வெள்ளி, 10 மே, 2013

01-மே-2013: கருமந்துறை - சேலம்


​சேலம் அருகே கல்வராயன் மலைப் பகுதியில் கருமந்துறையில் செயல்படுகிறது வனவாசி சேவா கேந்திரம். மலை வாழ் மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகிறது இவ்வமைப்பு. தமிழ் நாடு முழுக்கவும் நீலகிரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், சேலம், கள்ளகுறிச்சி இப்படி மலைப்பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வமைப்பு செயல்படுகிறது. வருட இறுதியில் இவ்வெல்லாப் பகுதிகளிலிருந்தும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து 5 நாள் முகமை நடத்துகிறார்கள். இம்முறை ஏப்ரல் 30 முதல் மே 4 வரை. 

எங்களுக்கு மே 1 விடுமுறை. YFS-இலிருந்து 7 பேர் இம்முகாமிற்குச் சென்று வரத் தயாரானோம். முதலில் டெம்போ டிராவெலர் வைத்துக் கொண்டு செல்லலாம் என்று யோசித்து பிறகு பேருந்திலேயே செல்வதென்று முடிவாயிற்று. பாலா, அமித், பிரியா, தாமோதரன், தினேஷ், பிரதீப் மற்றும் நான். அமித்துடன் பணிபுரியும் கணேஷ் என்பில்ட் எடுத்துக் கொண்டு தனியாகவே பயணம் செய்து சேலம் வந்திருந்தார். தினேஷ் பெருங்களத்தூரில் ஏறக் காத்திருந்தார். மற்ற எல்லோரும் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டோம். ஆனால், பேருந்து கிளம்பத் தாமதமாயிற்று. பேருந்தின் பொறுப்பாளர்கள், 5 நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வந்து அந்த 6 டிக்கெட் நீங்க தானே என்பதும், இன்னும் எத்தனை பேரு வரணும், எங்கே ஏறுகிறார் என்பதும் மாறாத கேள்விகளாயிற்று. எங்களில் ஒருவர் தன் இருக்கைவிட்டு, பேசும் வசதிக்காக தற்காலிகமாக காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு வர, பேருந்தின் நடத்துனர்கள் இந்தியா பாகிஸ்தான் இடம் மாறியது போல் பெரிதும் குழம்பிவிட்டார்கள். அவர்களுடைய அப்பாவித்தனமான பதட்டமும், குழப்பமும் ரசிக்கத் தக்கதாக இருந்தது. ஒருவழியாக இரவு மிகத் தாமதமாக கிளம்பிய பேருந்து காலை 6.30 மணிக்கு சேலம், அம்மாபேட்டை சென்றடைந்தது. அமித்தின் நண்பர் முன்பாகவே வந்து காத்திருந்தார். டீக்குப் பிறகு முகாம் நடக்கும் பள்ளியை அடைந்தோம். ஸ்ரீ வித்யா மந்திர். பொறுப்பாளர்களில் ஒருவரான திரு பிரகாஷ் எங்களை வரவேற்றார். சக பொறுப்பாளர்களிடம் எங்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த ஒரு மணியில் பள்ளியிலேயே குளித்துத் தயாரானோம். உண்டி தாயாராக இருந்தது. முகாம் பங்கேற்பாளர்களே பரிமாறினார்கள். உணவு முடித்து சற்று நேரம் பொறுப்பாளர்களுடன் ஓர்  உரையாடல். மலை வாழ் மக்களுக்காக நடை பெற்று வரும் பணிகளை விளக்கினார்கள். மலைப்பகுதி வாழ் குழந்தைகளுக்கான கல்வி இவர்களின் முக்கியமான ஒரு பணி. அதோடு இம்மக்களில் ஒருவரே சுகாதாரத் தன்னார்வலராகப் பயிற்சி கொடுக்கபட்டிருக்கிறார். அவர் மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, முதலுதவியும் செய்கிறார். கவனம் தேவைப்படும் நோய்களை இனம் கண்டு முறையான மருத்துவத்திற்கு அறிவுறுத்துகிறார். இது தவிர, இயற்கை முறை விவசாயத்தில் இம்மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வுக்கும், பயிற்சிக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். இப்படிப் பல தளங்களில் ஊக்கத்தோடு செயல்படுகின்றனர் இவ்வமைப்பினர்.



முதலில் கருமந்துறை சென்று வந்து மாலையில் முகாம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு. ஒரு தவெரா; இரண்டு பேர் என்பில்டில். நல்ல வெயில் தொடங்கி இருந்தது. பயணம் சேலம் - கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் ஒரு 30 கி.மீ கடந்து பின்பு கிளைச் சாலை கருமந்துறை நோக்கிப் பயணிக்கிறது. தரமான சாலைகளாகவே இருந்தது. அதிக ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பகுதி இல்லை. செழிப்பான மலைப்பகுதி தான். இவ்வருட வறுமையிலும் பசுமையோடு இருந்தது. நிறைய தென்னை மரங்கள் மற்றும் மாமரங்கள் எங்கள் கண்களில் பட்டவை; எங்களுக்குப் பரிச்சயமானவையும் அவையே;)



டவெராவில் நான் முன் வரிசையில் இருக்க பின்னால் நண்பர்கள் முடிகுறைந்து அழகூடியிருக்கும் என்தலை வெறுமையைப் படம் பிடித்து விளையாட்டுவம்பு  பண்ணிக் கொண்டிருந்தார்கள். கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டு தூங்கிய பிரதீப்பைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கருமந்துறையில் 10-ம் வகுப்பு வரை பள்ளி. தமிழகத்தில் வனவாசி சேவா கேந்திர அமைப்பு முதன் முதலாக  தொடங்கிய பள்ளி. பழமையின் எழில் கொண்டு விளங்கியது. வரவேற்று இளநீரோடு உபசரித்தார்கள்.



இங்கிருந்து நவம்பட்டு சென்றோம். 5-ம் வகுப்பு வரை பள்ளி இங்கே. 



அருகில் திரு.நாதன் அவர்களின் வீடு. கணவனும் மனைவியும் டெல்லியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள். நாமக்கல் அருகே மோகனூரைச் சேர்ந்தவர்கள். ஓய்வு வாழ்க்கை இப்பகுதியில். அழகாகத் தன் விருப்பம் போல் தோட்டத்தோடு ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரசனை கொண்டோர் கனவில் உருவாக்கும் வீடுகளில் ஒன்று. உயர்ந்த ஓட்டுக் கூரைகள். இத்தனை வெயிலுக்கும் தளம் குளுமையாக இருந்தது. நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும். பள்ளியில் ஹிந்தியும், பேசு ஆங்கிலமும் பயிற்றுவிக்கிறார்கள். நாதன் ஒற்றை நாடி மனிதர்; உற்சாகமாகப் பேசக்கூடியவர். நூறு நாள் வேலைத் திட்டத்தினால் விவசாயத்திற்கு ஆட்கள் தட்டுப்பாடு என்றார்.



அறிமுகமாகிப் பேசிக் கொண்டிருக்கும் போது பிரியா பொறுமையாக தன் கைபேசியைத் தேடத் தொடங்கினார். கைப்பையில், வீட்டில் எங்கும் இல்லை. சிறு அமைதியின்மை சூழ்ந்தது. எல்லோரும் தேடத் தொடங்கினோம். வாகனம், அதன் பிறகு பள்ளி. கிடைக்கவில்லை. நாதன் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினோம். செல்லும் வழியில் மீண்டும் ஒரு முறை பள்ளியில் பார்த்து செல்ல எண்ணியிருந்தோம். நானும் பிரதீப்பும் என்பீல்டில். பள்ளியை அடைந்து கதவருகே சென்றதும் முதலில் கண்ணில் பட்டது கைபேசியின் உரைதான். எடுத்தேன். கைபேசி பத்திரமாக உறைக்குள் இருந்தது. நான் கைபேசியை எடுக்கவும், தவெரா வரவும் சரியாக இருந்தது. நண்பர்கள் நான் சதி செய்து மறைத்துவைத்து விட்டதாக வம்பு பண்ணத் தொடங்கினார்கள். ப்ரியவுக்கே கூட சற்று சந்தேகம் .....!!

கைபேசி கிடைத்ததும் பழைய உற்சாகம் திரும்பியது. கருமந்துரைக்கு திரும்ப வேண்டும். பள்ளியில் உணவு தயாராகி இருந்தது. வீட்டுக் காய்கறிகள் கொண்டு சமையல். தனிச் சுவையுடன் இருந்தது. உணவு தயாரித்திருந்த அம்மாவின் அன்பு உபசரிப்பால் நிறையவே உண்டுவிட்டேன். இப்போது சேலம் திரும்ப வேண்டும். 

பிரதீப்பும் நானும் தற்காலிக என்பில்ட் உரிமையாளர்கள்! திரும்பும் வழியில் ஒரு அணையினை படம் பிடிக்கும் முயற்சியில் எந்திரத்தை அணைத்துவிட, திரும்ப உயிர் கொடுப்பதற்குள் திணறிவிட்டோம். புவிஈர்ப்பு விசையிலேயே மூன்று கிமீ போல பயணித்தோம். டி.வி.எஸ் ஒன்றை முந்திக்கொண்டு வேறு எங்கள் வாகனம் சென்றது. அதிக எடை கொண்டதை அதிவேகமாகக் தன்னை நோக்கிக் கவரும் பூமியின் ஆவல். விசை என்பதே ஆசை தானோ  என்னவோ!



சேலம் திரும்பும் வழியில் வாழப்பாடியில் நுங்கு, தேநீர். வாழப்பாடி கடந்து சேலம் - கோயம்பத்தூர் நெடுஞ்சாலையில் பயணம். மரங்கள் மருந்துக்குக் கூட காண முடியாத கொடிய சாலை. நெருப்பை முகர்ந்தது போல் அனல் அடித்தது. அரேபியப் பாலைவனத்துச் சாலையும், இதுவும் ஒன்று விரைந்து செல்ல உதவும் தரத்திலும், பசுமை ஏதுமற்ற அமைப்பிலும். ஒரே பெரிய வித்தியாசம் அங்கே பாலை நிலம் இயற்கையாய் அமைந்தது. இது அக்கறையற்ற பேராசை கொண்ட மனிதன் உருவாக்கியது. 

சேலம் பள்ளியை அடைந்த போது மாலை 5 மணி. தேநீர். பிறகு முகாம் பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து அவர்கள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டோம். வெகு நாளைக்குப் பிறகு உடற்பயிற்சிக்கான பாரில் பயிற்சி செய்ய முயற்சித்தேன். மூன்றுக்கு மேல் உள்ளிறங்கி மேல் வரக் கடினமாக இருந்தது. விளையாட்டுக்க்குப் பின் சிறு இடைவெளி. அமித்தின் நண்பர் கணேஷ் தண்டர் பெர்ட்-இல் சென்னை திரும்ப வேண்டும். நெடிய பயணம். மாலையே கிளம்பிவிட்டார். இடைவேளைக்குப் பிறகு பக்திப் பாடல்கள், சத் சங்கம். சத் சங்கத்தில் இன்று எங்களில் ஒருவரை நல்ல விஷயம் ஒன்று பகிருமாறு அழைத்தனர். ஒருமித்த குரலாக மகிழ்ச்சியுடன் பிரியாவும், பாலாவும், அமித்தும் என்னைச் சிக்க வைத்தனர். எது வேணுமானாலும் பேசுங்கள் என்று சொல்லிச் சென்றுவிட்டார் பொறுப்பாளர். என்னென்னவோ தலைக்குள் ஓடத் தொடங்கியது. முதலில் உதித்தது பிளாஸ்டிக் உபயோகம் மற்றும் கழிவு மேலாண்மை. ஏனோ அது வேண்டாம் என்று ஒதுக்கினேன். எப்படியோ மனம் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த தளங்களில் வந்து நின்றது. கடினமெனினும் அதையே பகிர்வதென முடிவு செய்தேன். மின்சாரம் இல்லை. முகம் பகுத்தறிய முடியாத வெளிச்சத்திலேயே பேசினேன்.

நம்முடைய நாகரிகமும் பண்பாடும் பல்லாயிர வருடப் பின்னணி கொண்டவை. இத்தனை பெரிய கால வெள்ள ஓட்டத்தில், அனுபவங்கள் மூலம் நம் முன்னோர்கள்  உன்னதமான விஷயங்கள் பலவற்றை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் கூடவே வேண்டாத சில பிணிகளும் வந்து சேர்வது தவிர்க்க முடியாதது. அவற்றைக் கண்டு உணர்ந்து களைந்து முன்னேறுவதே நாம் செய்ய வேண்டியது. மாறாக, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் ஒட்டு மொத்த பாரம்பரியத்தையும் பழமை, மூடத்தனம் என்று ஒதுக்குவது நம் மீதே நாம் மரியாதை இழப்பதற்குச் சமம். பகவத் கீதையே என்னை விவாதித்து ஏற்றுக் கொள் அல்லது நிராகரி என்றே சொல்கிறது. இத்தகைய நெகிழ்வுத் தன்மை நம் மரபிற்கே உரிய பெரும் சிறப்பு. நம் மரபின் மேல் உள்ள மரியாதையை இழப்பது நம் மீதான மரியாதையை நாமே இழப்பதாகும். கோவில்களும்,  நம் கலைகளும், வழிபாட்டு முறைகளும் நம் மரபின் சின்னங்கள். அவற்றைக் காப்பது நம் கடமை. இவ்வாறமைந்தது என் பேச்சு.



 
இரவுணவு பருப்புத் துவையலோடு ரசம் மற்றும் மோர் சாதம். அருமையான உணவு. என் சிறு வயது வாழ்க்கையை நினைவூட்டுவதாக அமைந்தது. சிறு வயதில், ஊரில் வளவில் திருமணம் (எங்கள் பெரிய வீட்டு வாரிசுகளின் திருமணம்) என்றால் மூன்று நாள் கல்யாண வீடு. முதல் நாள் மாலைப் பலகாரம் முதல் பந்தி. வளவாட்கள் (பங்காளிகள், மாமன் முறை சொந்தங்கள்) கூடுவர். முந்தய நாள் இரவு, திருமண நாளன்று மூன்று வேளை, மறுநாள் (மக்யா நா!) மாலைப் பலகாரத்தோடு விருந்து நிறைவுறும். மூன்று நாள் விருந்தில் திகட்டிப் போன வயிறுக்கு செரிமானம் எளிதாக வேண்டும் இப்போது. அதற்கு அம்மா தயாரிக்கும் உணவு ரசம் சோறும், பருப்புத் துகையலும் ....இங்கே சாப்பிட்ட உணவு இதை நினைவூட்டியது.

இரவுணவுக்குப் பின், மலைப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் பாரம்பரியக் கலைகளின் பகிர்வு. தங்கள் பகுதியில் வழக்கத்திலிருக்கும் நாட்டுப் பாடல்களுக்கு நடனமாடினர் முகாமில் கூடியிருந்தோர். 11 மணிக்கு பேருந்து. எங்களுக்கு நேரமாகிவிட நிகழ்ச்சிக்கிடையில் மிச்சத்தை இழக்க மனமின்றி விடை பெற்றோம். வாசல் வரை வந்து விடை கொடுத்தனர், அமைப்பாளர்கள். மூன்று சக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் செல்லும் அவசரத்தில், தாமுவும், தினேஷும் 'சேலம் செட்' நினைவுபடுத்தினர். என்னது அது என்றோம் ஒருமித்த குரலில். அமித்தும், நானும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா என்ன...பாதி வழியில் சேலம் செட் 'நடமாடும் கடையைக் கண்டு அவசர அவசரமாக வண்டியை நிறுத்தினோம். எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரவில்லை. அருமையாக இருந்தது சேலம் செட். இரண்டு தட்டைகளுக்கு நடுவில் மசாலாவுடன் காரட், வெங்காயத் துருவல். இதுதான் அந்தப் பதார்த்தம். சேலம் வந்து மாம்பழம் வாங்காமல் எப்படி. சந்தையில் நின்றது நல்லதாக ஆயிற்று. அமித் வாங்கி வந்துவிட்டார். 

பேருந்து கிட்டத்தட்ட குறித்த நேரத்திற்கு கிளம்பியது. நல்ல களைப்பு. கிளம்பியதுமே உறங்கிவிட்டேன் போல. அரை மணி கழிந்திருக்கும். பேச்சரவம் கேட்டு விழித்தேன். ஏதோ பிரச்சினை போல் தெரிந்தது. பேருந்தின் கண்ணாடி ஒன்று கல்லெறிந்து சேதமாகியிருந்தது. தன் தலைவனை சிறையில் அடைத்ததற்காக டாஸ்மாக்கில் வேரிமயிர் பொங்க கிளப்பப்பட்ட சிங்கங்கள்! தலைவர், பொது மக்களின் நலன் ஒன்றிற்காக மட்டுமே அவதாரம் எடுத்தவராயிற்றே. பொது மக்களை அவதிக்குள்ளாக்கி, பொது உடமைகளைச் சிதைப்பது தானே நியாயம்! பலவாறு கீறல் விழுந்த கண்ணாடிக்கு அருகே இருந்த இருக்கையில் அம்மாவும் குழந்தையும் அமர்ந்திருந்ததாக நினைவு. கண்ணாடி சிதறவில்லை. ஆபத்து ஒன்றுமில்லை. கீறல் விழுந்த கண்ணாடியை ஓட்டுனரே முழுதும் உடைத்தெடுக்க பயணம் தடைப்படாமல் தொடர்ந்தது.
பிரதீப் 8 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும். பேருந்து 6 மணிக்கெலாம் சென்னைக்குள் வந்துவிட்டது. தாமதம் ஏதும் இல்லாமல் எல்லோரும் வீடு சேர்ந்தோம். பங்கு கொண்ட எல்லோருக்குள்ளும்  ஏதோ ஒரு சிறு அசைவையேனும் ஏற்படுத்திய பயணம். ஒரு நாளின் நேரத்தை அகண்ட கடலென விரித்தெடுத்த பயணம். விரித்தெடுக்கபட்ட நாளின் ஒரு கணம் கூட அலுப்புத் தட்டாத பயணம்! ஒவ்வொரு பயண முடிவிலும் அடுத்த பயணத்திற்கான ஏக்கத்தோடே மனம் விடை பெறுகிறது.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

டிராகன் பொம்மை - கணேஷ் பாபு

டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஆறு மணிக்கு வருவதாக சொல்லியிருந்த ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப் பட்டிருந்தது. இரண்டு கைகளாலும் தூக்கச் சிரமமான கனமான கண்ணாடிக் கோப்பை நிறைய காபி குடித்திருந்தான். காபி குடிப்பதே அவனுக்குப் பிடிக்காத பழக்கமாக இருந்தது, ஷெல்லியைக் காதலிப்பதற்கு முன்பு. காபி கோப்பையைக் கொஞ்சம் நகர்த்தி வைத்தான். வாய் கசந்து கொண்டு வந்தது. மூச்சுக் காற்றில் காபியின் மனம் கனத்தது. ஒரு கத்தை டிஸ்யூ தாளை எடுத்து தன் வாயை இறுக்கி மூடி பலமாக ஊதி எடுத்தான். டிஸ்யூ தாளின் நடுவில் காபி நிறம் படிந்திருந்தது.
இருக்கையில் சாய்ந்து கொண்டு, தன்னைச் சுற்றிலும் ஒருமுறை விழிகளைச் சுழல விட்டான். தான் மட்டுமல்ல, இந்தக் கடைக்கு வரும் பெரும்பாலோர் இம்மாதிரியான பெருங்கோப்பையில் தான் காபி குடிக்கிறார்கள். பானை பெற்றெடுத்த குழந்தை போல இவ்வளவு பெரிய கோப்பையில் காபி குடித்த பிறகும் அவர்களுக்கெல்லாம் சாப்பிடுவதற்கு வயிற்றில் இடம் இருக்கிறது. சிறு சிறு குழுக்களாக வருகிறார்கள், அலுவலகம் முடிந்து. ஆளுக்கு ஒரு கோப்பை காபியை மொந்தியவாறு, பேசத் துவங்குகிறார்கள்.அவர்களுக்குரிய உலகத்தில் பேசித் தீர்த்து விட முடியாத கதைகள் எப்போதும் இருக்கின்றன.ஆண்களாய் இருந்தால் பெண்களைப் பற்றி. பெண்களாய் இருந்தால் ஆண்களைப் பற்றி. ஆணும் பெண்ணும் கலந்த குழுவாய் இருந்தால், தங்கள் அலுவலக மேலாளரைப் பற்றி. காற்றைத்தான் வியக்க வேண்டும். மணிக்கணக்காக இவர்கள் பேசும் அர்த்தமற்ற பேச்சொலிகளை ஒருவர் மாற்றி இன்னொருவர் காதுகளுக்கு மலைக்க வைக்கும் பொறுமையுடன் சுமந்து செல்கிறது.
உரையாடலும் காபியும் தீர்ந்த பின் பேசுவதற்குக் கதைகளற்று திகைத்துப் போகிறார்கள். திசை தெரியாத ஆடுகளை மனிதகுமாரன் ஆற்றுப்படுத்துவது போல, அதுவரை அவர்கள் மறந்திருந்த கைபேசி உதவிக்கு வருகிறது. கைபேசி காட்டும் உலகத்தில் சற்று நேரம் அலைந்து திரிகிறார்கள்.மீண்டும் ஒன்றாகப் புறப்பட்டு கிளார்க் கீ அருகேயுள்ள ஏதாவது ஒரு பாரில் பிரவேசிக்கிறார்கள்.
யானைத் துதிக்கையின் விட்டமுள்ள நீண்ட கண்ணாடிக் கோப்பையில் கற்பாந்த காலமாய் அவர்களுக்குக்காக மண்ணுக்குள் புதைந்திருந்த புளித்த மது ஊற்றப் படுகிறது. கோப்பை கொள்ளாது நிரம்பி வழியும் மதுவைக் குடித்த போதையில் மேஜையும் தள்ளாடுகிறது. திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தை தன் தாயைக் கண்டதும் ஆங்காரமாக ஓடிப் போய் இணைந்து கொள்வதைப் போல்,மதுவோடு இணைகிறார்கள். பின் மீண்டும் முடிவற்ற கதைகள் அவர்கள் நாவுகளில் கிளைக்கத் துவங்குகின்றன. அவர்கள் கையில் உள்ள மதுக் கோப்பைகளில் பனிக் கட்டிகளோடு, அந்த இரவும் மூழ்குகிறது.
தானும் ஒரு காலத்தில் தண்ணீரைப் போல மது அருந்தியதும், மது நோய் முற்றி அரைமயக்கமாய் சாங்கி பொது மருத்துவமனையில் படுத்திருந்ததும், தனக்குச் சிகிச்சை அளித்த இந்திய டாக்டர் முகம் சிவந்து, உன் உடம்பில் ஓடுவது ரத்தமல்ல, மது என்று கடிந்து கொண்டதும், அதைக் கேட்டுத் தாத்தா உடல்குலுங்கி அழுததும், இன்னும் நினைவில் இருக்கிறது. அடுப்பில் எரியும் விறகுக் கட்டைகளில் ஒன்றை வெடுக்கெனப் பிடுங்கி வெளியே எறிந்தது போல, ஷெல்லிதானே தன்னை அந்த கொடிய பழக்கத்திலிருந்து காப்பாற்றினாள்! ஷெல்லி! நீதான் எத்தனை பேரன்பு மிக்கவள். இலையின் கூடவே ஓட்டிப் பிறந்த பச்சை நிறம் போல, உன்னோடு சேர்ந்து கருணையும் ஒட்டிப் பிறந்ததோ?
மீண்டும் மணி பார்த்தான். கைக்கடிகாரம் ஏழு மணி காட்டியது. ஷெல்லி இன்னும் வரவில்லை. ஷெல்லிக்காக காத்திருப்பது எப்போதும் போதையூட்டக் கூடியதுதான். ஆனால், சமீப காலமாக ஷெல்லியின் போக்கு விசித்திரமாய் இருக்கிறது. வேண்டுமென்றே தன்னை வெகு நேரம் காக்க வைப்பது போலிருக்கிறது. ஒருவேளை, தன்னை அவளுக்குப் பிடிக்கவில்லையோ. ஒருகணம்தான் இப்படி யோசித்தான். மறுகணம், அப்படி யோசித்ததற்காக வருத்தப்பட்டான். சீ! கேடு கெட்டவனே! இப்படி நினைப்பதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் உனக்கு? சீசரின் மனைவியைப் பற்றி உனக்குத் தெரியாது. ஆனால், ஷெல்லி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளல்லவா! சந்தேகமும் ஷெல்லியும் பகலிரவைப் போல. ஒன்றிருக்கையில் இன்னொன்று இருக்காது. ஷெல்லியைப் பற்றித் தவறாக நினைத்த மனதுக்கு ஒரு ஸ்தூல வடிவு கொடுத்து அதனை மீண்டும் மீண்டும் முல்சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தான். இனி ஒரு முறை ஷெல்லியைப் பற்றி இப்படித் தவறாக நினைப்பதில்லை என்று கண்மூடி தன் தாத்தாவிடம் சத்தியம் செய்து கொடுத்தான். சிறு வயதில் ஷெல்லிக்கும் அவனுக்கும் இடையே எவ்வளவோ சண்டைகள் வந்து போயிருக்கின்றன. அப்போதெல்லாம் தாத்தாதான் இருவருக்கும் சமாதானம் செய்து வைப்பார். இப்போது தாத்தா உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை தனக்கும் ஷெல்லிக்கும் திருமணமே நடந்து முடிந்திருக்கலாம்.
தாத்தாதான் ஷெல்லியைத் தன் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தவர். அந்தச் சீனப் புத்தாண்டு இன்னும் மூளையின் சுவர்களுக்குள் கோட்டோவியமாகப் பதிந்து போயிருக்கிறது. கடந்த கால நதியினுள் மூழ்கத் துவங்கினான். அப்போது எனக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்தது. சைனா டவுனின் வீதிகளில் என் உயரமுள்ள டிராகன் பொம்மையைத் தூக்கிக் கொண்டு நண்பர்களுடன் வலம் வந்து கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டு மலாய் தாத்தா உடனே வீட்டுக்குத் திரும்புமாறு சொன்னார். வீட்டில் எனக்காக ஒரு சிறிய விருந்தாளி காத்திருக்கிறாள் என்று. புதிர்மையைச் சுமந்த கண்களோடு வீட்டுக்கு விரைந்தேன்.
வீட்டின் முன்னறையில் அதுவரைத் தான் தாங்காத ஒரு உயிரினத்தை எங்கள் சோபா தாங்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த உன்னைத் தாத்தா சமாதானம் செய்து கொண்டிருந்தார். உன் கைகளில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ஓயாது நீர் பெருக்கும் சுனை போல் உன் கண்கள் நீர் பெருக்கிக் கொண்டிருந்தன. என்னை உன்னிடம் தாத்தா அறிமுகப் படுத்தினார். ஆனால், நீ என் டிராகன் பொம்மையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாய். கை நீட்டி அந்த பொம்மையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டாய். அதன்பின் நீ அழவேயில்லை. கோடை காலங்களில் காட்டுப் பாறைகளில் நீர் ஓடிய தடம் தெரிவது போல, உன் மஞ்சள் நிற கன்னங்களில் கண்ணீர் ஓவியம் வரைந்து போயிருந்தது.
சீனப் புத்தாண்டு ஊர்வலத்தைக் குடும்பத்துடன் பார்க்க வந்த நீ, எப்படியோ கூட்டத்தில் தொலைந்து போய் தன்னிடம் சிக்கியதாக தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். டென்னிஸ், நீ இந்தப் பாப்பாவோடு பேசிக் கொண்டிரு. நான் என்னுடைய ஐ.ஸி யை எடுத்து வருகிறேன். அதன்பின் நாம் போலீசுக்குத் தகவல் சொல்ல வேண்டும் என்றார்.
டிராகன் பொம்மையை நீ உன் விரல்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தாய். இந்த பொம்மை எங்கே வாங்கியது? என்று என்னிடம் கேட்டாய். ஆர்சர்ட் ரோட்டில், என் தாத்தா வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன்.
பொம்மையை அழுத்திப் பிடிக்காதே, அதிலுள்ள பஞ்சு கிழிந்து வெளியே வந்து விடும் என்று நான் சொல்லவும், உன் பிடியைத் தளர்த்திக் கொண்டாய்.
வீட்டின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த தாத்தா உன்னைத் தூக்கிக் கொண்டார். சைனா டவுன் போலீஸ் நிலையத்தில் நமக்கு முன்பே உன் பெற்றோர் காத்துக் கொண்டிருந்தனர். அழுது வீங்கிய கண்களுடன் இருந்த உன் தாய் ஓடோடி வந்து உன்னை வாங்கிக் கொண்டார். கடல் அலைகளால் மூடப்பட்ட கற்பாறை போல நீ உன் தாயின் நெஞ்சுக்குள் சென்று மறைந்தாய்.
யாவரும் தாத்தாவிற்கு நன்றி சொல்லினர். உன் தந்தையின் உள்ளங்கை என் தாத்தாவின் உள்ளங்கைகளுக்குள் நெடுநேரம் புதைந்திருந்தன. விடைபெறும்போது நீ என் பொம்மையைத் தர மறுத்தாய். நான் அழத் துவங்கியதும், உன் தந்தை அந்த பொம்மையை உன்னிடமிருந்து வாங்கிக் கொடுத்தார். நீ உங்கள் காரில் ஏறிப் புறப்பட்டாய். அந்தக் கரிய இருளில், காரின் பின்புறக் கண்ணாடி வழியே உன் வெள்ளை கவுன் நீண்ட நேரம் என் கண்களுக்குத் தெரிந்து கொண்டே இருந்தது.
அதன் பிறகான எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் எங்கள் வீட்டு சோபா ஆசையுடன் உன்னைத் தாங்கிக் கொண்டது. இன்று வரை அது தொடர்கிறது. காலமாற்றத்தில் எவ்வளவோ நிகழ்ந்தேறிவிட்டன. படிப்பு ஏறாமல், நான் தேங்கி விட்டேன். குழாய் ரிப்பேர் செய்பவனாக. நீயோ இன்று என்.யூ.எஸ்ஸில் ஜெனிடிக் இன்ஜினியரிங் பாட பிரிவில் உதவிப் பேராசிரியை. பூமிக்கும் நிலவுக்கும் இடையே எவ்வளவோ தூரம் இருந்தாலும், நிலவின் ஒளி மட்டும் பூமியைத் தாலாட்டத் தயங்குவதேயில்லை. இடையிடையே, உன்னுடைய உயரம் பார்த்துத் தயங்கி நான் விலகிய போதெல்லாம், நீ உன் மலர்ந்த அன்பினால் என்னை ஒளியூட்டிக் கொண்டல்லவா இருந்தாய். அந்த ஒளியின் விஸ்வரூபத்தை மூன்றாண்டுகளுக்கு முன் உன் காதலை நீ என்னிடம் சொல்லியபோது கண்டேன். கண்கொள்ளாப் பரவசத்தோடு.
இந்த மூன்றாண்டுகளில் எத்தனை கோடி முறை அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் என் மனதில் ஓட்டிப் பார்த்திருப்பேன்? இப்போதும் அது கனவா? நிஜமா? என்ற தயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அல்லது ஒரு நுண்ணிய காட்சிப் பிழை என் போதத்தில் ஏறிக் கொண்டு மனமயக்கத்தை ஏற்படுத்துகிறதா? காதலைச் சொல்ல ஏன் புத்தர் கோயிலைத் தேர்ந்தெடுத்தாய் ஷெல்லி? பொன் மாலைப் பொழுது என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். உண்மையில் எத்தனை பேர் தங்கள் வாழ்வில் பொன் மாலைப் பொழுதை தரிசிக்கின்றனர்? நான் தரிசித்தேன். முதல் முறையாக. க்ளெமெண்டி புத்தர் கோயிலில்.
பூன் லே வேயில் க்ளெமெண்டி தீயணைப்பு நிலையத்தின் அருகில் இருக்கிறது அந்தக் கோயில். தாத்தாவுடன் அடிக்கடி அந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். எத்தனையோ முறை ஷெல்லியும் என்னுடன் வந்திருக்கிறாள். ஆனால், அந்த மாலையில் ஷெல்லிதான் தன் காரில் என்னை அங்கு அழைத்துப் போனாள். அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது. அருகிலுள்ள புல்வெளி ஈரமான காற்றின் இசைக்கேற்ப நடனம் பயின்று கொண்டிருந்தது.
கோயிலின் மேல்தளத்தில் தியானத்தில் அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமான புத்தர் சிலை. முடிவற்ற யோகத்தில் சுந்தரப் புன்னகை சிந்தும் வதனம். வைத்த கண் வாங்காமல் அதைப் பார்த்துக் கொண்டே சொல்லற்று இருப்பது ஷெல்லியின் வழக்கம். இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டே இருப்பது என் வழக்கம். ஒவ்வொரு முறையும் இந்தப் புன்னகை தனக்காக ஒரு செய்தி வைத்திருக்கிறது என்றாள் ஷெல்லி. இந்த புத்தர் சிலையின் புன்னகை என்ன செய்தியைச் சொல்ல முடியும் என்பதே எனக்குப் புரியாததாக இருந்தது. புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை. அன்னைக்கு மட்டுமே புரியும் குழந்தையின் அங்க அசைவுகள் போல இதுவும் சொல்லில் விளக்க முடியாத விசித்திர உண்மையாக இருக்குமாய் இருக்கும்.
இந்த புன்னகை இந்த முறை என்ன செய்தி சொல்கிறது? என்று கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல், உன்னைக் காதலிக்கச் சொல்கிறது என்றாள்.
அடுத்த சில நிமிடங்கள் கனத்த மௌனத்தில் சென்று புதைந்தன. எங்களைச் சுற்றி ஆவேசமாக வீசிய ஈரக்காற்றின் ஒலி செவியை நிறைத்தது.
நான் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள். புத்தரும் புன்னகைத்தார். பிரமாண்டமான அவரது உருவத்திற்குப் பின்னே சூரியன் மஞ்சள் ஒளியுடன் எழுந்து வந்தது. ஈர வாடை வீசிய அந்தப் பிரதேசமே மெல்லிய மஞ்சள் ஒளியில் புதிய தோற்றமளித்தது. புற்களின் மேல் தேங்கியிருந்த நீர்த் துளிகள் மாலை ஒளியில் மஞ்சள் பூசியிருந்தன. ஓர் உண்மையான பொன் மாலை நிகழ்ந்து கொண்டிருந்தது.
 ***
கைக்கடிகாரம் எட்டு மணி காட்டியபோது ஷெல்லி அவனை நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வெள்ளை நிற டாப்ஸும் கருப்பு நிற கவுனும் அவள் அழகைச் சுமக்க மாட்டாமல் சுமந்து வந்தன. ஷெல்லி இளைத்திருந்தாள். அவள் கூடவே நிழலைப் போல சோர்வு தொற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது.
என்ன ஷெல்லி? ஏன் இவ்வளவு லேட்?
டிராபிக் ஜாம், என்றாள்.
என்ன ஆச்சு உடம்புக்கு. போன வாரம் கூட இப்பிடித்தான் இருந்த. உடம்பு சரியில்லையா. டாக்டர்கிட்ட போகலாமா?
எனக்கு ஒண்ணுமில்லை. கொஞ்சம் அலைச்சல். அதான், என்றாள்.
காபி குடிக்கிறாயா?
வேண்டாம்.
இப்போதெல்லாம் ஏன் போனில் என்னுடன் சரியாகப் பேசுவதில்லை?
சற்று நேரம் மௌனமாய் இருந்தாள். கடையின் வாசலில் தொங்கிய 'ஸ்டார்பக்ஸ்' பெயர்ப்பலகையை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது அழகிய கன்னங்களையே வெகு நேரம் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். மதகு திறந்த வெள்ளமாய் பேசக் கூடியவள், இன்று ஏன் ஒற்றை வார்த்தையிலேயே பதில் சொல்கிறாள். ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள். அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்..
அவர்களுக்கு எதிரே விரிந்திருந்த சாலையில் வாகனங்கள் நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. அவள் காதுகளைப் பொத்திக் கொண்டாள். வாகன இரைச்சல் அடங்கியதும் மெதுவாக பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு சொல்லும் கத்திரிக்கோல் போல அவன் நெஞ்சைக் கச்சிதமாக அறுத்தெறிந்தது.
டென்னிஸ்! நான் சொல்வதை அமைதியாகக் கேள். பலமுறை யோசித்த பின்தான் இதைச் சொல்கிறேன். எனக்கும் உனக்கும் நட்பு மட்டுமே எப்போதைக்குமான சாத்தியம் போல்த் தெரிகிறது. காதல் சரிவரும் என்று தோன்றவில்லை. சிறு வயதில் நமக்குப் பெரிதாக லட்சியம் என்று ஒன்றும் இருப்பதில்லை. ஆனால், வளர வளர நம்முடைய திசை எது என்று நமக்குப் புலப்பட்டு விடுகிறது. இன்று என் கனவும் லட்சியமும் எல்லாம் என் துறையில் இதுவரை சாத்தியமற்றது என்று ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களிளெல்லாம் என் ஆராய்ச்சி மூலம் வெளிச்சம் பாய்ச்சி புதிய உண்மைகளை இந்த உலகுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதுதான். அதற்கு காதலும் திருமண வாழ்க்கையும் சரிவராது. ஒரு சிறிய வட்டத்தில் என் வாழ்க்கை முடிந்து போவதை ஒருநாளும் நான் விரும்பமாட்டேன்.
தயவு செய்து புரிந்து கொள். நமக்குள் இனி காதலும், கல்யாணமும் வேண்டாம்.
மௌனத் துளிகளால் உண்டான பெரியதொரு அலை அவர்களிருவருக்குமிடையே பொங்கி எழுந்து அடங்கியது.
தன் கால்களுக்குக் கீழிருக்கும் நிலம் நழுவுவது போலிருந்தது டென்னிஸுக்கு. வைத்த கண் வாங்காமல் ஷெல்லியைப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன். தொண்டை கனத்து வந்தது. எச்சில் விழுங்குவது சிரமமாக இருந்தது. இந்த நிகழ்வு கனவாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. கனவுதான் என்று மனதின் இன்னொரு பகுதி அடித்துச் சொன்னது. குரல் உடைந்து விடக்கூடாது என்ற கலவரத்தில் மெல்லப் பேசினான் டென்னிஸ்.
ஏன் ஷெல்லி? என்ன ஆகிவிட்டது இன்று? நாடக வசனம் போல் கச்சிதமாக நீ பேசுவதைப் பார்த்தால் மிகுந்த ஒத்திகை செய்திருப்பது போலத் தெரிகிறது. படிப்பைப் போல நடிப்பிலும் நீ கைதேர்ந்தவள்தான். உண்மையைச் சொல். என்னைப் பிடிக்கவில்லையா?
ஷெல்லி பொறுமை இழக்கத் துவங்கினாள். உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. உன்னை விட என் தொழில் எனக்குப் பிடிக்கிறது என்று தான் சொல்கிறேன். உன்னுடன் காதல் வேண்டாம் என்று தான் சொன்னேன். நட்பு வேண்டாம் என்று சொல்லவேயில்லை. நாம் நல்ல நண்பர்களாகவே தொடர முடியும்.
ஷெல்லியின் கண்களில் அபாரமான நாடகத்தனம் மின்னியது போலிருந்தது. இந்த நாடகீயத் தருணம் இதுவரைத் தன் வாழ்வில் எதிர்கொண்ட நிஜங்களை எல்லாம் அழித்துவிடப் பார்க்கிறதே?
எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முடியாமல் சூடான ஒரு திரவம் அவன் கண்களில் பொங்கியது. தன் உயிரின் மேல் எறியப்படும் கடைசி கல் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.
கடைசியாகக் கேட்கிறேன், இதற்கு மட்டும் பதில் சொல். நான் செய்யும் தொழிலும், என் ஏழ்மையும் தான் உனக்குப் பிடிக்கவில்லையா?
ஷெல்லிக்கு ஆத்திரம் பொங்கியது. இப்படியெல்லாம் பேசுவதாக இருந்தால் நான் எழுந்து போய் விடுகிறேன் என்றாள்.
வேண்டாம் ஷெல்லி. இந்த சொற்ப நிமிஷங்களிலாவது என்னுடன் இரு.
ஷெல்லி பொறுமையின்றி தன் இருக்கையில் அசைந்து கொண்டிருந்தாள்.
கண்களை மூடி தன் தாத்தாவை நினைத்தான் டென்னிஸ். வழுக்கைத் தலையுடன் கூடிய ஒடுங்கிய அவரது உருவம் மனதில் தென்பட்டது சிறிது இதமாக இருந்தது. ஒருவேளை, ஷெல்லி ஏதாவது நெருக்கடியில் இருக்கிறாளோ?
திடீரென்று தோன்றிய ஆர்வத்தில் டென்னிஸ் கேட்டான், ஷெல்லி, நாளை காலை புத்தர் கோயிலுக்கு வருகிறாயா? அங்கு வந்து நிதானமாகப் பேசி நாம் நல்ல முடிவெடுக்கலாம்.
முடியாது. நாளைக் காலை நான் நியூயார்க் போகிறேன். முக்கியமான ஒரு ஆராய்ச்சிப் படிப்புக்காக. திரும்புவதற்கு சில வருடங்கள் ஆகலாம். அலட்சியமாய் சொல்லி முடித்தாள் ஷெல்லி.
கடைசி கல் தன் வேலையைச் செய்து முடித்து விட்டது. எல்லாம் கைமீறிப் போய் விட்டது நன்றாகவே தெரிந்தது டென்னிஸுக்கு. ஒரு உறவு மெல்ல மெல்ல உருவாகி வருவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது? அதை உடைத்து விடுவதற்கோ சில வினாடிகளே போதுமானதாகி விடுகிறது.
கலங்கிய கண்கள் அனலாக, டென்னிஸ் கேட்டான். நாளை உன்னை வழியனுப்ப நான் வரலாமா?
ஷெல்லி சிறிது நேரம் தயங்கினாள். பிறகு, ஒத்துக்கொண்டாள். சரியாக நாளைக் காலை பத்து மணிக்கு சாங்கி விமான நிலையம் வந்துவிடு, டெர்மினல் மூன்று.
சொல்லிவிட்டு, ஒரு சிட்டுக் குருவி பறந்து சென்று கிளைகளில் மறைவது போல, ரோட்டில் மறைந்து விட்டாள்.
டென்னிஸுக்கு தன் இதயம் துடிப்பது பேரரவமாய் காதுகளில் கேட்டது. உடலிலுள்ள ரத்தமெல்லாம் மூளைக்குச் சென்று தேன்கூட்டினைப் போல உறைந்து நின்று விட்டது போல் தலை கனத்து வந்தது. மெல்ல எழுந்து அருகிலுள்ள தன் டூல் பாக்ஸைத் தூக்கிக் கொண்டு தஞ்சோங் பாகர் எம்.ஆர்.டி யை நோக்கி நடந்தான். உடம்பே யோசனையாய் மாறி நடந்து கொண்டிருக்கையில், தன் கண் முன் நீண்ட எஸ்கலேட்டர் ஒன்று கறுப்பு அருவியாய் கீழ் நோக்கிப் பாய்ந்தது. அதில் மெல்ல கால் வைத்து நின்று கொண்டான். திடீரென்று திரும்பிப் பார்க்கையில் தன் அருகே ஷெல்லியின் நிழல் தெரிந்தது போல் இருந்தது. சுதாரிப்பதற்குள், எஸ்கலேட்டரில் கால் தடுக்கி விழத் துவங்கியிருந்தான். தரையில் வந்து விழுந்தவனை அங்கு கூடியிருந்தவர்கள் ஓடி வந்து தூக்கினார்கள். அவனது டூல் பாக்ஸ் திறந்து அதிலுள்ள ஸ்பானர்கள், கட்டிங் ப்ளேட் யாவும் திசைக்கொன்றாய் சிதறியிருந்தன.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெல்ல தன்னுடைய டூல்ஸையெல்லாம் சேகரிக்கையில் உதடு விகசித்து நீண்ட கேவல் ஒன்று எழுந்தது. உடைந்து போய் அழுது கொண்டிருந்த அவனைத் தன் தாயின் கைபிடித்து நடந்து சென்ற சிறுமி ஒருத்தி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.  
அன்றிரவு டென்னிஸின் தூக்கத்தில் ராணுவ அணிவகுப்பு போல கனவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. தொலை தூர வெளிச்சத்தின் பின்னணியில் தன் தாத்தாவின் விரல் பிடித்து அந்தச் சிறுவன் சந்தோசமாக சாலையில் நடந்து போகிறான். அவனது இன்னொரு கையில் ஒரு லாலி பாப் மிட்டாய் இருக்கிறது. அவனது உலகில் தன் தாத்தாவையும் மிட்டாயையும் தவிர வேறு எவருமில்லை. அவர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வெளிர் நீல வெளிச்சம் ஒரு நிழலைப் போல அவர்களின் பின் வந்தபடியிருக்கிறது. அந்த நிழலின் பாடல் சிறுவனின் காதுக்குள் மட்டும் கேட்கிறது. அவன் சந்தோசமாக தலையாட்டிக் கொண்டே செல்கிறான்.
பிறிதொரு கனவில், ஷெல்லியும் அவனும் "புலாவ் உபின்" தீவுக்குச் செல்கிறார்கள். இரண்டாம் நம்பர் பஸ்ஸின் மாடியில் ஜன்னலோரம் அமர்ந்து கொள்கிறார்கள். வழியில் உள்ள சாங்கி சிறை வளாகத்தை ஆவலுடன் அவர்கள் இருவரும் பார்க்கிறார்கள். நீ மட்டும் என் வாழ்வில் வராமல் போயிருந்தால் நான் இங்குதான் இருந்திருப்பேன் என்று டென்னிஸ் சொல்கிறான். ஷெல்லி அவனை முறைத்துப் பார்த்து அவன் கைகளில் வலிக்கக் கிள்ளுகிறாள். அன்றிரவு "புலாவ் உபின்" தீவிலேயே கூடாரம் அமைத்துத் தங்கி விடுகிறார்கள். சிறு சிறு சுள்ளிகளைச் சேகரித்து அவன் தீ மூட்டுகிறான். தீயின் நாவுகளுக்கு மேலே எதிரிலுள்ள கடற்கரை நெளிந்தாடிக் கொண்டிருந்தது. அவர்களின் நீண்ட நிழல்கள் அருகிலுள்ள மரங்களைத் தழுவிக் கொண்டிருந்தன. ஏகாந்தத்தின் கனம் தாளாமல், ஷெல்லி அவனது தோள்களில் புதைந்தாள். எதிரிலுள்ள நெருப்பை விடவும் சூடான ஒரு முத்தத்தை ஷெல்லியின் கழுத்தில் பதித்தான் அவன். முத்தச் சத்தம் ஆகாயத்தை எட்டி விட்டது போலும். ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் புன்சிரிப்புடன் கண்சிமிட்டியது. மற்றொரு கனவில், ஷெல்லியும் அவனும் புத்தர் கோயிலில் மணம் செய்து கொள்கிறார்கள். வானை மறைத்து புத்தர் தன் புன்னகையை அவர்களின் மேல் சிந்த விடுகிறார். அவர்கள் இருவரும் அண்ணாந்து பார்க்கையில் புத்தரின் மிக அருகில் அவனது தாத்தா தெரிகிறார். அதற்கும் மேலே ஒரு வெண்மேகம் மெல்ல வான்வெளியில் நீந்துவது தெரிகிறது. 
***
காலை ஒன்பது மணிக்கே புறப்படத் தயாராயிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷெல்லி.  அவள் கைபேசியில் ஒரு மாதம் முன்பு தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைப் படித்துக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை படித்ததுதான்.
டியர் ஷெல்லி,
கடந்த மாதம் நீங்கள் எங்கள் மார்பகப் புற்றுநோய் மையத்தில் பரிசோதனை செய்த பின் மீண்டும் இங்கு வரவேயில்லை. இந்த நோய் முழுவதாக வளர்வதற்கு முன் நீங்கள் அவசியம் எங்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து விரைந்து வாருங்கள். உங்கள் சிகிச்சை பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் அதற்காகும் செலவுகள் போன்றவை தனியாக இன்னொரு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கிறோம் .படித்து விட்டு பதில் எழுதவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,
லாரா க்ரீன்
மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர்
1275 யார்க் அவென்யூ
நியூ யார்க்  10065 

எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! விமானம் புறப்பட இருக்கிறது. உங்கள் போனை ஸ்விட்ச் ஆப் செய்யவும் என்ற விமானப் பணிப்பெண்ணின் குரல் ஷெல்லியைக் கலைத்தது.
தன் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பைக்குள் போட்டாள். பின், தன் இடக்கை மணிக்கட்டில் கட்டியிருந்த கறுப்பு நிற கைக்கடிகாரத்தையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அது சென்ற வருடம் அவளுடைய பிறந்தநாள் பரிசாக டென்னிஸ் வாங்கிக் கொடுத்தது. பொத்துக் கொண்டு வந்த கண்ணீர்த் திரையைத் தாண்டி அவளால் அந்த கைக்கடிகாரத்தில் மணி பார்க்கவே முடியவில்லை.
***
சரியாக காலை பத்து மணிக்கெல்லாம் சாங்கி விமான நிலையத்தின், டெர்மினல் மூணில் டென்னிஸ் லிம் காத்துக் கொண்டிருந்தான். ஷெல்லிக்காக. அவளது கைபேசிக்குத் தொடர்பு கொண்டான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுடைய கைகளில் ஷெல்லிக்கு கொடுப்பதற்காக, பழைய டிராகன் பொம்மை ஒன்று இருந்தது.
(முற்றும்)

திங்கள், 25 மார்ச், 2013

பொள்ளாச்சி-வால்பாறை-டாப்ஸ்லிப்-பரம்பிக்குளம் மற்றும் பன்னீரின் திருமணம்

மார்ச் 18, திங்கள் கிழமையன்று கோயம்பத்தூர் அருகே அரசூரில் நண்பர் பன்னீர் செல்வத்தின் திருமணம். சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சேர  மூன்று நாள் திட்டம் உருவானது. என்னோடு அலுவலக நண்பர்கள் நந்தகிஷோர் மற்றும் சக்தி முருகன்.   மார்ச் 15 வெள்ளி மாலை அலுவலகத்திலிருந்து இரண்டு மணி முன்னதாகவே கிளம்புவதாகத் திட்டம். நண்பர் பன்னீருக்கு பரிசுப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, 4.30 மணிக்கு நந்த கிஷோர் காரில் பொள்ளாச்சி நோக்கி பயணம் தொடங்கினோம். நள்ளிரவிற்குள் சென்று சற்று ஓய்வெடுத்து மறுநாள் சுற்றத்  தொடங்குவதாகத் திட்டம். தரமான சாலைகள். திட்டமிட்டது போலவே இரவு ஒரு மணிக்கு பொள்ளாச்சி செல்ல முடிந்தது. முன் உறுதி செய்யப்பட்ட விடுதியில், தங்கினோம். வாடகை மூவருக்கு 900 ருபாய் என்று நினைக்கிறேன்; காலைச் சிற்றுண்டி இதில் அடக்கம். தங்குமிடம் சுத்தமாக, தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது. காலையில் 7 மணிக்கு எழுந்து கொண்டு 8 மணிக்கு தயாரானோம். காலை உணவும் நன்றாகவே  இருந்தது; இட்லி, வடை மற்றும் பீட்ரூட் துவையல். பீட்ரூட்க்கான இனிப்பு சுவையே இன்றி நல்ல ருசியுடன் இருந்தது. 

முதலில் வால் பாறை செல்வதாகத் திட்டம். பொள்ளாச்சி சந்தை வழியாக வால் பாறை சாலை அடைந்தோம். பொள்ளாச்சி சந்தையில் உள்ள மாரியம்மன் கோவில் கோபுரத்தில் முதல் அடுக்கின் மையத்தில் காந்தியடிகள், அவருக்கு வலது புறம் ராமகிருஷ்ண பரமஹம்சர், இடது புறம் புத்தர் இருப்பதை கண்டேன். மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. இது யாருடைய எண்ணம்? எப்படி கோவில் கோபுரத்தில் உருப்பெற்றது? 
எதனால் இவர்கள் மூவரும்? மையமாக காந்தி எதனால்?பல கேள்விகள். விசாரித்தரியும் அவகாசம் இல்லை அன்று.

ஆழியாறு அணைக்கட்டில் சிறிது நேரம் செலவழித்தோம். பராமரிப்பு ஏதுமற்று அலட்சியமாக விடப்பட்டிருகிறது அணைப் பூங்கா. பிளாஸ்டிக் குப்பைகள் வேறு. இத்தகைய அலட்சியப் போக்கிற்கு மாறாக, சுற்றுலாப் பகுதிகளை கேரளாவிடமும் கர்நாடகாவிடமும் கொடுத்துவிடலாம். முறையாகப் பராமரிக்கவாவது செய்வார்கள்.
 12 மணிக்குள் வால் பாறை சென்றோம். வால் பாறை ஒரு நகரம் போல் கடைகள் மற்றும்  மக்கள் கூட்டம் பெருகிக் காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் எவ்விதத் தடையுமின்றி உபயோகிக்கப்படுகிறது. எவ்விவிதப் பொறுப்புமின்றி குப்பைகளாய் சிதறடிக்கப்படுகிறது. இனிமேலும் இங்கே சூழல் பேணப்படும் என்ற கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையையும் அங்கே சிதறவிடப்பட்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் தகர்த்தெரிகின்றன.  
முன் உறுதி செய்யப்பட்ட விடுதியில் அறை  எடுத்துக்கொண்டோம்.  மதிய உணவின் போது சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. உணவு முடித்து, சின்னக்கல்லார் செல்ல முடிவெடுத்தோம் .
கோவிலின் கர்ப்பக் கிரகங்கள் போன்ற காடுகள் அழிக்கப்பட்டு எங்கும் தேயிலைத் தோட்டங்கள். பல்லுயிரியம் இங்கே எப்படி செழிக்கும்? மண்ணரிப்பைத் தடுக்க, ஆறுகள் பெருகிட புற்கள் வேண்டும். கடந்து செல்லும் மேகம் குளிர வானுயர்ந்த மரங்கள் வேண்டும். எல்லாம் இருக்கவே செய்தது ஒரு காலத்தில். பேராசையினால் அனைத்தும் சுரண்டப்பட்டுவிட்டபின், இயற்கைச் சமநிலைக்கு வழி ஏது? மீண்டும் காடுகளை இங்கே உருவாக விடுவது இன்னமும் சாத்தியம்தான் எனத் தோன்றுகிறது. ஆனால், தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் பெருமுதலாளிகள் வசம். அரசு பெருமுதலாளிகள் வசம். இதைப் பற்றி யாரும் பேசக்கூட முடியுமா என்ன? ஒழுங்கில் கத்தரிக்கப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்கள் சொல்வது மாபெரும் இயற்கைச் சீரழிவின், பேராசையின், சுரண்டலின் துயரக்கதை. இவற்றை எப்படி அழகென்று கொண்டாட முடியும்?
சின்ன கல்லார் பகுதியை சின் கோனா, சின்ன சிரபுஞ்சி என்று அழைக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்கள் தவிர அனைத்து மாதங்களும் மழை இருக்கக் கூடிய பகுதி. கோடை மாதங்களில் கூட கோடை மழை உண்டு. ஆனால், அங்கேகூட வறட்சி தென்படுகிறது இம்முறை. தண்ணீர் குறைவாகவே இருந்தது அருவியில். வனக் காவலர், ராமச்சந்திரன்; மிக இயலாபகப் பழகக் கூடிய, வெள்ளந்தியான பேச்சு கொண்ட மனிதர். அன்பு நிறைந்த, அரிதாகிவிட்ட கிராமத்து வாசனை இவர் பழகும் விதத்தில். நான் யானைகள்  பற்றி அதிகம் கேட்க, தன்னுடைய அனுபவங்களைச் பகிர்ந்து கொண்டிருந்தார். 5 வருடங்களாக இங்கே பணி புரிகிறார். தற்காலிக ஊழியர் 8000 ஊதியம். நிரந்தரமாகிவிடும் என்றார். 

சின்ன சிரபுஞ்சியில் தூறல் போட்டது. யானைகள் காணக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். ஏக்கம் ஏக்கமாகவே இருந்தது. அடுத்து நீரார் ஆணை சென்றோம். அழகான சூழலில் அமைந்த உயரமான அணை. உயர்ந்த இரு சிகரங்களுக்கு இடையே செல்லும் ஆற்றைத் தடுத்து கட்டியிருக்கிறார்கள்.
இன்னும் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் ஆனை  முடி. 5 மணிக்கு பிறகு அங்கே பார்க்க அனுமதி இல்லை. நாங்கள் சென்ற போது 6-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வனக் காவலர் அனுமதி மறுத்தார். எங்கள் அதிர்ஷ்டம். அத்தனை நேரம் இருந்த தூறல் நின்று  மேக  மூட்டம் விலகி வெயில் அடித்து வெளிச்சமிட்டிருந்தது. இது எங்களுக்கு சாதகமாக  அமைய வனக் காவலரிடம் கெஞ்சி உள்ளே சென்றோம். செஞ்சிவப்பாய் மேற்கில் ஆதவன், மேகங்களில் வண்ணங் குழைத்து விளையாடிய படியிருந்தான்.
 ஆனை முடி உச்சியில் மேகங்கள் மலை ஆழத்தில் தெரிகின்றன. மிக ரம்மியமான தோற்றம். கிளம்ப மனசில்லை ஆனை  வரும் பகுதி என்றார்கள். வராதா  என்ற நினைப்பு எனக்கு. விரைவாகவே திரும்பினோம்.
ஆனை முடி செல்ல ஓடிய போது எதிரே சிவப்புத் துண்டணிந்து கம்யுனிஸ்ட் தோற்றம் தந்த ஒரு தாத்தா குழு ஒன்றோடு வந்துகொண்டிருந்தார். உள்ளூர் வாசி. சொந்த ஊர் மன்னார்குடி. டீ குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் சிகரம் ஒன்றைக் காண்பித்து, நிறைய காதலர்கள் அங்கே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்.  இவருடைய காதலுக்கும் இதே மலைத் தொடர்கள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளது.  தான் காதலித்த பெண்ணைத் 
திருமணம்  செய்து  இங்கே வந்து டீ எஸ்டேட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 
இவர் தந்த அதிர்ச்சி செய்தி தனக்கு இரண்டு மனைவி என்பது. காதல் திருமணம் செய்த ஒருவரிடம் இதனை எதிர்பார்க்காத என்னுடைய மனம் இந்த அதிர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.  ஆனால் அவர் இதை எங்களிடம் வெகு இயல்பாகவே சொன்னார். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் என்று நினைக்கிறேன்.  தான் யானைகளிடம் இருந்து தப்பியது பற்றியும், சமீபத்தில் சிறுத்தை குழந்தைகளைத் தாக்கியது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். விடைபெற்று அறைக்குத் திரும்பி இரவுணவு முடித்து உறங்கச் சென்றோம் 

மறுநாள் காலை, டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம்.  6 மணி போல எழுந்து தயாரானோம். இயற்கை காலை வேளையில் குதூகலமாய் காட்சியளித்தது. பறவைகளின் கீச்சொலி காதுகளைத் துளைத்தது. சற்று முன்னதாக எழுந்து காலை நடை செல்லாமல் விட்டதற்காக வருந்தினேன். வால்பாறையிலிருந்து கீழிறங்கும் மலைச்சாலையில், காலைச்சூரிய ஒளி  பூமியைத் தொட முயற்சிக்க காற்றில் அசையும் இலைகள் கண்ணாமூச்சி ஆடித் தடுக்க முயற்சி செய்த வண்ணம் இருந்தது.  இலைகளின் அசைவு சூரிய ஒளியையும் நடனமாட  விட்டிருந்தது; கால் மாற்றித் தவிக்கும் கானுயிர்கள் போல நேர்கோட்டு நடனம்.



பாதி தூரத்தில் வரையாடு ஒன்று சாலை ஓரத்தில் தனித்து நின்று மேய்ந்துகொண்டிருந்தது. எளிமையான அழகு இந்த வரையாடு. அருகி வரும் இனம். மேற்கு தொடரின் இப்பகுதியிலேயே இவ்வினம் தற்போது இருக்கிறது. தமிழ் நாட்டின் மாநில விலங்கு. வால் பாறையில் நாங்கள் கண்ட ஒரே காட்டுயிர்:)

ஆழியாறு அணை வாசலில் சிறிய கடை ஒன்றில் காலை உணவு. இது போன்ற சிறு கடைகளில் கூட  கண்ணாடி தம்ளர்களில் டீ கிடைப்பதில்லை இப்போது. மக்கள் 'சுத்தமென்று' விரும்புவது மெழுகு தடவப்பட்ட அட்டை தம்லர்களையே. கண்ணாடித் தம்ளர்கள் கொஞ்ச நாளில் வழக்கொழிந்து போகும் போல. கடையில் டீ குடித்தால் கண்ணாடி தம்ளரில் குடிப்பதே  நான் விரும்புவது. 
   
அடுத்த அரை மணி நேரத்தில் டாப் ஸ்லிப் அடைந்தோம். டாப் ஸ்லிப்பும், பரம்பிக்குளமும் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயங்கள். டாப் ஸ்லிப் தமிழக எல்லை; பரம்பிகுளம் கேரள எல்லை. டாப் ஸ்லிப் தமிழக வனத்துறை பராமரிப்பில். பரம்பிக்குளம் கேரள வனத்துறை பராமரிப்பில்.  எல்லையில் வனத்துறை சோதனை மற்றும் பதிவு. குறிப்பாக மது எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை செய்கிறார்கள். மது முற்றிலும் தடை செய்யப்பட்ட வனப் பகுதி. வனப் பகுதிக்குள் காரில் இசை வேண்டாம் என்று  அறிவுறுத்துகிறார்கள். மக்கள் அதனை மதித்துச் சென்றது பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. புலிகள் வாழும் பகுதி என்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்ல  அனுமதி கெடையாது. நாங்கள் அனுமதி பெற்ற நேரத்தில், இரு சக்கர வாகனங்களில் வந்த நால்வர் அனுமதி மறுக்கப்பட, அதில் ஒருவர் அப்பாவியாக 'நடந்து செல்ல அனுமதி உண்டா?' என்றார். 



மழையின்றி வறட்சியே மலைகளிலும் தென்பட்டது அதோடு இது கோடையின் தொடக்கம். மிக மிக மோசமான சாலை தமிழக எல்லை வரை. சாலையில் கார் நகரும் சத்தம், அதோடு பறவைகளின் ஒலி,   காற்றில் அசையும் மூங்கில் எழுப்பும் 'கரக்' ஒலி அவ்வப்போது. மற்றபடி வனம் சோர்வுகொண்டு உறங்கும் அமைதி.
பரம்பிக்குளம் எல்லையில் கேரளத்தின் வன சோதனை மற்றும் அனுமதி மையம். வனத் துறை வாகனங்கள் மற்றும் சரணாலயத்தில் தங்குவோர் வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கானுலா செல்வதற்கு ஒரு வாகனத்திற்கு 18 பேர் தேவை. நாங்கள் மூவரே முதல்வர். ஆகவே காத்திருந்தோம். அடுத்து ஒரு நால்வர் குழு வந்தது அதனை அடுத்து பத்து பேர் கொண்ட ஒரு குழாம் வந்து சேர்ந்தது. நால்வர் மற்றும் பத்து பேர் குழு இரண்டுமே இளைஞர் பட்டாளம். வனம், கானுயிர், இயற்கை பற்றி எவ்வித அக்கறையும் அற்ற கும்பல். கானுலாவில்கூட சினிமாபேசி  கிண்டல செய்து சிரிப்பதே இவர்கள் அறிந்தது. வனம் இவர்களுக்கு குளிர் பிரதேசம். கானுயிர் இவர்களுக்கு வேடிக்கைப் பொருட்கள். வனத்தில் கானுலா செல்லும்முன்பு, பரம்பிக்குளம் வனச் சரணாலயம் பற்றி, அங்கு செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை பற்றி ஒரு காணொளி பார்க்கச் செய்தார்கள். மிக அழகாக  அதனைத்  தயாரித்திருந்ததார்கள். காணொளி முடியும் போது என் கண்கள் உணர்வு வசத்தால் நீர் கோர்த்துக்கொண்டன. கண் முன்னால் சிதைத்து சின்னா பின்னமாகும் இயற்கை. அக்கறையற்ற ஒரு சமூகம். கண்ணீர் வராமல் என்ன செய்யும்?

பரம்பிக்குளம் கேரளாவில் இருந்தாலும் தமிழர்களே அப்பகுதியில் பெரும்பாலும்  வசிக்கிறார்கள் போல. மிக அழகான வனப்பகுதி. பரம்பிக்குளம் அணை  இதற்கு முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தை நினைவுபடுத்தும், அதை விடக் கூட அழகான சூழல் கொண்ட அணை  நீர்த்தேக்கம். பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம் காமராஜர் காலத்தில் 1954-இல் தொடங்கி  1961-இல் முடிக்கப்பட்டுள்ளது 4கி. மீ தூரம் மலையை குடைந்து நீர்வழி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் காமாரஜருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறது. இந்த அணை ஓர் உதாரணம் மட்டுமே. தேர்தலில் தோற்றதால் இழப்பு அவருக்கில்லை,  தமிழக மக்களுக்கே என்று அவருக்குப் பின் மீண்டும் மீண்டும் வரும் ஆட்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்கள் தங்கள் ஓட்டால் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொண்ட சாபக்கேடு. மக்களாட்சி! 

யானையும், காட்டெருதும்,மானும், மிளாவும் காணக் கிடைத்தன. வாகனத்தில் எழுந்த பேச்சு சத்தத்தில், வந்த யானை கூட்டம் ஒன்று திரும்ப உள்ளேயே சென்று விட்டது.  இத்தனைக்கும் குறைவான சத்தமே. யானைகளின் கூர்மை ஆச்சர்யப்படுத்துவதாக இருந்தது. இன்னும் சற்று தூரத்தில் மற்றுமொரு சிறு  யானைக் கூட்டம் அமைதியாக புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.ஒன்று பெரிய யானை. மற்ற இரண்டும் சற்று சிறியவை. பெரிய யானையின் கால்களுக்குள் அதன் குட்டி நின்றிருந்திருக்கிறது தொலைவில் இருந்து பார்த்த போது தெரியவே இல்லை. நிழல் படத்திலேயே கண்டுகொள்ள முடிந்தது. 

ஒரு சிறு காட்டெருதுக் கூட்டமும், புள்ளிமான் மற்றும் மிளா கூட்டத்தையும் கண்டோம். மதிய உணவு, கானுலாவின் ஒரு பகுதியாக  பரம்பிக்குளத்திலேயே  ஏற்பாடாகி இருந்தது. உணவு நன்றாகவே இருந்தது. 11 மணி போல தொடங்கிய கானுலா 3 மணிக்கு நிறைவுற்றது.
மீண்டும் டாப் ஸ்லிப். ஆனை டாக்டர் திரு கே  கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெயரால் அமைந்த காட்சியகத்தைப் பார்வை இட்டோம், முழுதும் யானை மற்றும் யானை டாக்டரின்  நினைவாக. 30 வருடங்கள் யானைக்காகவே அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். டாப் ஸ்லிப் காட்டில் வாழ்ந்த, வாழும் யானைகளின் புகைப் படங்கள் மற்றும் பாடம் செய்யப்பட்ட விலங்குகள், அவைகளின் உறுப்புகள். யானையின் ஒரு பல்,  மனித முகத்தின் அளவோடு ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது. யானை தன்னுடைய பிரம்மாண்டத்தால் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 'பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல' என்பார்கள். நகரத்தில் வாழும் மனங்கள் மரத்துப் போன மனங்களோ? யானை பிரமிப்பளிக்கவில்லை என்றால் உணர்வுகள் மரத்துப் போனவர்களாகவே இருக்க வேண்டும்.

டாப் ஸ்லிப்பில், வனத் துறை வசம் பயிற்சியில் உள்ள யானைகள் எதிரே உள்ள புல்வெளியில் நின்றிருந்தன. அதில் கொம்பனும் ஒன்று. கொம்பன் பளீர் வெண்மை, நீள் தந்தங்களுடன் கம்பீரமாக நின்றிருந்தது. நின்ற இடத்தில் யானை நிகழ்த்தும் மிதமான துதிக்கை, கால் மற்றும் காது அசைவுகள் தியானம் போன்று மனதில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தக்கூடியவை. நண்பர்கள் எனைக் கிளப்ப, பார்வை விலக்க மனமின்றிக்  கிளம்பினோம்.
ஆனை மலை வார சந்தையில் பலாச் சுளைகளும், வாழை பழங்களும், வழித் துணைக்கு வாங்கிக் கொண்டோம். பொள்ளாச்சி வரை சென்று இளநீர் குடிக்கவே இல்லை இது வரை. அடுத்த இளநீர் கடையில் நிறுத்துவது என்ற முடிவோடு கோயம்பத்தூர் நோக்கி விரைந்தோம். இளநீர் கடை மட்டும் கண்ணில் படவே இல்லை. 8 மணிக்கு கோவை மாநகர். காந்தி புரம் பேருந்து நிலையம் அருகிலேயே தங்கிவிட எண்ணியிருந்தோம். எங்களை இறக்கி விட்டு, நந்தகிஷோர் தன் பாட்டி வீடு வரை சென்றார் பார்த்து வர. மிகக் குறைந்த வாடகையில், பேருந்து நிலையம் எதிர்கவே சுகாதாரம் பேணப்பட்ட விடுதி ஒன்று கிடைத்தது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. 

பன்னீருக்கு வாங்கிய புத்தகங்களை பரிசுத்தாள் சுற்றி வரலாம் என்று சக்தியும் நானும் சுற்றினோம். சக்தி வீட்டிற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாங்க எண்ணியிருந்தார். திரும்புவதற்குள் கடை பூட்டிவிட, லாலா ஸ்வீட்ஸ் சென்றோம். அடுத்து மதுரை இட்லி கடை. சக்தி சப்பாத்தி கேட்க, நான் முறைக்க பிறகு இட்லி ஆர்டர் செய்தான். பழங்களே எனக்கு அன்றிரவு போதுமானதாக இருந்தது. முந்தய நாளின் தொந்தரவுபட்ட தூக்கம், மிகுந்த களைப்பைக் கொடுத்திருந்தது.அறைக்குச் சென்றதும் தூங்கிவிட்டேன். 

பன்னீரின் திருமணம் காலை 5 மணிக்கு, அரசூரில். அரைமணி பயணம் கோயம்பத்தூரில் இருந்து. 4 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். காலையில் திருமணத்திற்கு சென்று சேர்ந்த பொழுது மணி 5.45. சென்ற நேரமும் தாலி கட்டும் நேரமும் சரியாக இருந்தது. நாங்களெல்லாம் தீர்க்க தரிசிகள்!
குளிர்ந்த காலை.  அழகிய, எளிய திருமணம். எளிமை அனைத்தும் அழகாகவே இருக்கிறது. ஒருவேளை இது எளிமை பற்றி என் மன மயக்கமோ! சூரியன் எங்களுக்கும்  தாமதமாக ஏறிப் பார்த்தது, முகூர்த்தம் முடிந்ததும்; அத்தனை தூரத்திலிருந்து வருபவனைக் குறை சொல்ல முடியாதுதான்! 

தம்பதியரைச் சந்தித்து பரிசுப் புத்தகம் கொடுத்து வாழ்த்தியானதும், அடுத்த முகூர்த்த நேரம் பந்தியில்! இட்லி, தோசை வடை, அல்வா, சேமியா ....காபியும் குடித்து முடித்து போகலாமா என்று ஒருவரை ஒருவர் பார்த்தோம். சென்னை வந்துதான் ஆக வேண்டும். காலை 8.30 மணிக்கு புறப்பட்டோம். 500 கி.மீ. பயணம். 3.30 மணிக்கெல்லாம் சென்னை அடைந்துவிட்டோம் இதில் நான்கு இடைவெளிகளும் அடக்கம். அருமையான சாலைகளே இதை சாத்தியமாக்கிற்று. அதிகக் களைப்புமில்லை. வெயில் சற்று அதிகமாக இருந்தது. காற்றில் சூடு உணர முடிந்தது; சென்னையில் சற்று குறைவே. காற்றில் வெக்கை தெரியவில்லை. சக்தி என்னை வட பழனியில் இறக்கி, வீடு சென்றான். மூன்று நாள் பயணம் இனிய நினைவுகளோடு நிறைவுற்றது.