செவ்வாய், 30 அக்டோபர், 2012



என் கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

     

எழுதியவர்- கணேஷ்


    சில வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருந்த போது, எழுத்தாளர் அசோகமித்திரன் இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரை செய்திருந்த பத்து புத்தகங்களில் நாமக்கல் கவிஞரின் "என் கதை" என்ற புத்தகமும் இடம்பெற்றிருந்ததைக் கண்டேன். அதன் பிறகான சில நாட்களில், சிங்கப்பூர் நூலகத்தில் துழாவிக் கொண்டிருந்தபோது தற்செயலாக இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.
இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் நாமக்கல் கவிஞரைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும், "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்", "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது" போன்ற எளிய சந்தங்களினால் அமையப் பெற்ற பாட்டுக்கள் புனைந்தவர் என்பதும், "தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!" என்ற புகழ் வாய்ந்த வரியினைத் தமிழர்களுக்கு அளித்தவர் என்பதும்தான். கூடுதலாக, இவரைக் கெளரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு "செயின்ட் ஜார்ஜ்" கோட்டையில் சட்டசபைக்கு அருகில் உள்ள ஒரு மாளிகைக்கு இவரது பெயரைச் சூட்டியிருப்பதும் தெரியும். பிறகு, 2002-ஆம் வருடம்,கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நண்பன் வள்ளியப்பன் என்னுடைய பிறந்த நாளிற்கு நாமக்கல் கவிஞர் எழுதிய "அவனும் அவளும்" என்ற செய்யுள் வடிவில் அமைந்த புதினத்தைப் பரிசளித்தான். மிகவும் எளிய நடையில் அமைந்த புதினம் அது. இவ்வளவுதான் கவிஞரைப் பற்றி எனக்கிருந்த அறிமுகம்.





     "என் கதை" என்ற இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, கவிஞரைப் பற்றி நிறையவே தெரிந்துகொள்ள முடிந்தது. "என் கதை" நாமக்கல் கவிஞரின் சுய சரிதை. புத்தகத்தின் பின் அட்டையில் "இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுய சரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் "என் கதையும்" ஒன்று, என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. பொதுவாக நூலின் பின்னட்டையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்களை நான் நம்புவதில்லை. ஒரு நூலை முழுவதுமாகப் படித்து முடித்து புத்தகத்தை மூடுகையில், வாசகனுக்கு திருப்தியுடன் கூடிய ஒரு சின்ன புன்னகை அல்லது ஒரு சிறிய துக்கம், இவை இரண்டில் ஒரு உணர்ச்சியாவது தோன்றினால்தான் என் நோக்கில் ஒரு புத்தகம் சிறந்த புத்தகம் என்று பொருள்படும். விதிவிலக்காக, சில பேரிலக்கியங்களும், கூர்மையான மொழியில் எழுதப்பட்ட புதினங்களும் பிரம்மாண்டமான வெறுமையைத் தோற்றுவிப்பதுமுண்டு. சில உதாரணங்களாக, சிலப்பதிகாரம், கொற்றவை, ஏழாம் உலகம், நெடுங்குருதி போன்ற பிரதிகளைச் சொல்லலாம்.இந்தப் புத்தகம் எனக்குள் புன்னகையையும், அதிர்ச்சியையும், மெல்லிய துக்கத்தையும் அதன் பல பக்கங்கள் வழியாகப் புகுத்திக் கொண்டிருந்தது. எளிய உரைநடை, இனிய தமிழ், இவை யாவற்றிற்கும் மேலாக எழுத்தில் உண்மை, இவைதான் இந்தப் புத்தகத்தை மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர வைக்கிறது.

  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையை ஒரு கவிஞர் என்ற அளவில்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், ஆச்சர்யமாக அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்பதும், ஒவியம் வரைதலையே தொழிலாகக் கொண்டிருந்தார் என்பதும், இந்த புத்தகத்தின் மூலமாக அறிய முடிகிறது. மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் போது, வெங்கடாசலம் என்ற நண்பரால் இவர் ஒரு ஓவியர் என்றுதான் அறிமுகப்படுத்தப்படுகிறார்.உச்சிப் பாறையிலிருந்து வீழும் நீர்போல, தன்னுடைய வாழ்க்கையை வேகமாகவும் சரளமாகவும் சொல்லிச் சென்று கொண்டேஇருக்கிறார்,கவிஞர்.பள்ளி வாழ்க்கையில், வகுப்பில் அமர்ந்து கொண்டிருக்கும்போதெல்லாம் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைவதும், ஒரு சமயம் தன்னுடைய வெள்ளைக்கார ஆசிரியரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியரே அதைப் பார்க்க நேர்ந்து, கவிஞரைத் தனியே தன்னைச் சந்திக்க வரும்படி அழைத்து, அவருக்கு கெட்டி அட்டையிலான ஆங்கில 'பைபிள்' புத்தகமும் ஒரு விலையுயர்ந்த பேனாவும் பரிசளித்து அவரை ஆச்சர்யப்படுத்துவதும் மிகவும் அங்கதத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

   சுய சரிதமாய் இருப்பினும் இந்த நூலின் அழகே, இது அதன் பல பகுதிகளில் புனைவைத் தொட்டுச் தொட்டுச் சென்று மீள்வதுதான். உதாரணத்திற்கு, கவிஞரின் அம்மா அவரது தெருவில் எல்லோரையும் பயமுறுத்தி வந்த பேயை ஓட ஓட விரட்டியது. மிகச் சில சந்தர்ப்பங்களில்தான், இத்தகைய காட்சிகளை நாம் நிஜ வாழ்க்கையில் காண முடிகிறது.

  ஓவியம்தான் கவிஞரின் பிரதான விருப்பமாகவும், பொருளீட்டித் தரக்கூடிய தொழிலாகவும் இருந்திருக்கிறது. தனது அபாரமான ஓவியத் திறமையினால் பல நண்பர்களையும் பெறுவதற்கரிய பல வாய்ப்புகளையும் கவிஞர் பெற்றிருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஓவியப் போட்டியில் கவிஞரின் ஓவியம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதையொட்டி கவிஞருக்கு டெல்லியில் அரச விருந்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. நாமக்கல் நகரின் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தன்னுடைய இறந்து போன மகளை படம் வரைந்து தருமாறு வேண்ட, கவிஞரும் அச்சிறுமியை தத்ரூபமாக வரைந்து  தருகிறார். அந்தப் படத்தை வெகுநேரம் உற்றுப் பார்த்தபின் அந்த அதிகாரி ஆனந்த வாருதியில் திளைத்து, கண்ணீர் மல்க கவிஞரைத் தழுவிக் கொண்டு பாராட்டி வாழ்த்துகிறார்.ஆனால், கவிஞரின் இந்த அபாரமான ஓவியத் திறமையை அவரது தந்தை அங்கீகரிக்கவே இல்லை. அவரது ஆசையெல்லாம் தன்னுடைய மகன் தன்னைப் போலவே ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே. அதற்காக அவர் பெரிதும் வருந்தி உழைக்கிறார். தன்னுடைய உயரதிகாரியான ஒரு ஆங்கிலேயரைத் தொடர்பு கொண்டு, சிபாரிசு பெற்று, தன் மகனிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார். ஆனால், கவிஞரோ போலீஸ் பணியில் தமக்கு நாட்டமில்லை என்று சொல்லிவிடுகிறார். தன்னுடைய மகன் போலீஸ் பணியை ஏற்க மறுத்தது கடைசிவரை ஒரு வடுவாகவே தங்கி விடுகிறது அவரது தந்தையின் மனதில்.

 இளமையில் , கோயம்புத்தூரில் படித்துக் கொண்டிருந்தபோது  தன்னுடைய நண்பனின் முறைப்பெண் சீதா என்ற பெண்ணிடம் தாம் கொண்ட மாசற்ற அன்பினையும்,  அது கடைசியில் ஒரு துயரமாக உருமாறி விடுவதையும் நெகிழ்வுற சித்தரிக்கிறார் கவிஞர். அந்த பெண்ணையும் அவள்மேல் தான் கொண்ட அன்பினையும் தெய்வீகத் தன்மைக்கு நெருக்கமாக நகர்த்திச் செல்கிறார். ஒரு வரியில் கூட 'காதல்' என்ற வார்த்தையையே கவிஞர் உபயோகிக்கவில்லை. முதிரா பருவத்தில் கொண்ட மாசற்ற அன்பு என்றே அந்த உறவு விவரிக்கப் படுகிறது. இருவரும் பிரிந்த பின், பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு ரயிலடியில் 'சீதா' என்ற அந்த பெண்ணை, குழந்தைகளுடன் கைம்பெண் கோலத்தில் பார்க்க நேர்கிறபோது கவிஞரின் துக்கம் சொல்லில் அடங்காததாகி விடுகிறது. அந்த காட்சியைக் கடக்கும்போது வாசகன் மனதிலும் அந்த வெம்மை படர்ந்து எரிகிறது.

  நூலின் ஆகச்சிறந்த கவித்துவ தருணமாகவும் இந்த உண்மைச் சம்பவம் அமைந்து விடுகிறது. அதன் பிறகான சில வருடங்கள் கழித்து, சீதா என்ற அந்தப் பெண்ணும் மரணமடைந்து விடுகிறார். இந்த இளவயதுக் காதலும், அது சென்று மறைந்த திசையும் ஒரு பேரிலக்கியத்தை வாசித்த வெறுமையை அளிக்கிறது. இது போல பல சம்பவங்கள் புனைவிற்கு நெருக்கமாக இருப்பதால்தான் ,இந்தக் கதை "சுய சரிதை" என்ற வகைமையையும் மீறி ஒரு முக்கியமான ஆக்கமாகத் தோற்றமளிக்கிறது.

  இந்த நூலில் முக்கியமாக நான் கவனித்தது, நாடறிந்த கவிஞரான இவர், தனது இலக்கியப் பணிகளைப் பற்றியோ, தனது இலக்கிய ஆர்வம் வளர்ந்து வந்த முறை பற்றியோ, தனது கவிதைகளைப் பற்றியோ விளக்கமாக எந்த இடத்திலும் விவரிக்கவே இல்லை என்பதுதான். கவிஞரின் கவனம் தனது வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலேயே நின்று விடுகிறது. ஒரு இடத்தில் மட்டும், திருக்குறளில், இரு குறள்களுக்கு, வித்தியாசமாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் தான் கண்டடைந்த விளக்கங்களை மிகவும் எளிமையாகப் பதிவு செய்கிறார். பரிமேலழகரின் உரை மட்டுமே அக்காலத்தில் திருக்குறளைப் புரிந்து கொள்வதற்கு இருந்த ஒரே கருவியாய் இருந்ததினால், பல அறிஞர்களுக்கும் பரிமேலழகரின், சில விளக்கங்கள் ஏற்றுக் கொள்ள  முடியாததாகவும்,மூல ஆசிரியரின் நோக்கத்திற்கு நெருக்கமாக இல்லாதிருந்ததாகவும் தோன்றுவதால், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் இந்த தனது  உரையினை முன்வைக்கிறார்.
அந்த இரு குறள்களும், அதற்கு முறையே பரிமேலழகரின் உரையும், நாமக்கல் கவிஞரின் உரையும் சுருக்கமாக கீழே தரப்பட்டிருக்கிறது.

          "குன்றேறி யானைப் போர்கண்டற்றால் தன்கைத்தொன்
       றுண்டாகச் செய்வான் வினை"

 பரிமேலழகர் உரை: (சுருக்கமாக) பிறர் பொருளை நம்பாமல், தன் சொந்த முயற்சியால்   பொருள் தேடிக் கொள்பவன் மலையின் மேலிருந்து யானைச் சண்டையைப் பார்ப்பவன் போல் அச்சமின்றி பிறரை ஏவிவிட்டுத் தான் சுகமாகச் சும்மா இருந்து சம்பாதித்துக் கொள்வான்.

  நாமக்கல் கவிஞருக்கும், அவரோடு சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த தீரர் சத்தியமூர்த்தி முதலான நண்பர்களுக்கும், பரிமேலழகரின் இந்த உரை ஏற்புடையதாக இல்லை. தன் முயற்சியால் பொருளைத் தேடிக் கொள்ளவேண்டும் என்ற பொருளைப் புகட்டவரும் வள்ளுவரின் இந்தக் குறளுக்கு பரிமேலழகரின் உரை, பொருத்தமில்லாமல் இருக்கிறது என்ற முடிவிற்கு வந்ததனால், கவிஞர் கீழ்க்கண்ட தமது உரையை முன்வைக்கிறார்.

நாமக்கல் கவிஞரின் உரை: இந்தக் குறளில் இடம்பெற்றுள்ள "கண்டற்றால்" என்ற சொல்லில் உள்ள, "காண்" என்பதற்கு"கண்ணால் காண்பது" என்ற பொருளும், "செய்வது" என்ற பொருளும் இருக்கின்றன. இவற்றுள், பரிமேலழகர், "கண்ணால் காண்பது" என்ற பொருளை அவரது உரையில் பயன்படுத்துகிறார். உண்மையில்,"செய்வது" என்ற பொருளைத்தான் இந்த உரையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதனால்,இந்தக் குறளிற்கு"பிறருடைய பணத்தையோ, பலத்தையோ மட்டும் நம்பிவிடாமல், தன்னுடைய சொந்த முதலைக்கொண்டும் சொந்த முயற்சியை நம்பியும், பொருள் சம்பாதிக்கும் காரியத்தில் இறங்குகின்றவன், உயரமான குன்றில் இருந்துகொண்டு கீழே இருக்கும் யானையோடு போர் செய்து, வெல்ல முயற்சிப்பதைப் போல நிச்சயமாக வெல்லுவான்." என்ற உரையே பொருத்தமானதாக அமைகிறது. யானையை வெல்ல முடியாவிட்டாலும் அபாயமில்லை. மேலும் சமநிலத்தில் யானையை வெல்ல முடியாது. ஆனால், உயரத்தில் இருந்து கொண்டு பள்ளத்தில் உள்ள யானையோடு பொருதும் போது, பள்ளத்தில் உள்ள யானையால் உயரத்தில் இருக்கும் மனிதனை ஒன்றும் செய்ய முடியாது.
மற்றும் ஒரு குறளிற்கும் கவிஞர் புத்துரை காண்கிறார்.
  
 "உண்ணாமை உள்ளதுயிர்நிலை ஊனுண்ண
       அண்ணாத்தல் செய்யாது அளறு"

பரிமேலழகர் உரை: (சுருக்கமாக) புலால் உண்ணாமையே மாந்தர்க்கு உயிர் நிலை எனப்படும் அறமாகும். பிற உயிரின் ஊனுண்ண நரகம் (அளறு) கூட வாய் திறக்காது.

நாமக்கல் கவிஞரின் உரை: பரிமேலழகரின் உரையில் " நரகம் (அளறு) கூட பிற உயிரின் ஊனை தின்பதற்கு வாய் திறக்காது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நரகம் கூட வாய் திறந்து தின்னாத ஒன்றினை மனிதர் ஏன் தின்ன வேண்டும்" என்ற மறைவான பொருளினையும், பரிமேலழகரின் உரை உணர்த்துகிறது. ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில், நரகம் ஏன் புலால் உண்ணவேண்டும்? நரகம் எதற்காக புலால் உண்ணாமையோடு ஒப்பிடப் பட்டிருக்கிறது? இந்தக் குறளின், பொருள் இப்படி இருந்தால் மூல ஆசிரியன் சொல்ல வந்த கருத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்.  அதாவது "புலால் உண்ணாமையே மாந்தர்க்கு உயிர் நிலை எனப்படும் அறமாகும். அந்த அறத்தையும் மீறி, புலால் உண்பவர்களை ஏற்றுக் கொள்ள நரகம் கூட வாய் திறக்காது. அதாவது , புலால் உண்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்ற கூரிய பொருள் இதன்மூலம் நமக்கு கிட்டுகிறது.

மேற்சொன்ன இரு குறட்பாக்களுக்கும் தான் கண்டடைந்த புதிய விளக்கங்களோடு தன்னுடைய தமிழ் ஆசிரியரும் தமிழறிஞருமான ஸ்ரீ ஆனையப்ப முதலியார் அவர்களிடம் விவாதிக்கிறார் கவிஞர். தன்னுடைய மாணவனின் புது உரையினையும் அந்த உரையானதுப் பரிமேலழகரின் உரையினைக் காட்டிலும் வள்ளுவரின் குறளிற்கு மிகவும் பொருந்திப் போயிருப்பதையும் கண்டு தன் மாணவனின் தமிழ் ஆற்றலையும் மெய்ப்பொருள் காணும் திறத்தினையும் சிலாகித்து மகிழ்கிறார்  ஸ்ரீ ஆனையப்ப முதலியார். .

கவிஞரின் வறுமை நிலையும் அவருக்கிருந்த கடன் தொல்லைகளும் இந்த சுய சரிதையில் மறைக்காமல் சொல்லப்பட்டிருக்கின்றன. கடன் தொல்லைகளிலிருந்து மீள முடியாமல் கவிஞர் திண்டாடும் போது, கவிஞரின் பணக்கார நண்பர்களான இருவர், கவிஞரின் கடனை முழுதும் தான் தீர்த்து வைப்பதாக வாக்களித்துச் செல்கிறார்கள். ஆனால், துர்பாக்கியமாக, அவர்கள் இருவராலும் அது முடியவில்லை. ஒருவர் அடுத்த நாளே, போலீசாரால், கைது செய்து பத்தாண்டுகள் சிறை வைக்கப்படுகிறார். இன்னொருவரோ, பணம் தருவதாக சொன்ன நாளில் மாரடைப்பால் இறந்து விடுகிறார். இச்சம்பவங்களின் மூலம் தன்னுடைய வாழ்வில் 'அதிர்ஷ்டம்' என்பதே இல்லை என்று கவிஞர் முடிவு கட்டுகிறார்.
     
தன் வாழ்வில் நடந்த நம்பமுடியாத சாகசங்களையும், நகைச்சுவை சம்பவங்களையும் இந்த நூலில் கவிஞர் விவரித்திருக்கிறார். உதாரணமாக, கவிஞரும் அவருடைய நண்பர் மாணிக்கம் நாயக்கரும், லாகூருக்கு அருகில் ஆப்கன் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு, சாதுர்யமாக தப்பித்துச் செல்லுதல். அதிக பணம் கேட்டு மிரட்டும் வடநாட்டு கோயில் பூசாரிகளிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பிப்பதும் புனைவில் மட்டுமே நடக்க சாத்தியமானவைகளாகத் தோன்றுகின்றன.
நூலின் இறுதி அத்தியாயமாக "பாரதி தரிசனம்". பாரதியின் மீதுள்ள அபாரமான பிரியத்தினால், கவிஞர் அவரை பலமுறை சந்திக்க முயன்று, பின் ஏதேதோ காரணங்களால் கவிஞருக்கு பாரதியைச் சந்திக்க முடியாமலே போய்விடுகிறது. பாரதியின் உறவுக்காரரான வெங்கடாசலம் என்பவர் நாமக்கல் கவிஞருக்கும் நெருங்கிய நண்பராவார். ஒருமுறை நாமக்கல் கவிஞர் காரைக்குடியில் ஒரு வேலையாய்ச் சென்றிருக்கும்போது, காரைக்குடிக்கு அருகில் இருக்கும் "கானாடுகாத்தான்" என்ற ஊருக்கு பாரதியார் வருகை தந்திருப்பதாக வெங்கடாசலம் தகவல் சொல்லவே, நாமக்கல் கவிஞரும் இதுதான் பாரதியைச் சந்திக்க தக்க தருணம் என்றெண்ணி வெங்கடாசலத்தையும் கூட்டிக்கொண்டு ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்தி கானாடுகாத்தான் செல்கிறார். செல்லும் வழியெல்லாம் பாரதியாரிடம் என்னென்ன பேசலாம் என்று முன்திட்டங்களெல்லாம் போட்டுக்கொண்டு போகிறார்கள்.
        இருள் அடரத் துவங்கிய மாலை வேளையில், கானாடுகாத்தான் ஆற்றங்கரையில் பாரதியார் சில நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் இருவரும் பாரதியாரைச் சந்திக்கிறார்கள். வெங்கடாசலம் பாரதியாரின் உறவுக்காரர் என்பதால், அவரைக் கண்டதும் பாரதி முகமலர்ந்து "அடே, வெங்கடாசலம்! நீயெங்கே இங்கே வந்தாய்? என்று அவரோடு பேசத் துவங்கி விடுகிறார். நீண்ட உரையாடலுக்குப் பின், வெங்கடாசலம் பாரதியாருக்கு கவிஞரை அறிமுகம் செய்து வைக்கிறார். "இவர்தான் ஸ்ரீ இராமலிங்கம் பிள்ளை. ஆர்டிஸ்ட்" என்று. உடனே, பாரதியார், இவரைப் பார்த்து, "அப்படியா? ஓவியரே! நீர் எம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று கம்பீரமாகச் சொல்லுகிறார். இராமலிங்கம் பிள்ளை ஒரு நல்ல கவிஞரும் கூட என்று அறிந்தவுடன், பாரதியார் நாமக்கல் கவிஞரை ஒரு பாடல் பாடிக் காட்டுமாறு வேண்டுகிறார்.



பாரதியாரைக் கண்டு, உன்மத்த நிலையில் இருந்த கவிஞருக்கோ பேசுவதற்கு வார்த்தைகளே வெளிவரவில்லை. ஒருவாராக, தன்னைத் திரட்டிக்கொண்டு, தன்னுடைய நெடுங்கவிதை ஒன்றை பாடிக் காட்டுகிறார் கவிஞர். கவிஞரின் பாடலைக் கேட்டு உற்சாகம் பொங்க, கவிஞரை வாழ்த்திப் பாராட்டுகிறார் பாரதியார். ஒரு மகா கவியின் முன்பு நின்று கொண்டு தன்னுடைய கவிதையைப் பாடிக் காட்டி, அவரிடமே பாராட்டு பெற்ற அந்த தருணம் ஒரு கனவு போலவே இருந்ததாகப் பதிவு செய்கிறார் நாமக்கல் கவிஞர். அதன்பிறகு, கவிஞர் பாரதியிடம் தயங்கியவாறே ஒரு பாடலைப் பாடும்படி வேண்டுகிறார். பாரதியோ சட்டென்று," ஆர்டருக்கெல்லாம் பாட்டு வராது. பாடும்போது கேட்டுக் கொள்ளும்" என்று முகத்திலறைந்தார் போல்ச் சொல்லி விடுகிறார். கவிஞருக்குள் மெல்லிய வருத்தம் படர்கிறது. பேசிக் கொண்டே, பாரதியாரும், கவிஞர் உள்ளிட்டவர்களும் ஒரு நண்பரின் வீட்டில் பாய் விரித்துப் படுத்துக் கொள்கிறார்கள்.

    அடுத்த நாள் காலை, ஐந்து மணிக்கெல்லாம், கவிஞரை ஒரு முரட்டுக் கரம் தட்டி எழுப்புகிறது. "என்ன ஓவியரே? பாடல் வேண்டும் என்று கேட்டீர்களலல்லவா? இதோ பாடல். எழுந்து கேளும்" என்று கவிஞரைத் துயிலெலுப்பி, பாரதியார் பாட ஆரம்பித்து விடுகிறார். கவிஞரும் அடித்துப் பிடித்து எழுந்து உட்காருகிறார்.அடுத்த மூன்று மணி நேரம், பாரதியின் பாட்டில் சிக்கிக் கிறங்கிப் போகிறார் கவிஞர். ஒரு தனித்துவம் வாய்ந்த கவிஞனின் நாவினில் ஒரு தனித்துவம் வாய்ந்த மொழியானது தன்னைச் செதுக்கிச் செதுக்கி, தனக்கே உரிய உச்சத்தை அடையும் ஆச்சர்யத்தைக் கவிஞர் கண்டு கொண்டிருந்தார். இன்னும் இன்னும் பாடமாட்டாரா? காலம் இந்தக் கணத்திலேயே உறைந்து நின்று விடலாகாதா? என்று ஏங்கத் துவங்கும் சமயம், திடீரென்று பாட்டை நிறுத்திக் கொண்டு, எழுந்து விடுகிறார் பாரதியார்.அனைவரிடமும் உடனே விடை பெற்றுக் கொண்டு, வீட்டிற்கு வெளியில் அவருக்காக காத்துக் கொண்டிருந்த மாட்டு வண்டியில், ஏறிச் சென்றுவிடுகிறார் பாரதியார். அந்த மகாகவி விடைப் பெற்றுச் சென்ற வெகு நேரத்திற்குப் பிறகும், அவரது பாடல் வரிகளை, காற்று சுமந்து கொண்டே நின்றதாக கவிஞருக்குத் தோன்றுகிறது. பாரதியைப் போலத்தான் நாமக்கல் கவிஞரும். என்ன நினைத்தாரோ? சட்டென்று நூலை நிறைவு செய்துவிட்டார்.

  என் கதை -நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

  சந்தியா பதிப்பகம்
    312 பக்கங்கள்;விலை: ரூ.160 

1 கருத்து: