் இந்தக் குளிரிலும், இடைவெளியில்லாத வேலையிலும் செத்து விடக் கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக காட்டு மிருகங்களின் பயம் இவர்களின் மனதில் படிந்து போய் பல சமயங்களில் வேலை செய்ய விடாமல் செய்து கொண்டிருக்கிறது. இந்த திரவம் இருந்தால், அவர்கள் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்கிறார்கள்.
ஜார்ஜினாவுக்குப் புரிந்தது.
லோகன் தொடர்ந்தான். எங்கள் வேலைக்குப் பெரிய சிக்கலே மதுரையிலிருந்து கட்டுமானப் பொருட்களை இந்த 3500 அடி மலைக்குக் கொண்டு வருவதுதான். மதுரைக்கும் கம்பத்துக்கும் இடையே முறையான சாலை வசதியே இல்லை. சிரமப்பட்டு குமுளி வரை கொண்டு வந்து விடலாம். அதற்கு மேல் கொண்டு வருவதுதான் சிக்கலே. கழுதைகளைத்தான் பொதி சுமக்கும் வேலைக்குப் பயன்படுத்தினோம். ஆனால், பொருட்களைச் சுமந்து வரும் கழுதைகள், மலையேறும் போது எதிர்ப்படும் யானைக் கூட்டங்களையோ, ஓநாய்க் கூட்டத்தையோ பார்த்து விட்டால், பயத்தில் உறைந்து போய் அந்த இடத்தை விட்டு நகராது. பின் என்ன முயற்சித்தாலும், கழுதைகளை மலை மேல் ஓட்டிச் செல்ல முடியாது. அதனால்தான் இப்போது பொதி மாடுகளைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறோம். பொதி மாடுகள் மனிதனின் மனநிலையோடு ஒத்துப் போகும் சுபாவமுடையவை.வன விலங்குகள் எதிர்ப்பட்டாலும் மனிதன் கட்டளையிட்டால் தொடர்ந்து முன்செல்பவை. இப்போது கொஞ்சம் சிரமம் குறைந்திருக்கிறது என்று சொல்லிகொண்டே வந்தவன் திடீரென ஞாபகம் வந்தவனைப் போல் பேச்சை நிறுத்தினான்.
மன்னித்துக் கொள்ளுங்கள் ஜார்ஜினா. வந்த வேலையையே மறந்து விட்டேன். கர்னல் என்ன செய்கிறார்?
நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். காலை நான்கு மணிக்குத்தான் வேலை முடிந்து வந்தார். ஆறு மணிக்கு மீண்டும் வேலை துவங்க வேண்டும் என்றார். இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார். இவரது உடல் நிலை சீர்கெட்டு விடுமோ என்றுதான் எனக்கு மிகுந்த கவலையாய் இருக்கிறது.
ஆம் ஜார்ஜினா. நானும் இதைப்பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். என்னுடைய வார்த்தைகளை எளிதாக அவர் புறந்தள்ளி விடுகிறார். இந்த அணை மட்டும் திட்டமிட்டபடிகட்டி முடித்து செயல் படத் துவங்கினால், பிரிட்டிஷ் இந்தியாவின் மாபெரும் நீரியல் சாதனையாக சரித்திரத்தில் என்றென்றைக்குமாக பேசப்படும். அப்போது இந்த வலியெல்லாம் நமக்கு பெரிதாய்த் தோன்றாது. என்று தீர்மானமாய்ச் சொல்லி விடுவார்.
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். மனித சக்திக்கு சவால் விடுக்ககூடிய இந்த அணையின் கட்டுமானம் உண்மையில் ஒரு கூட்டு முயற்சியாய் இருந்தாலும் உங்கள் கணவரின் வழிகாட்டுதல் இல்லையென்றால் இந்த அணை கட்டும் திட்டம் கண்டிப்பாக கிடப்பில் போடப் பட்டிருக்கும். பல நூறாண்டுகளாக மனிதனால் சாத்தியமில்லாதது என்று சொல்லி கிடப்பில்போடப்பட்டிருந்த இந்த அணை கட்டும் திட்டத்தை தூசு தட்டி மேம்படுத்தி இன்று அணை கிட்டத்தட்ட கட்டி முடிக்கப் பட்டிருக்கும் நிலை வரை வந்ததற்கு உங்கள் கணவர்தானம்மா காரணம்.
லோகன் சொல்லிமுடித்திருந்தபோது ஜார்ஜினாவின் விழிகளில் கோர்த்திருந்த நீர் மணிகளில் சூரிய ஒளி ததும்பிக் கொண்டிருந்தது. 
 அவர் எழுந்தால் நானும் மெக்கின்ஸியும் லோயர் கேம்பில் சுரங்கம் அமைக்கும் வேலையைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாக சொல்லி விடுங்கள் என்று கூறி லோகன் விடைபெற்றான்.    

  
வருடம்: கி.பி. 1895, (அக்டோபர் 11)
  
அந்த சிறிய மேடையில் ஆங்கில அதிகாரிகள் மிடுக்காக அமர்ந்திருந்தனர். சுற்றி இருந்த இடமெல்லாம் மக்கள். ஆகாயத்தை அதிரடிக்கும் கைதட்டல் ஒலியினூடாக, அதிகாரம் மிளிரும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னர் வென்லாக் பேசத் துவங்கினார்.
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகத்தான நீரியல் சாதனை இங்கே நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இந்த சாதனைக்கு மூல வித்தாக இருந்த கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களுக்கு மகாராணியின் வாழ்த்துக்களை தெரியப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இன்றைய லண்டன் கெஜட்டில் இந்தக் செய்தி பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் பென்னிகுக்கை மனதார வாழ்த்துகிறேன். இந்த நீரியல் சாதனையை அவரோடு சேர்ந்து நிகழ்த்திய அனைவரையும் வாழ்த்துகிறேன். கர்னல் பென்னிகுக் அவர்களை பேச அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
கைதட்டல் ஒலி அதிகரித்தது. லோகனும், மெக்கின்ஸியும் கண்களில் நீர்வழிய கைதட்டினார்கள். சுற்றி இருந்த தொழிலாளர்களும், கம்பம் பள்ளத்தாக்கு பொது மக்களும் ஆங்கில அதிகாரி பேசும் மொழி புரியா விட்டாலும், பென்னிகுக் என்ற பெயர் உச்சரிக்கப் படும்போதெல்லாம், தங்கள் உடலதிர கைதட்டினார்கள். சிலர், பொங்கி வந்த சந்தோஷத்தில் கூச்சலிட்டார்கள்.
ஜார்ஜினாவின் முத்தத்தைப் பெற்றுக் கொண்டு பென்னிகுக் மெல்ல எழுந்தார். சுற்றியிருந்த மக்களைப் பார்த்தார். தூரத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி தென்பட்டது.அணை நிரம்பத் ததும்பி யிருந்த தண்ணீரைப் பார்த்தார். சுருக்கமாக பேசத் துவங்கினார்.

மகாராணிக்கு நன்றி. மகாராணியின் வாழ்த்துகளை நமக்குத் தெரிவித்த கவர்னர் அவர்களுக்கு நன்றி. இந்த நாளுக்காகத்தான் நான் என் வாழ்வைச் சுமந்து கொண்டிருந்தேன்.என்னால் எதுவும் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டு வந்ததும் சிறிது நேரம் மௌனமாய் இருந்தார்.
மெல்லியதொரு இசையைப் போல மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.
நண்பர்களே, இது தியாகத்தால் உருவான அணை. உங்கள் கண்முன் தென்படும் இந்தப் பூமி தியாக பூமி.பதினாறு ஆங்கில அதிகாரிகளும், நானூறுக்கும் மேற்பட்ட இந்தியர்களும் இந்த அணை கட்டுமானத்தின் போது தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். அவர்களும் சூட்சும ரூபத்தில் இந்த இடத்தில் நின்று கொண்டு நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன். மனித சக்தியால் ஒருபோதும் முடியாத செயல் என்று பலரும் நினைத்துக் கைவிட்ட இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இப்போது நாம் சாதித்திருக்கிறோம்.
இந்த அணை கட்டும் பணியை சர்வே செய்ததில் துவங்கி இந்த அணை முழுமையாகக் கட்டப்பட்ட இன்றைய தேதி வரை நான் பட்ட எல்லாச் சிரமங்களும் இன்று எனக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. நான் இந்த பூமியில் ஒருமுறைதான் பிறக்கப் போகிறேன். இனியொரு முறை நான் இப்பூமியில் பிறப்பது நிச்சயமில்லை. அதனால் என்னால் முடிந்த நன்மையை இந்த மக்களுக்குச் செய்வதுதான் என் விருப்பமாக இருந்தது.
இந்த செயற்கரிய பணியை என்னோடு தோள் சேர்ந்து இரவு பகல் பாராமல் நிறைவேற்றிக் கொடுத்த கம்பெனியின் சக ஊழியர்களையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். எல்லா வற்றுக்கும் மேலாக இந்தப் பகுதியின் இனிய மக்கள் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாத இழப்புகளையும், வாதையையும் தாங்கிக் கொண்டு தொடர்ந்து இந்த அணை கட்டுவதில் சுணக்கமின்றி உழைத்திருக்கிறார்கள். . இன்னும் சற்று நேரத்தில் இந்த அணை திறக்கப் படும்போது இதிலிருந்து பொங்கிப் பாயும் நன்னீர் இவர்கள் நிலத்தில் சந்திர சூரியர் உள்ளவரை என்றென்றைக்குமாக பாய்ந்து இவர்கள் பசியகற்றி இவர்கள் ஆன்மாவில் நீர்மை கலந்திருந்து இவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.
மேன்மை தங்கிய கவர்னர் அவர்களை இந்த அணையைத் திறந்து வைக்குமாறு வேண்டுகிறேன் என்று அழைத்தார் பென்னிகுக். அணை மதகுகளின் கட்டுபாட்டு அறையினுள் கவர்னரை லோகன் அழைத்துப் போனார். மதகுகளின் எண் பொருத்தப்பட்ட இரும்புத் திருகையை கவர்னர் வென்லாக் திருகியதும், மேகம் திறந்தது போல தண்ணீர் கொட்டியது.
பாற்கடல் திறந்து கொண்டதுபோல் மதகுகள் வழியாக தண்ணீர் கடல் அலையின் சீற்றத்துடன் பொங்கி வழிவதைப் பார்த்த பென்னிகுக்கும் ஜார்ஜினாவும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.
அணையின் நீர் மலையைக் குடைந்து பொருத்தப்பட்ட நீண்ட பெருங்குழாய்கள் வழியாக ஆர்ப்பரித்து  வைரவன் ஆற்றிலும் சுருளியாற்றிலும் கலந்து முடிவில் வைகையாறுடன் இணைந்தது.
கம்பம் பகுதி மக்களுக்கு ஆகாயத்திலிருந்து கடவுள் தன் வெண்ணிறமான உள்ளங்கையினால் தங்களுக்கெல்லாம் நீர் பாலிப்பது போலிருந்தது. நீரின் வேகத்தில், மலையின் பல சந்தன மரங்கள் அவர்கள் ஆற்று நீரில்  அடித்து வரப்படும் காட்சி அவர்களுக்கு சுப சகுனமாகத் தோன்றியது. தங்கள் வம்சத்தில் இனி யாருக்கும் வறட்சி என்பதே இல்லை என்று கூக்குரலிட்டார்கள் பலர்.
கம்பம் விவசாயிகள் தாங்கள் பென்னித்துரைக்கு அன்பளிப்பாகச் செய்த தங்கத்தாலான  தாம்பாளத்தையும், வெற்றிலை பாக்கையும், எலுமிச்சையையும் கண்களில் ஆனந்த நீர் மல்க, பென்னிகுக்கின் பெயரைச் சொல்லிக் கொண்டே  ஓடும் நீரில் காணிக்கையாக்கினர். சூரிய ஒளியில் நனைந்த நீரலைகள் பெரும் பசியுடன் அவர்கள் தந்த சொர்ண காணிக்கையைத் தின்று கொண்டே சென்றன.

வருடம்: கி.பி. 2013 (ஜனவரி 15)

பன்னீர் செல்வமும் பெரியசாமியும் விழா நடக்கும் இடத்திற்கு வெகு தூரத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது முதலமைச்சர் தன்னுடைய உரையை ஆரம்பித்திருந்தார்.
"முல்லைப் பெரியார் அணையின் கதை 1798-ல் துவங்குகிறது. இராமநாதபுர சீமையை ஆண்ட சேதுபதி மன்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் வீணாக அரபிக் கடலில் கலந்து கொண்டிருந்தது கண்டு மனம் வெதும்பினார். வீணாக கடலில் கலந்து கொண்டிருந்த நீரை கிழக்கு நோக்கித் தென்தமிழகப் பகுதிகளுக்குத் திருப்பி விட்டால், பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த நீர் வரப்பிரசாதமாக அமையும். பருவ மழை தப்பிப் போய் வறண்ட இந்த நிலப்பகுதி நீர்வளம் பெறும். மானாவாரி விவசாயம் செய்து கொண்டிருக்கும் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வு வளம் பெறும் என்று நினைத்து இதற்காக ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்குமாறு தன் அமைச்சர் முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு மலையில் தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. ஆனால், போதுமான நிதி வசதியின்றி இந்த திட்டத்தை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 
பின்னர் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் இந்தத் திட்டத்தை முயன்று பார்த்து இது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்று கைவிட்டு விட்டனர். ஏனெனில், மலையின் மேற்கு பகுதியில் இருந்து தண்ணீரை மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்ப வேண்டும். இந்த முயற்சி கற்பனைக்கெட்டாத மனித உழைப்பையும், நிதியையும் கோருவது. இவை யாவற்றுக்கும் மேலாக எலும்பை ஊடுருவும் குளிரும், காட்டாற்று வெள்ளங்களும், வன விலங்குகளும் இந்த திட்டத்தை ஏட்டளவில் மட்டுமே வைத்திருந்தது.
இராமநாதபுரத்து சேதுபதி மன்னர் கண்ட பெருங்கனவினை நூறாண்டுகள் கழித்து லண்டனிலிருந்து வந்த ஒரு இன்ஜினியர் நிஜமாக்கினார். அவர்தான் கர்னல் ஜான் பென்னிகுக்.
பெரியார் அணையின் திட்ட அதிகாரியாக அவர் பொறுப்பேற்றது முதல் அசாத்தியங்களையெல்லாம் சாத்தியமாக்கத் துவங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிவகிரி என்ற சிகரத்தில் உற்பத்தியாகும் பெரியாறு அச்சிகரத்தின் நாற்பத்து எட்டாவது கிலோமீட்டரில் முல்லை என்னும் சிற்றாறுடன் கலக்கிறது. பின்னர் வீணாக வழிந்து அரபிக்கடலில் கலக்கிறது.
இந்த இடத்தில் அணை கட்டிவிட்டால் இன்றைய தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்ற தகவலை பிரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் மாகாணத்திற்கு தெரியப்படுத்தினார். அணைக்காக எட்டாயிரம் ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. அணை இருக்குமிடம் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமானதாகையால் எட்டாயிரம் ஏக்கர் நிலத்தையும் ஆண்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் வீதத்தில் 999 வருடங்களுக்கு குத்தகைக்குஎடுத்தது அன்றைய ஆங்கில அரசு. அணைக்கான நிலம் வாங்கியவுடன், அணையைக் கட்டுவதற்கு 75 லட்ச ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டது.
மற்ற அணைகளில் இருந்து இந்த முல்லை பெரியாறு அணை முற்றிலும் வேறுபட்டது. இதன் சிறப்பம்சமே, கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மலையைக் குடைந்து குகை வழியாக நீர்வழிப் பாதை அமைத்ததுதான்.
பென்னிகுக்கின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு பகல் பாராமால் உழைத்து அணையைக் கட்டினர். ஆனால், அணை கட்டத் துவங்கிய மூன்று ஆண்டுகளில் எதிர்பாராது வந்த ஒரு காட்டாற்று வெள்ளத்தில் அணை முழுதும் சேதமாகியது. துவண்டு போன பென்னிகுக், தடுப்பணைகள்  கட்டாததால்தான் இந்த சேதம் நிகழ்ந்தது என்று ஆராய்ந்து தடுப்பணை கட்டுவதற்கு நிதி கோரி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். ஆனால், ஆங்கில அரசோ இந்த அணைக்கு இனியும் நிதி ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. பல இரவுகள் தூக்கமில்லாமல் துவண்டிருந்த பென்னிகுக் தன் மனைவியின் ஆறுதல் வார்த்தைகளால் மீண்டும் நம்பிக்கையுடன் அணை கட்டும் வேலையைத் துவங்கினார். ஆனால், அதற்காக அவர் இங்கிலாந்தில் இருந்த அவரது சொத்துகள் மற்றும் மனைவியின்  நகைகள் என்று அனைத்தையும் விற்று தன் சொந்த செலவில் அணையைக் கட்டி முடித்தார்.
இங்கிலாந்திலிருந்து இந்தியாவை ஆண்ட பல ஆங்கில அதிகாரிகள் இங்கிருக்கும் செல்வத்தைச் சுரண்டி  அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்ற காலகட்டத்தில், இந்த பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக  இங்கிலாந்தில் இருந்த தன்னுடைய சொத்தை விற்று இந்த அணையைக் கட்டிக் கொடுத்த பென்னிகுக் அவர்களுக்கு என்ன செய்து நாம் நமது நன்றியைத் தெரிவிக்க இயலும்?
பென்னிகுக் அவர்களை யார் மறந்தாலும் இந்த தேனி மாவட்ட மக்கள் அவரை இன்றும் மறக்கவில்லை. இந்த மக்களின் நாடி நரம்புகளில் ரத்தத்தைப் போல பென்னிகுக்கின்பெயரும் கலந்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் இருக்கும் பல கடைகளில் பென்னிகுக்கின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இன்றளவும் பென்னிகுக் என்றும் லோகன்துரை என்றும் பெயர் சூட்டுகிறார்கள். பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் இன்றும் மக்கள் பென்னிகுக்கின் பிறந்த நாளான ஜனவரி பதினைந்தாம் நாள்தான் பொங்கல் கொண்டாடுகின்றனர்.
பென்னிகுக்கின் அரிய சேவையை நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தும், அவர் இந்த மண்ணுக்கு வழங்கிய நீர் தானத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள  'லோயர் கேம்ப்' என்ற இந்த ஊரில் அவரது வெண்கல உருவச் சிலையுடன் கூடிய  நினைவு மணிமண்டபத்தை 2.2 ஏக்கரில், ரூபாய் 1 கோடியே 25 லட்சத்தில் நிறுவியிருக்கிறது இந்த அரசு. இந்த மாமனிதரின் திருஉருவச் சிலையைத் திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்வடைகிறேன் என்று சொல்லி தன் உரையை முடித்துக் கொண்ட முதல்வர் தன்முன் பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பென்னிகுக்கின் திரு உருவச் சிலையைத் திறந்து வைத்தார். இடைவிடாத கைதட்டல்களும் பெண்களின் குலவிச் சத்தமும் காற்றை அழுத்தும் ஒரு உற்சாகத் தருணத்தில்,ஒளியுடன் வெளிவந்தார் பென்னிகுக்.
உறுதியான வெண்கலச் சிலையினுள் இருந்து தான் நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன் சஞ்சரித்த நிலப்பகுதியை மாறாத புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பென்னிகுக். நீர் இருக்கும் வரை நீர் இருப்பீர் என்ற வாசகம் அவரது பாதத்திற்கடியில் பொறிக்கப் பட்டிருந்தது.

தூரத்தில் இருந்து பார்த்த பெரியசாமிக்கும் பன்னீருக்கும் பென்னிகுக் சிலையின் நெற்றிப்பகுதி மட்டுமே தென்பட்டது. அதற்குமேல் போகாதவாறு அதிகாரத்தின் சங்கிலி அவர்களை கட்டிப் போட்டிருந்தது. எங்கும் ஜனக்காடு வேறு. மெல்ல மெல்ல கூட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
விழா நடந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தூரம் முழுக்க கண்ணுக்கெட்டிய வரை காக்கிச் சட்டைகளே தென்பட்டன. தார் ரோட்டில் மழைத் தூறல்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தன. வெண்மணல் எங்கும் அம்மைத் தழும்புகள் போல் நீர்ச்சொட்டுகள் மிகுந்திருந்தன. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளிக்கு அருகே வரும்வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

பள்ளிக்கு எதிரில் ‘கலைக்குடில்’ என்ற பெயருள்ள தன் வீட்டின் முன்பாக நாராயணசாமி வாத்தியார் நின்று கொண்டிருந்தார். அவரை பன்னீர் செல்வம் பார்த்தே பல நாட்கள் ஆகியிருந்தன.கனவினில் தோன்றும் வெளிச்சம் போல அவர் புன்னகை மின்னியது. வேகமாக அவர்களை நோக்கி கைகளை ஆட்டிக்கொண்டே தெருமுனையில் சென்று மறைந்தார்.  ஏனோ அவரை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று பன்னீர் செல்வத்துக்குத் தோன்றியது. 
இன்னும் கொஞ்சம் முன்னே நடந்து பெட்ரோல் பங்க்கருகே வந்தனர். தனது ஆதரவாளர்களுடன் அருணாச்சலம் லோயர் கேம்ப் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.
என்ன வாத்தியாரே, முதலமைச்சரு செலையத் திறந்து வச்சிட்டாரா என்று கேட்டுகொண்டே அவர்கள் அருகே வந்தார் அவர்.
பிரெஸிடென்ட் அய்யா! என்ன இப்பிடிப் பண்ணிப்புட்டீக! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் முதல்வரு உங்கள எதிர்பார்த்துகிட்டே இருந்தாரு. நீங்க கடைசி வரைக்கும் வரலன்னதும் மனசில்லாமத்தான் செலையத் திறந்து வைச்சாங்க என்ற பன்னீரை முறைத்தார் அருணாச்சலம்.
நம்மள எங்க உள்ள விட்டாங்க? ஒரு வாரமா போலீசும் கட்சிகாரங்களும்தான் இந்த ஊரையே குத்தகைக்கு எடுத்துகிட்டாங்களே என்று வருத்தப்பட்டார் பெரியசாமி.
விடுங்க சார். நம்ம பென்னிகுக் நம்ம ஊருக்கே வந்துட்டாரு. நிதானமாப் போய் மனசாரப் பாத்துக்கலாம். என்ன ஒண்ணு? அவரோட கொள்ளுப் பேரன்தான் வரமுடியாமப் போச்சு. பன்னீரின் குரலில் விரக்தி தட்டியது.
விடப்பா! அவருதான் அடுத்த தடவை வந்து நம்மள சந்திக்கிறதா பதில் எழுதிருக்காருல. நம்ம நன்றிக்கு அடையாளமா நாம அவருக்கு இந்த விழாவப்பத்தி எழுதியாச்சு. அதுவே போதும் என்று பெரியசாமி சொல்லிக் கொண்டிருந்தபோது முதல்வரின் ஹெலிகாப்டர் வானில் வட்டமடித்தது. அதன் பிறகான சில நிமிடங்களில் சாரை சாரையாக செல்லும் எறும்புகளைப் போல கட்சிக்காரர்களின் வாகனங்கள் ஊரை விட்டு விலகிய சாலையில் விரைந்து கொண்டிருந்தன.
நம்ம எம்.எல்.ஏ போறான் பாரு. அவன் மூஞ்சிய நல்லாப் பாத்துக்க. இப்ப போறவன்தான். இனி அஞ்சு வருசத்துக்கு இந்த திசைப் பக்கம் கூட தலவச்சுப் படுக்க மாட்டான். தனக்குத் தோன்றிய ஒரு கெட்ட வார்த்தையை பிரெஸிடென்ட் உச்சரித்ததும் அவருடன் வந்தவர்கள் வழித்துக் கொண்டு சிரித்தனர்.
பேசிகொண்டே அவர்கள் மாரியின் டீக்கடைக்கு வந்து சேர்ந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த சந்தோசத்தில் மாரியின் பிடறி சிலிர்த்தது. வாங்க வாங்க! இந்த ஊர்ல எந்த மூலைக்குப்போனாலும் கடைசில என் கடைக்குத்தான வந்தாகணும், என்று கூவினான்.
பன்னீருக்கு நக்கல் நாட்டியமாடியது. ஆமாண்டா! மனுஷன் எங்கெங்க எப்புடியெல்லாம் வாழ்ந்தாலும் செத்த பெறகு சுடுகாட்டுக்குத் தான வந்தாகணும்.
கூடியிருந்தவர்களின் இடிச் சிரிப்பில் பங்கு பெறுவதற்காக அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த பால் , தானும் பொங்கி நகைத்தது. 
மாரியும் சிரித்துக் கொண்டே பன்னீரின் டீயில் மட்டும் கொஞ்சம் டிக்காஸினைக் கலந்தான்.
நெடுநேரம் கழித்து பிரெஸிடென்ட் மட்டும் மெதுவாகக் கேட்டார். வாத்தியாரே! இந்த அணைக்கு இப்ப வந்துருக்கற பிரச்சனைய பத்தி பென்னிகுக் தொரைக்குத் தெரிஞ்சா அவரு மனசு எவ்வளவு வேதனைப்படும்?
டீயை சத்தமாக உறிஞ்சியபடியே பெரியசாமி பேசினார். கவலப்படத் தேவையில்ல பிரெஸிடென்டு. அவரு எத்தனப் பிரச்சனையப் பாத்திருப்பாரு? ராமனோட கதையை யாரு எங்க பேசுனாலும் அந்த இடத்துல சூட்சும ரூபத்தில அனுமாரு இருந்து கேப்பாராம். ‘பாஷ்பவாரி பரிபூரண லேசனம்’னு சொல்வாக சமஸ்கிருதத்தில. நம்ம பென்னித்துரையோட ஆவியும் இந்தக் காத்துலக் கலந்திருக்குயா. நம்ம தாத்தா பாட்டியக் காப்பத்துனவரு நம்மளக் காப்பாத்த மாட்டாரா?  
 
வெகு தூரத்திற்கு அப்பால் ஆளரவமற்ற மணிமண்டபத்தில் பென்னிகுக் தனியாக நின்றிருந்தார். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்திருந்த பழைய நண்பனை ஆசையுடன் அணைத்துக் கொண்டன நீர்த் துளிகள். உற்சாக மிகுதியில் 'ஹோ' என்ற இரைச்சலுடன் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறப்பெடுத்த குளிர்காற்று, முல்லைப் பெரியாறு அணையில் நிசப்தமாக இருந்த நீர்பரப்பின் அடியாழத்தில் கலந்து மீண்டும் பேரிரைச்சலுடன் எழுந்து வழிமுழுதும் உள்ள சந்தன மரங்களையும், தேக்கு மரங்களையும் கடந்து மணிமண்டபத்தில் மழைத்துளிகள் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த பென்னிகுக்கின் மார்பில் விசையுடன் மோதியது. தைல மணமுள்ள காற்று பட்டதும் அவர் அணிந்திருந்த மலர் மாலையில் இருந்த ரோஜாப் பூவொன்று குறுஞ்சிரிப்புடன் தரையை நோக்கிப் பாய்ந்தது.

(முற்றும்)

  
கதைக்கு உதவியவை
1.        வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம் – சி.மகேந்திரன் – விகடன் பதிப்பகம்
2.        துணையெழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன் (நீரில் மிதக்கும் நினைவுகள்)- விகடன் பதிப்பகம்
3.        தினமலர் செய்திகள்
4.        இணையச் சுட்டிகள்
  1.    தேனி மாவட்ட மக்கள்.