செவ்வாய், 30 அக்டோபர், 2012



என் கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

     

எழுதியவர்- கணேஷ்


    சில வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருந்த போது, எழுத்தாளர் அசோகமித்திரன் இலக்கிய வாசகர்களுக்குப் பரிந்துரை செய்திருந்த பத்து புத்தகங்களில் நாமக்கல் கவிஞரின் "என் கதை" என்ற புத்தகமும் இடம்பெற்றிருந்ததைக் கண்டேன். அதன் பிறகான சில நாட்களில், சிங்கப்பூர் நூலகத்தில் துழாவிக் கொண்டிருந்தபோது தற்செயலாக இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது.
இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் நாமக்கல் கவிஞரைப் பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும், "கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்", "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது" போன்ற எளிய சந்தங்களினால் அமையப் பெற்ற பாட்டுக்கள் புனைந்தவர் என்பதும், "தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!" என்ற புகழ் வாய்ந்த வரியினைத் தமிழர்களுக்கு அளித்தவர் என்பதும்தான். கூடுதலாக, இவரைக் கெளரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு "செயின்ட் ஜார்ஜ்" கோட்டையில் சட்டசபைக்கு அருகில் உள்ள ஒரு மாளிகைக்கு இவரது பெயரைச் சூட்டியிருப்பதும் தெரியும். பிறகு, 2002-ஆம் வருடம்,கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நண்பன் வள்ளியப்பன் என்னுடைய பிறந்த நாளிற்கு நாமக்கல் கவிஞர் எழுதிய "அவனும் அவளும்" என்ற செய்யுள் வடிவில் அமைந்த புதினத்தைப் பரிசளித்தான். மிகவும் எளிய நடையில் அமைந்த புதினம் அது. இவ்வளவுதான் கவிஞரைப் பற்றி எனக்கிருந்த அறிமுகம்.





     "என் கதை" என்ற இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, கவிஞரைப் பற்றி நிறையவே தெரிந்துகொள்ள முடிந்தது. "என் கதை" நாமக்கல் கவிஞரின் சுய சரிதை. புத்தகத்தின் பின் அட்டையில் "இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுய சரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் "என் கதையும்" ஒன்று, என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. பொதுவாக நூலின் பின்னட்டையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்களை நான் நம்புவதில்லை. ஒரு நூலை முழுவதுமாகப் படித்து முடித்து புத்தகத்தை மூடுகையில், வாசகனுக்கு திருப்தியுடன் கூடிய ஒரு சின்ன புன்னகை அல்லது ஒரு சிறிய துக்கம், இவை இரண்டில் ஒரு உணர்ச்சியாவது தோன்றினால்தான் என் நோக்கில் ஒரு புத்தகம் சிறந்த புத்தகம் என்று பொருள்படும். விதிவிலக்காக, சில பேரிலக்கியங்களும், கூர்மையான மொழியில் எழுதப்பட்ட புதினங்களும் பிரம்மாண்டமான வெறுமையைத் தோற்றுவிப்பதுமுண்டு. சில உதாரணங்களாக, சிலப்பதிகாரம், கொற்றவை, ஏழாம் உலகம், நெடுங்குருதி போன்ற பிரதிகளைச் சொல்லலாம்.இந்தப் புத்தகம் எனக்குள் புன்னகையையும், அதிர்ச்சியையும், மெல்லிய துக்கத்தையும் அதன் பல பக்கங்கள் வழியாகப் புகுத்திக் கொண்டிருந்தது. எளிய உரைநடை, இனிய தமிழ், இவை யாவற்றிற்கும் மேலாக எழுத்தில் உண்மை, இவைதான் இந்தப் புத்தகத்தை மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர வைக்கிறது.

  நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையை ஒரு கவிஞர் என்ற அளவில்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், ஆச்சர்யமாக அவர் ஒரு மிகச் சிறந்த ஓவியர் என்பதும், ஒவியம் வரைதலையே தொழிலாகக் கொண்டிருந்தார் என்பதும், இந்த புத்தகத்தின் மூலமாக அறிய முடிகிறது. மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் போது, வெங்கடாசலம் என்ற நண்பரால் இவர் ஒரு ஓவியர் என்றுதான் அறிமுகப்படுத்தப்படுகிறார்.உச்சிப் பாறையிலிருந்து வீழும் நீர்போல, தன்னுடைய வாழ்க்கையை வேகமாகவும் சரளமாகவும் சொல்லிச் சென்று கொண்டேஇருக்கிறார்,கவிஞர்.பள்ளி வாழ்க்கையில், வகுப்பில் அமர்ந்து கொண்டிருக்கும்போதெல்லாம் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் படங்கள் வரைவதும், ஒரு சமயம் தன்னுடைய வெள்ளைக்கார ஆசிரியரை ஓவியமாகத் தீட்டிக் கொண்டிருந்தபோது, அந்த ஆசிரியரே அதைப் பார்க்க நேர்ந்து, கவிஞரைத் தனியே தன்னைச் சந்திக்க வரும்படி அழைத்து, அவருக்கு கெட்டி அட்டையிலான ஆங்கில 'பைபிள்' புத்தகமும் ஒரு விலையுயர்ந்த பேனாவும் பரிசளித்து அவரை ஆச்சர்யப்படுத்துவதும் மிகவும் அங்கதத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.

   சுய சரிதமாய் இருப்பினும் இந்த நூலின் அழகே, இது அதன் பல பகுதிகளில் புனைவைத் தொட்டுச் தொட்டுச் சென்று மீள்வதுதான். உதாரணத்திற்கு, கவிஞரின் அம்மா அவரது தெருவில் எல்லோரையும் பயமுறுத்தி வந்த பேயை ஓட ஓட விரட்டியது. மிகச் சில சந்தர்ப்பங்களில்தான், இத்தகைய காட்சிகளை நாம் நிஜ வாழ்க்கையில் காண முடிகிறது.

  ஓவியம்தான் கவிஞரின் பிரதான விருப்பமாகவும், பொருளீட்டித் தரக்கூடிய தொழிலாகவும் இருந்திருக்கிறது. தனது அபாரமான ஓவியத் திறமையினால் பல நண்பர்களையும் பெறுவதற்கரிய பல வாய்ப்புகளையும் கவிஞர் பெற்றிருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஓவியப் போட்டியில் கவிஞரின் ஓவியம் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதையொட்டி கவிஞருக்கு டெல்லியில் அரச விருந்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. நாமக்கல் நகரின் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தன்னுடைய இறந்து போன மகளை படம் வரைந்து தருமாறு வேண்ட, கவிஞரும் அச்சிறுமியை தத்ரூபமாக வரைந்து  தருகிறார். அந்தப் படத்தை வெகுநேரம் உற்றுப் பார்த்தபின் அந்த அதிகாரி ஆனந்த வாருதியில் திளைத்து, கண்ணீர் மல்க கவிஞரைத் தழுவிக் கொண்டு பாராட்டி வாழ்த்துகிறார்.ஆனால், கவிஞரின் இந்த அபாரமான ஓவியத் திறமையை அவரது தந்தை அங்கீகரிக்கவே இல்லை. அவரது ஆசையெல்லாம் தன்னுடைய மகன் தன்னைப் போலவே ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே. அதற்காக அவர் பெரிதும் வருந்தி உழைக்கிறார். தன்னுடைய உயரதிகாரியான ஒரு ஆங்கிலேயரைத் தொடர்பு கொண்டு, சிபாரிசு பெற்று, தன் மகனிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறார். ஆனால், கவிஞரோ போலீஸ் பணியில் தமக்கு நாட்டமில்லை என்று சொல்லிவிடுகிறார். தன்னுடைய மகன் போலீஸ் பணியை ஏற்க மறுத்தது கடைசிவரை ஒரு வடுவாகவே தங்கி விடுகிறது அவரது தந்தையின் மனதில்.

 இளமையில் , கோயம்புத்தூரில் படித்துக் கொண்டிருந்தபோது  தன்னுடைய நண்பனின் முறைப்பெண் சீதா என்ற பெண்ணிடம் தாம் கொண்ட மாசற்ற அன்பினையும்,  அது கடைசியில் ஒரு துயரமாக உருமாறி விடுவதையும் நெகிழ்வுற சித்தரிக்கிறார் கவிஞர். அந்த பெண்ணையும் அவள்மேல் தான் கொண்ட அன்பினையும் தெய்வீகத் தன்மைக்கு நெருக்கமாக நகர்த்திச் செல்கிறார். ஒரு வரியில் கூட 'காதல்' என்ற வார்த்தையையே கவிஞர் உபயோகிக்கவில்லை. முதிரா பருவத்தில் கொண்ட மாசற்ற அன்பு என்றே அந்த உறவு விவரிக்கப் படுகிறது. இருவரும் பிரிந்த பின், பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு ரயிலடியில் 'சீதா' என்ற அந்த பெண்ணை, குழந்தைகளுடன் கைம்பெண் கோலத்தில் பார்க்க நேர்கிறபோது கவிஞரின் துக்கம் சொல்லில் அடங்காததாகி விடுகிறது. அந்த காட்சியைக் கடக்கும்போது வாசகன் மனதிலும் அந்த வெம்மை படர்ந்து எரிகிறது.

  நூலின் ஆகச்சிறந்த கவித்துவ தருணமாகவும் இந்த உண்மைச் சம்பவம் அமைந்து விடுகிறது. அதன் பிறகான சில வருடங்கள் கழித்து, சீதா என்ற அந்தப் பெண்ணும் மரணமடைந்து விடுகிறார். இந்த இளவயதுக் காதலும், அது சென்று மறைந்த திசையும் ஒரு பேரிலக்கியத்தை வாசித்த வெறுமையை அளிக்கிறது. இது போல பல சம்பவங்கள் புனைவிற்கு நெருக்கமாக இருப்பதால்தான் ,இந்தக் கதை "சுய சரிதை" என்ற வகைமையையும் மீறி ஒரு முக்கியமான ஆக்கமாகத் தோற்றமளிக்கிறது.

  இந்த நூலில் முக்கியமாக நான் கவனித்தது, நாடறிந்த கவிஞரான இவர், தனது இலக்கியப் பணிகளைப் பற்றியோ, தனது இலக்கிய ஆர்வம் வளர்ந்து வந்த முறை பற்றியோ, தனது கவிதைகளைப் பற்றியோ விளக்கமாக எந்த இடத்திலும் விவரிக்கவே இல்லை என்பதுதான். கவிஞரின் கவனம் தனது வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலேயே நின்று விடுகிறது. ஒரு இடத்தில் மட்டும், திருக்குறளில், இரு குறள்களுக்கு, வித்தியாசமாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் தான் கண்டடைந்த விளக்கங்களை மிகவும் எளிமையாகப் பதிவு செய்கிறார். பரிமேலழகரின் உரை மட்டுமே அக்காலத்தில் திருக்குறளைப் புரிந்து கொள்வதற்கு இருந்த ஒரே கருவியாய் இருந்ததினால், பல அறிஞர்களுக்கும் பரிமேலழகரின், சில விளக்கங்கள் ஏற்றுக் கொள்ள  முடியாததாகவும்,மூல ஆசிரியரின் நோக்கத்திற்கு நெருக்கமாக இல்லாதிருந்ததாகவும் தோன்றுவதால், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் இந்த தனது  உரையினை முன்வைக்கிறார்.
அந்த இரு குறள்களும், அதற்கு முறையே பரிமேலழகரின் உரையும், நாமக்கல் கவிஞரின் உரையும் சுருக்கமாக கீழே தரப்பட்டிருக்கிறது.

          "குன்றேறி யானைப் போர்கண்டற்றால் தன்கைத்தொன்
       றுண்டாகச் செய்வான் வினை"

 பரிமேலழகர் உரை: (சுருக்கமாக) பிறர் பொருளை நம்பாமல், தன் சொந்த முயற்சியால்   பொருள் தேடிக் கொள்பவன் மலையின் மேலிருந்து யானைச் சண்டையைப் பார்ப்பவன் போல் அச்சமின்றி பிறரை ஏவிவிட்டுத் தான் சுகமாகச் சும்மா இருந்து சம்பாதித்துக் கொள்வான்.

  நாமக்கல் கவிஞருக்கும், அவரோடு சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த தீரர் சத்தியமூர்த்தி முதலான நண்பர்களுக்கும், பரிமேலழகரின் இந்த உரை ஏற்புடையதாக இல்லை. தன் முயற்சியால் பொருளைத் தேடிக் கொள்ளவேண்டும் என்ற பொருளைப் புகட்டவரும் வள்ளுவரின் இந்தக் குறளுக்கு பரிமேலழகரின் உரை, பொருத்தமில்லாமல் இருக்கிறது என்ற முடிவிற்கு வந்ததனால், கவிஞர் கீழ்க்கண்ட தமது உரையை முன்வைக்கிறார்.

நாமக்கல் கவிஞரின் உரை: இந்தக் குறளில் இடம்பெற்றுள்ள "கண்டற்றால்" என்ற சொல்லில் உள்ள, "காண்" என்பதற்கு"கண்ணால் காண்பது" என்ற பொருளும், "செய்வது" என்ற பொருளும் இருக்கின்றன. இவற்றுள், பரிமேலழகர், "கண்ணால் காண்பது" என்ற பொருளை அவரது உரையில் பயன்படுத்துகிறார். உண்மையில்,"செய்வது" என்ற பொருளைத்தான் இந்த உரையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதனால்,இந்தக் குறளிற்கு"பிறருடைய பணத்தையோ, பலத்தையோ மட்டும் நம்பிவிடாமல், தன்னுடைய சொந்த முதலைக்கொண்டும் சொந்த முயற்சியை நம்பியும், பொருள் சம்பாதிக்கும் காரியத்தில் இறங்குகின்றவன், உயரமான குன்றில் இருந்துகொண்டு கீழே இருக்கும் யானையோடு போர் செய்து, வெல்ல முயற்சிப்பதைப் போல நிச்சயமாக வெல்லுவான்." என்ற உரையே பொருத்தமானதாக அமைகிறது. யானையை வெல்ல முடியாவிட்டாலும் அபாயமில்லை. மேலும் சமநிலத்தில் யானையை வெல்ல முடியாது. ஆனால், உயரத்தில் இருந்து கொண்டு பள்ளத்தில் உள்ள யானையோடு பொருதும் போது, பள்ளத்தில் உள்ள யானையால் உயரத்தில் இருக்கும் மனிதனை ஒன்றும் செய்ய முடியாது.
மற்றும் ஒரு குறளிற்கும் கவிஞர் புத்துரை காண்கிறார்.
  
 "உண்ணாமை உள்ளதுயிர்நிலை ஊனுண்ண
       அண்ணாத்தல் செய்யாது அளறு"

பரிமேலழகர் உரை: (சுருக்கமாக) புலால் உண்ணாமையே மாந்தர்க்கு உயிர் நிலை எனப்படும் அறமாகும். பிற உயிரின் ஊனுண்ண நரகம் (அளறு) கூட வாய் திறக்காது.

நாமக்கல் கவிஞரின் உரை: பரிமேலழகரின் உரையில் " நரகம் (அளறு) கூட பிற உயிரின் ஊனை தின்பதற்கு வாய் திறக்காது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நரகம் கூட வாய் திறந்து தின்னாத ஒன்றினை மனிதர் ஏன் தின்ன வேண்டும்" என்ற மறைவான பொருளினையும், பரிமேலழகரின் உரை உணர்த்துகிறது. ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில், நரகம் ஏன் புலால் உண்ணவேண்டும்? நரகம் எதற்காக புலால் உண்ணாமையோடு ஒப்பிடப் பட்டிருக்கிறது? இந்தக் குறளின், பொருள் இப்படி இருந்தால் மூல ஆசிரியன் சொல்ல வந்த கருத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்.  அதாவது "புலால் உண்ணாமையே மாந்தர்க்கு உயிர் நிலை எனப்படும் அறமாகும். அந்த அறத்தையும் மீறி, புலால் உண்பவர்களை ஏற்றுக் கொள்ள நரகம் கூட வாய் திறக்காது. அதாவது , புலால் உண்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்ற கூரிய பொருள் இதன்மூலம் நமக்கு கிட்டுகிறது.

மேற்சொன்ன இரு குறட்பாக்களுக்கும் தான் கண்டடைந்த புதிய விளக்கங்களோடு தன்னுடைய தமிழ் ஆசிரியரும் தமிழறிஞருமான ஸ்ரீ ஆனையப்ப முதலியார் அவர்களிடம் விவாதிக்கிறார் கவிஞர். தன்னுடைய மாணவனின் புது உரையினையும் அந்த உரையானதுப் பரிமேலழகரின் உரையினைக் காட்டிலும் வள்ளுவரின் குறளிற்கு மிகவும் பொருந்திப் போயிருப்பதையும் கண்டு தன் மாணவனின் தமிழ் ஆற்றலையும் மெய்ப்பொருள் காணும் திறத்தினையும் சிலாகித்து மகிழ்கிறார்  ஸ்ரீ ஆனையப்ப முதலியார். .

கவிஞரின் வறுமை நிலையும் அவருக்கிருந்த கடன் தொல்லைகளும் இந்த சுய சரிதையில் மறைக்காமல் சொல்லப்பட்டிருக்கின்றன. கடன் தொல்லைகளிலிருந்து மீள முடியாமல் கவிஞர் திண்டாடும் போது, கவிஞரின் பணக்கார நண்பர்களான இருவர், கவிஞரின் கடனை முழுதும் தான் தீர்த்து வைப்பதாக வாக்களித்துச் செல்கிறார்கள். ஆனால், துர்பாக்கியமாக, அவர்கள் இருவராலும் அது முடியவில்லை. ஒருவர் அடுத்த நாளே, போலீசாரால், கைது செய்து பத்தாண்டுகள் சிறை வைக்கப்படுகிறார். இன்னொருவரோ, பணம் தருவதாக சொன்ன நாளில் மாரடைப்பால் இறந்து விடுகிறார். இச்சம்பவங்களின் மூலம் தன்னுடைய வாழ்வில் 'அதிர்ஷ்டம்' என்பதே இல்லை என்று கவிஞர் முடிவு கட்டுகிறார்.
     
தன் வாழ்வில் நடந்த நம்பமுடியாத சாகசங்களையும், நகைச்சுவை சம்பவங்களையும் இந்த நூலில் கவிஞர் விவரித்திருக்கிறார். உதாரணமாக, கவிஞரும் அவருடைய நண்பர் மாணிக்கம் நாயக்கரும், லாகூருக்கு அருகில் ஆப்கன் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்டு, சாதுர்யமாக தப்பித்துச் செல்லுதல். அதிக பணம் கேட்டு மிரட்டும் வடநாட்டு கோயில் பூசாரிகளிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டித் தப்பிப்பதும் புனைவில் மட்டுமே நடக்க சாத்தியமானவைகளாகத் தோன்றுகின்றன.
நூலின் இறுதி அத்தியாயமாக "பாரதி தரிசனம்". பாரதியின் மீதுள்ள அபாரமான பிரியத்தினால், கவிஞர் அவரை பலமுறை சந்திக்க முயன்று, பின் ஏதேதோ காரணங்களால் கவிஞருக்கு பாரதியைச் சந்திக்க முடியாமலே போய்விடுகிறது. பாரதியின் உறவுக்காரரான வெங்கடாசலம் என்பவர் நாமக்கல் கவிஞருக்கும் நெருங்கிய நண்பராவார். ஒருமுறை நாமக்கல் கவிஞர் காரைக்குடியில் ஒரு வேலையாய்ச் சென்றிருக்கும்போது, காரைக்குடிக்கு அருகில் இருக்கும் "கானாடுகாத்தான்" என்ற ஊருக்கு பாரதியார் வருகை தந்திருப்பதாக வெங்கடாசலம் தகவல் சொல்லவே, நாமக்கல் கவிஞரும் இதுதான் பாரதியைச் சந்திக்க தக்க தருணம் என்றெண்ணி வெங்கடாசலத்தையும் கூட்டிக்கொண்டு ஒரு மாட்டுவண்டியை வாடகைக்கு அமர்த்தி கானாடுகாத்தான் செல்கிறார். செல்லும் வழியெல்லாம் பாரதியாரிடம் என்னென்ன பேசலாம் என்று முன்திட்டங்களெல்லாம் போட்டுக்கொண்டு போகிறார்கள்.
        இருள் அடரத் துவங்கிய மாலை வேளையில், கானாடுகாத்தான் ஆற்றங்கரையில் பாரதியார் சில நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, இவர்கள் இருவரும் பாரதியாரைச் சந்திக்கிறார்கள். வெங்கடாசலம் பாரதியாரின் உறவுக்காரர் என்பதால், அவரைக் கண்டதும் பாரதி முகமலர்ந்து "அடே, வெங்கடாசலம்! நீயெங்கே இங்கே வந்தாய்? என்று அவரோடு பேசத் துவங்கி விடுகிறார். நீண்ட உரையாடலுக்குப் பின், வெங்கடாசலம் பாரதியாருக்கு கவிஞரை அறிமுகம் செய்து வைக்கிறார். "இவர்தான் ஸ்ரீ இராமலிங்கம் பிள்ளை. ஆர்டிஸ்ட்" என்று. உடனே, பாரதியார், இவரைப் பார்த்து, "அப்படியா? ஓவியரே! நீர் எம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்" என்று கம்பீரமாகச் சொல்லுகிறார். இராமலிங்கம் பிள்ளை ஒரு நல்ல கவிஞரும் கூட என்று அறிந்தவுடன், பாரதியார் நாமக்கல் கவிஞரை ஒரு பாடல் பாடிக் காட்டுமாறு வேண்டுகிறார்.



பாரதியாரைக் கண்டு, உன்மத்த நிலையில் இருந்த கவிஞருக்கோ பேசுவதற்கு வார்த்தைகளே வெளிவரவில்லை. ஒருவாராக, தன்னைத் திரட்டிக்கொண்டு, தன்னுடைய நெடுங்கவிதை ஒன்றை பாடிக் காட்டுகிறார் கவிஞர். கவிஞரின் பாடலைக் கேட்டு உற்சாகம் பொங்க, கவிஞரை வாழ்த்திப் பாராட்டுகிறார் பாரதியார். ஒரு மகா கவியின் முன்பு நின்று கொண்டு தன்னுடைய கவிதையைப் பாடிக் காட்டி, அவரிடமே பாராட்டு பெற்ற அந்த தருணம் ஒரு கனவு போலவே இருந்ததாகப் பதிவு செய்கிறார் நாமக்கல் கவிஞர். அதன்பிறகு, கவிஞர் பாரதியிடம் தயங்கியவாறே ஒரு பாடலைப் பாடும்படி வேண்டுகிறார். பாரதியோ சட்டென்று," ஆர்டருக்கெல்லாம் பாட்டு வராது. பாடும்போது கேட்டுக் கொள்ளும்" என்று முகத்திலறைந்தார் போல்ச் சொல்லி விடுகிறார். கவிஞருக்குள் மெல்லிய வருத்தம் படர்கிறது. பேசிக் கொண்டே, பாரதியாரும், கவிஞர் உள்ளிட்டவர்களும் ஒரு நண்பரின் வீட்டில் பாய் விரித்துப் படுத்துக் கொள்கிறார்கள்.

    அடுத்த நாள் காலை, ஐந்து மணிக்கெல்லாம், கவிஞரை ஒரு முரட்டுக் கரம் தட்டி எழுப்புகிறது. "என்ன ஓவியரே? பாடல் வேண்டும் என்று கேட்டீர்களலல்லவா? இதோ பாடல். எழுந்து கேளும்" என்று கவிஞரைத் துயிலெலுப்பி, பாரதியார் பாட ஆரம்பித்து விடுகிறார். கவிஞரும் அடித்துப் பிடித்து எழுந்து உட்காருகிறார்.அடுத்த மூன்று மணி நேரம், பாரதியின் பாட்டில் சிக்கிக் கிறங்கிப் போகிறார் கவிஞர். ஒரு தனித்துவம் வாய்ந்த கவிஞனின் நாவினில் ஒரு தனித்துவம் வாய்ந்த மொழியானது தன்னைச் செதுக்கிச் செதுக்கி, தனக்கே உரிய உச்சத்தை அடையும் ஆச்சர்யத்தைக் கவிஞர் கண்டு கொண்டிருந்தார். இன்னும் இன்னும் பாடமாட்டாரா? காலம் இந்தக் கணத்திலேயே உறைந்து நின்று விடலாகாதா? என்று ஏங்கத் துவங்கும் சமயம், திடீரென்று பாட்டை நிறுத்திக் கொண்டு, எழுந்து விடுகிறார் பாரதியார்.அனைவரிடமும் உடனே விடை பெற்றுக் கொண்டு, வீட்டிற்கு வெளியில் அவருக்காக காத்துக் கொண்டிருந்த மாட்டு வண்டியில், ஏறிச் சென்றுவிடுகிறார் பாரதியார். அந்த மகாகவி விடைப் பெற்றுச் சென்ற வெகு நேரத்திற்குப் பிறகும், அவரது பாடல் வரிகளை, காற்று சுமந்து கொண்டே நின்றதாக கவிஞருக்குத் தோன்றுகிறது. பாரதியைப் போலத்தான் நாமக்கல் கவிஞரும். என்ன நினைத்தாரோ? சட்டென்று நூலை நிறைவு செய்துவிட்டார்.

  என் கதை -நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை 

  சந்தியா பதிப்பகம்
    312 பக்கங்கள்;விலை: ரூ.160 

திங்கள், 8 அக்டோபர், 2012

இருளர் இன மக்கள்- பாலவாக்கம், திருவள்ளூர்


பொழுது புலரும் வேளையில் தொடங்கியது Youth For Seva நண்பர்களின் பயணம். மெல்லிய தூறலுடன் இதமான காலை. பயணத்தில் பங்கு கொள்வதாக இருந்த ஒன்பது பேரும் கிட்டத்தட்ட குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு வந்து சேர, ஏழு மணிக்கெல்லாம் திருமழிசை தாண்டினோம். ஒன்பது மணிக்கு பூண்டி நீர்த்தேக்கம். ஞாயிறுக்கும், ஞாயிறு விடுமுறையோ என்னவோ, சோம்பல் மிக, எழத் தாமதித்திருந்தது. இதமான காற்று வருடிக்கொடுக்க, ஏரி தந்த அமைதியில் திளைத்திருந்தோம்.

அன்றைய தினத்திற்கான பணி முன்னிழுக்க, பாலவாக்கம் இருளர் பழங்குடி இனக் குடியிருப்பு நோக்கி பயணமானோம். பாலவாக்கத்தில் திசை தவறி, காட்டு செல்லியம்மனைத் தரிசித்தோம். படர்ந்திருந்த கொடிகள் கூரை அமைத்திட இயற்கையோடு இயற்கையாய் அமைந்திருந்த அத்தெய்வத்தின் இருப்பிடம், கிடைத்த தரிசனம்.....திசை தவறியதற்காக மகிழ்ச்சியே கொண்டோம்.

மீண்டும் வந்த சாலையில் திரும்பி, சரியான திருப்பம் அடைந்து, இருளர் பழங்குடியினர் குடியிருப்புக்குப் பயணமானோம். நேரம் பத்து மணி. வனவாசி கேந்திரத்தின் நலப் பணியாளர், தமிழ் ஆசிரியர் திரு கண்ணிராஜ் எங்களை வரவேற்று, பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், அங்கு வசிக்கும் மக்களைப் பற்றி எங்களுக்கு சுருக்கமாக விவரித்தார். அங்கே 150-க்கும் அதிகமான இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி குடும்பங்கள் குடி அமர்த்தப்பட்டிருக்கின்றன. இம்மக்கள், முன்பு கொத்தடிமைகளாக இருந்திருக்கின்றனர். வனவாசி கேந்த்ரா, அரசாங்கத்தின் உதவியுடன் இம்மக்களுக்கான வாழ்வாதாரங்களை உருவாக்கியிருக்கின்றது. பெரும்பாலோர் தற்போது அரிசி ஆலைகளில் கூலி வேலைக்குச் செல்கின்றனர். சிலர் வன அலுவலகங்களிலும் பணி புரிகின்றனர்.







தமிழாசிரியர், அங்கே மருத்துவ தன்னார்வலராகப் பணி புரியும் திரு பூபாலனை அறிமுகம் செய்தார். அக்குடியிருப்பின் குழந்தைகளுக்கு, மாலை மற்றும் சனிக் கிழமைகளில் கூடுதல் வகுப்புகளின் மூலம் பள்ளிக் கல்வியில் அவர்கள் முன்னேற உதவுவதோடு, வாழ்வின் அடிப்படைக் கல்வியினையும் கற்பிக்கிறார், சரண்யா. அவர் சிரிப்பில் மனதுக்குகந்த நற்பணி செய்யும் நிறைவு.

கூடுதல் வகுப்புகளுக்கு ஞாயிறு விடுமுறை எனினும், எங்கள் வருகை காரணமாக, குழந்தைகள் வந்திருந்தார்கள். பத்தில் தொடங்கிய எண்ணிக்கை சற்று நேரத்தில் இருபதாகி, இன்னும் சற்று நேரத்தில் முப்பது ஆனது. பள்ளி செல்ல இருக்கும் குழந்தை முதல், 9 படிக்கும் குழந்தை வரை இதில் அடக்கம். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை எண்ணிக்கையில் மிஞ்சியிருந்தது, எங்களை ஆச்சர்யத்திலும் அதே சமயத்தில் மிகுந்த மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

கூடிய குழந்தைகள் ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகம் செய்து கொள்ள, அவர்களுடனான எங்களுடைய கலந்துரையாடல்  தொடங்கியது. முதல் விளையாட்டு, குழந்தைகள் ஒவ்வொருவராக விலங்கு ஒன்றின் பெயரினைச் சொல்ல வேண்டும். ஒருவர் சொல்லிய விலங்கினை இன்னொருவர் சொல்லக் கூடாது. ஆச்சர்யப்படும்படியான விரைவுடன், குழந்தைகள் விலங்குகளின் பெயரை அடுக்கினர். ஒருவர் கூட மற்றவர் சொன்ன விலங்கினை திருப்பிக் கூறவில்லை. அடுத்ததாக, செந்தில் தெரிந்த திருக்குறள் கூறும்படிக் கேட்டார். இரு குழந்தைகள் இருவேறு குறள்களுடன் முன்வந்தனர். பொறுமை பற்றியும், வாய்மை பற்றியும் இருவேறு குறள்கள். அவ்விரண்டு குறள்களுக்கும்  விளக்கம் கூறி விவரித்தார் செந்தில்.  குழந்தைகளுக்கு நேரம் பார்க்கத் தெரியாததது தெரிய வர, செந்திலும் நானும்  நேரம் பார்ப்பது எவ்வாறு என்று விவரித்தோம்.
பேச ஆரம்பித்த சற்று நேரத்திலேயே, எளிதில் திறந்துவிடாத நம் மனம் திறந்து உள்ளமர்ந்து கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கே இருக்கின்றது. எவ்விதமானதோர் எதிர்பார்ப்பும் இன்றி,  மகிழ்ச்சியாய் எங்களோடு தங்கள் நேரம் செலவழித்தனர். பொய்ப் பணிவு இல்லை. போலி அன்பு இல்லை. ஏன், போலி என்று எதுவும் இல்லை அவர்களிடம். அன்றலர்ந்த மலர்கள்!

குழந்தைகளோடு இணைந்து ஒவ்வொருவர் வீடுகளுக்காகச் சென்றோம். பருவம் அடைந்தவுடன் பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்ட பெண் பற்றிக் கேள்விப்பட்டு, பிரியா அக்குழந்தையிடம் சென்று பேசினார். அப்பெண் குழந்தையின் தாயிடமும் பேசினார். இருந்தும், இதுபோன்ற மனத்தடைகள் ஒரு பகிர்ந்துரையாடலில் அகலுவதில்லை. தொடர்ந்த முயற்சிகள் தேவையாகிறது.




பெரும்பாலான  குழந்தைகளின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். சந்திக்கக் கிடைத்த சிலர், தங்கள் பிள்ளைகளை ஆண், பெண் பாகுபாடு இன்றி பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வத்தோடு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலணிகள் இல்லாது எங்களைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு மத்தியில் காலணிகளோடு செல்வது எங்களுக்கு ஏதோ போல் இருந்தது. காலணிகள் காட்டிலும், அவர்களுடைய உடனடித் தேவை, நல்ல மாற்று உடையும், எழுது புத்தகங்களுமே.

பெற்றோர் சந்திப்பு முடிந்து, இறை, குரு வணக்கப்  பாடல்களுடன் குழந்தைகளுடனான  எங்கள் சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது. ப்ரியாவும், நண்பர்களும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். சிலர் மாலை குளிப்பது தெரியவர, அவர்களை காலையில் பள்ளி செல்லும் முன் குளிக்க வலியுறுத்தினோம். சிறு கணக்குப் புதிர்கள், கதை சொல்லல், பாடல் என்று தொடர்ந்து, குழந்தைகள் கொண்டாட்டமாக நடனமும் ஆடினர்.



2.30 மணிக்கு, சந்திப்பு முடிந்து கிளம்பினோம், நிறைந்து எடை கூடிய மனங்களுடன்.



எங்கள் கைகளை உரிமையோடு பிடித்துக்கொண்டு  எங்களைச் சுற்றி சுற்றி வந்து வழியனுப்பிய இளந்தளிர்கள், மனதின் எடையை மேலும் கூட்டவே செய்தன. கார் கண்ணாடித் திரையில் படிந்திருந்த தூசியில்   தங்கள் கையொப்பம் இட்டு, சுடர் விடும் முகங்களோடு கையசைத்து விடைகொடுத்தனர். திரும்பும் வழியில் சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்ட சிவன் கோவில் சென்று, சென்னை திரும்பினோம்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

அட்லஸ் (சிறுகதை)

ஒளியுமிழும் அந்தச் சிறிய கருங்கல் என்னருகே விழுந்தபோது, நான், " பைந்தமிழ் இலக்கணம் ஐவகைப் படும்.அவையாவன: எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் மற்றும் அணியிலக்கணம்" என்று சத்தமாய் மனனம் செய்து கொண்டிருந்தேன். படிப்பதிலிருந்து ஒரு விடுதலையை எதிர்பார்த்துக் கிடந்த எனக்கு, அந்தக் கல் சட்டென்று ஒரு அக மலர்ச்சியை ஏற்படுத்தியது. கைநீட்டி அந்தக் கல்லை எடுத்து ஆராய்ந்தேன்.
எந்த தேவதூதன் எனக்காக அந்தக் கல்லை எறிந்தானோ? படிப்பதைத் தவிர எந்தக் காரியமாய் இருந்தாலும் தாராளமாகச் செய் என்று மனம் வேகமாக கட்டளையிட்டது.அச்சிறிய கருங்கல் ஈரமாய் இருந்தது. கல்லின் குளிர்ச்சி வேகமாய் என் விரல்களில் பரவியது. உள்ளங்கையில் வைத்து அந்தக் கல்லை மெதுவாக உருட்டிப் பார்த்தேன். என்னுடைய சிவந்த உள்ளங்கைகளுக்கு அந்தக் கருங்கல் ஒரு சோபிதத்தை அளிப்பதை உணர முடிந்தது.
அந்த அழகிய கல்லிலிருந்து என் பார்வையை விலக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது இன்னொரு கல்லொன்று இம்முறை என் மடியில் வைத்திருந்த தமிழ் புத்தகத்தில் விழுந்தது. சட்டென்று வெளியுலக போதமடைந்து என்னைச் சுற்றிப் பார்த்தேன்.
பக்கத்தில் இருந்த பாக்கு மரத்தினடியில் அமர்ந்திருந்த திலீபன் என்னை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் கையில் என்மேல் எறிவதற்குத் தயாராய் இன்னொரு கல்லும் இருந்தது.
என்னடா? என்றேன்.
என்னா நொன்னாடா? எம்புட்டு நேரமாடா ஒன்னியக் கூப்புட்டுக்கிட்டுருக்கேன்?
சரி சொல்லு. சார் பாத்துரப் போறாரு.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சக்திவேல் சாருக்கு வெறி வந்து விடும். திசைகளைக் கடந்து வரும் காற்று போல கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கள் முன் தோன்றி விடும் சுபாவம் கொண்டவர். எங்களிடம் அவர் பேசுவது தன் கையில் இருக்கும் மணிப் பிரம்பின் மூலமாகத்தான். ஒளி மிகுந்த தன்னுடைய உடைவாளால் ஒரு "சாமுராய்" வீரன் தன் எதிரிகளை லாவகமாக வீழ்த்துவது போல சக்திவேல் சார் தன் மணிப்பிரம்பைச் சுழற்றி எங்களை வீறு வீறென்று வீறி விடுவார்.
முடிவின்றி வீசும் சாயங்காலக் காற்றுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவராய், மைதானத்து மணலில் 'சேர்' போட்டு அமர்ந்திருந்த சக்திவேல் சாரை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டே மெல்லிய குரலில் திலீபன் சொன்னான்.
'அட்லஸ்' வந்திருகார்ரா!
‘அட்லஸ்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் என் புலன்கள் பொங்கின.
'எங்கடா? என்றேன் ஆவேசமாய். ஒளியின் வேகத்தில் விழிகள் பள்ளி மைதானத்தை வட்டமிட்டுத் திரும்பின.
வராண்டாவுல நடந்து வர்றாப்ள. சீக்கிரம் பாரு. அவசரப் படுத்தினான் திலீபன்.
எங்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்து மணல்பரப்பை கைகளால் அளைந்து கொண்டே படித்துக் (பேசிக்) கொண்டிருந்த சரவணன், நரேன், விஜயகுமார், சதாசிவம் என யாவரின் விழிகளும் வராண்டாவை நோக்கி மலர்வதைப் பார்த்துக் கொண்டே என் விழிகளும் வராண்டாவில் விழுந்தன.
ஆம். கையில் போர்வாள் இல்லாத ஒரு "க்ளேடியேட்டர்" போல வராண்டாவில் விரைந்து வந்து கொண்டிருந்தார் அட்லஸ். ஆறடியைத் தாண்டும் ஆகிருதியுடன் தன்  முரட்டு உடலின் ஒவ்வொரு அசைவும் வீரத்தை எதிரொலிக்க "அட்லஸ்", சக்திவேல் சாரைப் பார்த்து வந்து கொண்டிருந்தார்.
"அட்லஸ்" என்று எங்கள் அனைவராலும் பெருமிதத்தோடு அழைக்கப் படுபவர் வேறு யாருமல்ல. எங்கள் வகுப்பில் படிக்கும் கண்ணனின் அப்பாதான்.  'முத்தையா' என்பது அவருடைய பெயர். ஆனால், எங்களுக்கே உரிய உலகில் அவருக்கு நாங்கள் இட்ட பெயர் ‘அட்லஸ்’. இந்தப் பெயர் எங்கள் வகுப்புப் பையன்களுக்கு மட்டுமே தெரிந்த பெயர். பொம்பளப் பிள்ளைகளுக்குத் தெரியாது. ஒரு பாக்கெட் கடலை முட்டாயி வாங்கித் தந்தாலும் அவளுகளுக்கு சொல்லிரக் கூடாதுரா! என்று எங்களுக்குள் ரகசியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தோம்.
பெயர்க் காரணம் ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. சங்கதி இதுதான். எங்கள் பதினான்கு வயதில் அதுவரை நாங்கள் யாருமே அவரைப் போன்ற ஒரு பலசாலியை இந்தப் பாரின்மிசைப் பார்த்ததில்லை. கரிய பேருருவம். உயரம் என்றால் அப்படி ஒரு உயரம். என்னையும் விஜயகுமாரையும் ஒருவரின் மேல் மற்றொருவர் நிற்கும்படிச் செய்தால் அவருடைய தோளை எட்ட முடியும். இரும்பை உருக்கி வார்த்தது போன்ற தோள்கள். இரு பாறாங்கற்களைச் செதுக்கிப் பொருத்தியது போன்ற மார்பு. கரடு முரடான கைகள். கையை மடக்கி பலம் காட்டத் துவங்கினால் அவருக்குப் பின்னால் அதுவரைத் தெரிந்து கொண்டிருந்த நிலக் காட்சி மறையும். ஆறு பாயக் கூடிய அகன்ற முதுகு. எங்களூர்ப் பெருமாள் கோயிலின் முகப்புச் சுவரில் வரைந்து வைத்த அனுமாரின் தொடைகளைப் போன்ற தொடைகள். எங்கள் தமிழ் டீச்சர் "வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே" என்ற செய்யுளைச் சொல்லித் தருகையில் எங்கள் அனைவரின் கற்பனையிலும் ஒரே நேரத்தில் தோன்றுபவர். 
அட்லஸோட பைசெப்ஸ் இருபது இன்ச்சுடா! என்று சரவணன் சொன்ன போது எங்கள் வகுப்பினில் எவரும் மறுத்துப் பேசவில்லை.
சரவணன் ஒரு விஷயம் சொன்னால் அது உண்மையாய்த்தான் இருக்கும். முதல் ரேங்க் வாங்குகிறவன்  என்பதால் எப்போதும் அவனது வார்த்தைக்கு நாங்கள் மறுப்பு சொல்வதேயில்லை.
பிரசன்னா மட்டும் கேட்டான், "ஹீமேனை" விடவா?
ஹீமேன் என்னடா ஹீமேன். ஹல்க் ஹோகனை** விட பெரிய பைசெப்ஸ்டா அட்லஸுக்கு.
நாங்கள் அனைவரும் அதனை நம்பத் துவங்கி இருந்தோம்.
திலீபன்தான் கண்ணனின் அப்பாவுக்கு 'அட்லஸ்' என்று பெயர் வருவதற்குப் 'பிள்ளையார் சுழி' போட்டவன். அதுவரை நாங்கள் அதிகம் கேட்டிருக்காத பெயர். ஊரிலேயே அதிபலசாலியான அவருக்கு என்ன பெயர் வைப்பது என்று ஒரு மதிய உணவு இடைவேளையில் காலியாகக் கிடந்த பெஞ்சுகளில் அமர்ந்து யாவரும் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் அவரவர்க்குத் தெரிந்த பெயரைச் சொல்ல வேண்டும். நடுவர் பொறுப்பு வகித்த கண்ணன் கடைசியாக ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹீமேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், அலெக்ஸாண்டர் என்று வரிசையாக சொல்லப்பட்டன பெயர்கள். தன் அப்பாவின் வீரத்திற்கும் ஆகிருதிக்கும் ஏற்ற பெயரை எதிர்பார்த்திருந்த கண்ணன், நாங்கள் சொன்ன எந்தப் பெயரையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் நிராகரித்துக் கொண்டே வந்தான். என் கற்பனைக்கெட்டிய பெயரை நானும் யோசிக்க ஆரம்பித்தேன். வெங்கடேஸ்வரா தியேட்டருக்குப்பின்னால் உள்ள 'முனீஸ்வரன்'  சிலை போல கம்பீரமாக இருந்ததினால் நான் அவருக்கு "முனீஸ்'  என்ற பெயரை முன்வைத்தேன்.
நல்ல வேள, "சனீஸ்' னு சொல்லாமப் போனடா! கண்ணனின் கண்கள் என்னை எரித்தன.
நரேன் ஒருவன் தான் எங்கள் வகுப்பிலேயே பணக்காரன். அவன் அப்பா வைர வியாபாரம் செய்பவர். மற்ற யாவரும் "அப்பிராணி" வீட்டுப் பிள்ளைகள். நாங்கள் அதுவரைப் பார்த்தேயிராத பழங்களையெல்லாம் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடியவன். அவனுடைய பிறந்த நாளின் போது அவன் வீட்டில் 'கேக்' எல்லாம் வெட்டிக் கொண்டாடுவார்கள்.
பள்ளி விடுமுறைகளில் 'மெட்ராஸ்' வரை போய் வருபவன். அவன்தான் சொன்னான், டேய், கண்ணனோட அப்பா 'ஹெர்குலஸ்' மாதிரி இருக்கார்ரா!
டேய் குண்டா! சைக்கிள் கம்பெனிப் பேரெல்லாம் சொல்லக் கூடாது என்று வாரினான் பிரசன்னா.
டேய்! பொடுகுத் தலையா! போன லீவுல மெட்ராஸ் போயிருந்தப்ப ஆர்னால்ட் நடிச்ச "ஹெர்குலஸ்' படம் பாத்தேண்டா. "ஹெர்குலஸ்" ங்கிறவென் கிரேக்க நாட்டு வீரன்டா.
நம்ம மதுரை வீரன் மாதிரியா? சதாசிவம் கேட்டான்.
ஆமாமாம். அப்படியும் வச்சுக்கலாம். ஹெர்குலஸ் ஆர்ம்ஸ் கண்ணனோட அப்பா ஆர்ம்ஸ் மாதிரியே இருந்துச்சுடா.
நரேன் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று நாங்கள் குழம்பியபோது விஜயகுமார், தான் உட்கார்ந்திருந்த பெஞ்சிலேயே சாய்ந்து படுத்துக்கொண்டு எங்களையெல்லாம்  திட்ட ஆரம்பித்தான். டேய்! ஒரு நல்ல பேரை வச்சுத் தொலைங்கடா! குண்டன் சொல்ற பேரு நல்லாத்தாண்டா இருக்கு. நம்மெல்லாம் லீவு விட்டா சீலயம்பட்டி கூடத் தாண்ட மாட்டோம். மெட்ராஸ் வரை போய் வாரவேன் சொன்னாக் கேளுங்களேண்டா.
கண்ணன் இந்தப் பெயரை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று குழம்பினான்.
அதுவரை அமைதியாய் சிந்தித்துக் கொண்டிருந்த திலீபனின் மூளையில் 'பல்பு' எரிந்தது. டேய், நானும் அந்தப் படத்தப் பாத்திருக்கேண்டா.இடைவேளைக்கு அப்புறம் அந்தப் படத்துல 'ஹெர்குலஸ்' வில்லய்ங்க கிட்ட மாட்டிகுவான்டா. அப்ப எங்கிருந்தோ ஒரு வீரன் வந்து அவெய்ங்கள கிழி கிழின்னு கிழிச்சிட்டு ஹெர்குலஸ்ஸ காப்பாத்துவான்டா. அவன் ஹெர்குலஸ்ஸ விடவும் பலசாலிடா.
ஆமாண்டா , அவன் பேரு ‘அட்லஸ்’டா! நரேன் கத்தினான்.
‘அட்லஸ்’ என்ற பெயரில் ஒட்டியிருந்த வசீகரம் எங்களுக்குப் பிடித்திருந்தது. கூடுதலாக , சரவணன் சொன்ன இன்னொரு விஷயமும். அட்லஸ் என்பவன்தான் இந்தப் பூமியைத் தன் தோளில் தாங்குபவனாம்.
தன் அப்பாவை இந்த பூமியைத் தன் தோளில் சுமப்பவனோடு ஒப்பிட்டதும் கண்ணனின் முகம் பெருமிதத்தால் ஒளிர்ந்தது.
அன்றோடு கண்ணனின் அப்பா எங்களுக்கெல்லாம் ‘அட்லஸ்’ ஆனார்.
***
ஒட்டு மொத்த ஊரிலும் மூன்று பலசாலிகள்தான் இருந்தார்கள். அட்லஸ், பூங்குடி மற்றும் எம்.ஜி.யார்.
பூங்குடி படிக்காதவன். ஊரறிந்த சிடுமூஞ்சி. மெயின் ரோட்டில் அடிக்கடி அவனைப் பார்க்கலாம். எங்கள் ஊரில் இருந்து வடநாட்டிற்குச் செல்லும் லாரிகளில் தினமும் வாழைக்காய் லோடு ஏற்றி இறக்குபவன். கேரளத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து நிற்கும் லாரிகளில் இருந்தும் பலாப் பழ லோடு இறக்குவான். சிறுவர்களைக் கண்டாலே கண்கள் சிவக்க இரைந்து விழுபவன். காது கூசும் கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக அவன் சொல்வதைக் கேட்கையில் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கும். மாலை வேளையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடும் 'ஹை ஸ்கூல்" மைதானத்தில் பத்து ரவுண்டு ஓடி விட்டு, "புல் அப்ஸ்" கம்பியில் மூச்சு விடாமல் இருபத்தி ஐந்து முறை புல் அப்ஸ் எடுப்பான். பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கே மூச்சிரைக்கும். அதற்குள் அவனைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடி விடும். கூட்டம் கூடக் கூட அவனது இறுமாப்பும் கூடும். அண்ணே! இன்னும் பத்து புல் உப்ஸ் எடுங்கண்ணே! என்று கெஞ்சுவோம். வள்ளென்று விழுவான். மூர்க்கம் கூடிப் போய் சில சமயம் மைதானத்தில் இருக்கும் கற்களை எடுத்து எங்களின் மேல் எரியத் துவங்கிவிடுவான்.
எம்.ஜி.யார் கொஞ்சம் தன்மையானவன். அவனுடைய தம்பி நம்பியாரோடுதான் அவன் எப்போதும் ஊர்சுற்றிக் கொண்டிருப்பான். அவர்களின் அப்பா கந்தபிள்ளை மிகத் தீவிரமான சினிமா பைத்தியம். அந்தக் காலத்து "தெருக் கூத்து" கலைஞரும் கூட. யார் சொல்லியும் கேட்காமல் தன் இரு மகன்களுக்கும் சினிமா நடிகர்களின் பெயர்களைச் சூட்டி விட்டார்.
எம்.ஜி.யாரும் நம்பியாரும் தெருவில் சேர்ந்து நடந்து போகும் போது, ஊரில் வேண்டுமென்றே அவர்கள் பெயரை உரக்கக் கூப்பிட்டு கேலி செய்வார்கள். கேலி கிண்டல்களையெல்லாம் ஒற்றைப் புன்னகையில் கடந்து செல்லப் பழகியிருந்தார்கள் அவர்கள்.  
பூங்குடியை விடவும் எம்.ஜி.யார் பலசாலி. ஆனாலும் அவன் எந்தப் பொதுவெளியிலும் உடற்பயிற்சி செய்து நாங்கள் பார்த்ததில்லை. அவன் வீட்டிற்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உடற்பயிற்சி செய்பவன் என்று கேள்விப் பட்டிருந்தோம். எப்போதாவது 'ஹை ஸ்கூல்" மைதானத்தில் தன் சட்டையைக் கழட்டி விட்டு "கபடி" விளையாடும் போதுதான் அவனுடைய உடற்கட்டைப் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும். அது மாதிரியான சந்தர்ப்பங்களில் "கபடி" விளையாட்டிலிருந்து விலகி எல்லாருடைய கண்களும் எம்.ஜி.யாரின் கல்லுடல் மீதே மொய்த்திருக்கும்.
இவர்களெல்லாம் யுகாந்திரங்களாக முயன்றாலும் எட்டி விட முடியாத உயரத்தில் இருப்பவர் எங்கள் அட்லஸ். ஐம்பொன் சிலை போல வசீகரிக்கக் கூடிய உடலழகும் சௌந்தர்யம் பொழியும் மென்னகையை எப்போதும் தாங்கியிருக்கும் அம்சமான முகமும் எங்களைப் போன்ற சிறுவர்களையும் அவருக்கு நண்பர்களாக்கின. எங்கள் ஒவ்வொருவரின் பெயரும் அவருக்கு நினைவில் இருக்கும். அட்லஸ் எங்கள் ஊர் காவல் நிலையத்தில் போலீஸ் "ஏட்டையாவாக" பணிபுரிந்தார். அதனால் ஊரில் யாவரும் அவரிடம் அகலாது அணுகாது தீக்காய்ந்தார்கள். தேரடித் தெருவில் பிள்ளையார் கோயிலின் பின்புறம் ஆச்சர்யமான முரணாக "காவல் நிலையம்" இருந்தது. தெருவில் நடந்து போகும் யாருக்கும் காவல் நிலைய முகப்பில் அடிக்கடி அட்லஸ் தன் முன் மரியாதையாக கைகளை கட்டி நின்றிருக்கும் ஒரு சிறு கூட்டத்திற்கு அறிவுரை சொல்லும் காட்சி காணக் கிடைக்கும். ஓடையில் சப்தமின்றி பாயும் குளிர்ந்த நீராய் எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் அட்லஸ் சில நேரங்களில் பெரும் பாறைகளையே ஆக்ரோசத்துடன் புரட்டிப் போடும் காட்டாறாய் மாறி குற்றம் செய்தவர்களை அடித்து காவல் நிலையத்திற்குள் இழுத்துப் போவதைப் பார்க்கையில் மனம் அதிர்ந்து பின்வாங்கும். அது போன்ற சமயங்களில் அட்லஸ் நடந்து போன கால் தடத்திலும் ரௌத்திரம் படிந்திருப்பதை உணர முடியும்.
அட்லஸுக்கு ஊருக்குள் புகழ் சேர்த்தது அவரின் உடலழகைக் காட்டிலும் அவர் செய்யும் சாகசங்கள்தான். குறிப்பாக, பாம்படிப்பதில். எங்களூர்ப் பாம்புகளுக்கு சிம்ம சொப்பனம் அவர். எந்த வகைப் பாம்பாக இருந்தாலும், "பதம்" பார்த்து விடுவார். அருகாமை வீடுகளின் பின்புறம் உள்ள தோட்டங்களில் எப்போதாவது பாம்பு நுழைந்து விடும். விழுந்தடித்துக் கொண்டு அட்லஸுக்கு தகவல் சொல்வார்கள் தெருவாசிகள். தகவல் தெரிந்தவுடன், ஒளியுடன் கூடிய கண்களோடு, பூட்ஸுக்கு மேலே, இரு சாக்குப் பைகளைக் கிழித்து முழங்கால் வரை பேண்ட்டைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டு பாம்படிக்கும் தொரட்டியை கையில் ஏந்தி கிளம்பும் அவர்பின் முடிவற்ற கூட்டம் பின்தொடரும். பாம்பைப் பார்த்துவிட்டால் அவசரம் என்பதே இன்றி, ஒரு சதுரங்க ஆட்டக்காரனின் பொறுமையில் மெதுவாக பாம்பின் பின்புறம் சென்று தன் கையில் இருக்கும் தொரட்டியை செங்குத்தாக வைத்துக் கொண்டு பாம்பின் தலையில் பெருத்த விசையுடன் ஊன்றுவார். தொரட்டிக் கம்பி பாம்பின் தலையை ஊடுருவி சில அங்குலங்கள் பூமிக்குள் சென்று புதைந்திருக்கும். ஒரு முறையும் அவர் குறி தப்பியதேயில்லை.
சீலைக் காரியம்மன் கோயில் திருவிழாவில், "இளந்தாரிக் கல்லினை" நோக்கம் போல் தூக்கிப் பந்தாடுவார். எங்களைப் போன்ற சிறுவர்களை முதுகில் தாங்கிக் கொண்டு முடிவின்றி "தண்டால்" எடுப்பார். சித்திரை மாதத் தேர் திருவிழாவில் இளந்தாரிப் படையைக் கூட்டிக்கொண்டு முதல் ஆளாகத் தேர்ச் சங்கிலியில் கை வைத்து இழுத்துச் செல்வார். தேரிழுத்து களைத்துத் திரும்பும் ஆட்களுக்கு கண்ணனின் அம்மாவும் அக்காவும்  "பானகம்" கலந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
கண்ணனுக்கு தன் அப்பாவிடம் பிடித்தது கவட்டை**தான். அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கும் அவன்,

எப்போதாவது ஒருநாள் தன் அப்பாவின் "கவட்டையை" அவருக்குத் தெரியாமல் எடுத்து வந்து எங்கள் கண்களுக்குக் காட்டுவான். அந்தக் கவட்டையைக் கையில் வருடிப் பார்க்கையில், சூட்சும வடிவில் பல பறவைகள் சிறகடிக்கும் பேரரவம் செவிப்பறையில் மோதுவதை உணர்ந்திருக்கிறேன்.
சனிக்கிழமை மதியங்களில் நாங்கள் அனைவரும் கண்ணனின் வீட்டில்தான் இருப்போம். அந்நாட்களில் சனிக்கிழமைக்கென்று ஒரு மகத்துவம் இருந்தது.
சனிக்கிழமைதான் 'அட்லஸ்' பறவை வேட்டையாடும் நாள். கண்ணனின் வீடு ஊருக்கு வெளியில் கரட்டுப் பாதையில் ஹை ஸ்கூலுக்குப் பின்புறம் இருக்கும். வீட்டுக்கெதிரே ஒரு தோட்டம். அதனருகே இரு கறவை மாடுகள் கட்டப்பட்டிருக்கும். மாடுகளின் வால் முடியை ஒவ்வொருவரும் பிடுங்கி வைத்துக் கொள்வோம். அதைக் கொண்டுதான் "தைலான்**" குருவி பிடிக்க வேண்டும்.
ஒரு மஞ்சள் பைக்குள் கோலிக் குண்டுகளையும் கவட்டையையும் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வெயிலை மறைத்துக் கொண்டு நிற்பார் அட்லஸ். வந்ததும் ஒரு சங்கடமான கேள்வியை எங்களை நோக்கி வீசுவார்.  
படிக்கிற வேலை இல்லையாடா மாப்ளைகளா?
பதிலற்று நாங்கள் புன்னகைக்கும்போது, நிழலைப் போல எங்களைக் கடந்து வெளியில் சென்று விடுவார். அவரோடு அவர் வயது ஆட்கள் சிலரும் சேர்ந்து கொள்வார்கள். ஓட்டமும் நடையுமாக அவர்பின் நாங்கள் சென்றுகொண்டிருக்கையில் ஒரு நாய்க்குட்டியைப் போல வெயிலும் எங்களைப் பின்தொடர்ந்து வரும்.  
வெகு தொலைவுக்கப்பால் உள்ள ஓடையைக் கடந்து காட்டுக்குள் நுழையும்போதே, வேகத்தைக் குறைத்து நின்று நிதானித்து நடக்கத் துவங்கி விடுவார். கவட்டையின் ரப்பர் வாருக்கிடையே "கோலிக் குண்டை" இடுக்கிக் கொண்டு குறி வைக்கத் துவங்கி விடுவார்.
கிளைகளில் இளைப்பாறும் குருவிகள் அவருக்கு இலக்கேயல்ல. அவர் குறி வைப்பது பறந்து கொண்டிருக்கும் பறவைகளைத்தான். பெரிய பெரிய புறாக்களாக இருந்தாலும்,  செம்பூத்துகளானாலும், அளவில் சிறிய தேன்சிட்டாக இருந்தாலும் ஓரே குறிதான். ஒரு முறை குறி தப்பிவிட்டால் மறுமுறை குறி வைப்பதில்லை. கவட்டையிலிருந்து காற்றதிரக் கிளம்பும் கோலி குண்டு முதல் குறியிலேயே பல பறவைகளைச் சாய்த்து விடும்.
பறந்து கொண்டிருக்கும் பறவைகளை எப்படிக் குறிவைத்து அடிக்கிறார்? என்று நாங்கள் வியந்து கொண்டிருக்கும் போதே, அவருடன் வருபவர்கள் சிறிய மஞ்சள் பைகளில் செத்துப் போன பறவைகளை சேகரித்துக் கொண்டிருப்பார்கள்.
பெருமை பொங்க, தன் கவட்டையை தோளில் தொங்க போட்டுக் கொண்டே, அடர்ந்த மீசையை முறுக்கியவாறு, " டேய், வில்லுக்கு விசயன்னா** கவட்டைக்கு இந்த முத்தையன்டா" என்று அட்லஸ்

முழங்கும் போது எங்களோடு சேர்ந்து கொண்டு அவர் முதுகுக்குப் பின்னால் விரிந்து நிற்கும்
இளவெயிலும் ஆமோதித்து நகரும்.    
***
படிக்கவே மாட்றான் சார். புஸ்தகத்த எடுத்து வச்சு பெராக்கு** பாக்க ஆரம்பிச்சான்னா அதுக்கு ஒரு வக

 தொக கெடயாது. எத்தன டெஸ்ட் வச்சாலும் மருந்துக்கு கூட ஒரு பாஸ் மார்க் வாங்கறது கெடயாது.
பொம்பளப் புள்ளக கிட்ட வம்பிளுக்குறது. அக்ர அக்ரமா** பேசுறது. மொனப்பு** கூடிக்கிட்டே வருது. கூடப்

 படிக்கிற எரும மாடுகளோட தரித்திரியம் இது கழுதைக்கும் புடுச்சுக்கிருது. ஒண்ணா ஒக்கார வச்சா படிக்க மாட்டாய்ங்கன்னுதான் தனித் தனியா ஒக்கார வச்சிருக்கேன். இன்னுங் கொஞ்சம் தலையெடுத்தா ஊருக்குள்ள ஒங்களுக்கு இருக்கிற நல்ல பேரக் கெடுத்திருவ்யான். பாத்துக்கங்க. ஒங்க காதுல எதுக்கும் போட்டு வைக்கலாம்னுதான் வரச் சொன்னேன்.
கண்ணனைக் காட்டி சக்திவேல் சார் ‘குற்றப் பத்திரிகை’ வாசித்துக் கொண்டிருக்கும்போது அட்லஸ் அவனைக் கூப்பிட்டார். தயங்கிக் கொண்டே அவர் அருகில் போனான் கண்ணன். அனல் தகிக்கும் கண்களுடன் புறங்கையினால் அவன் கன்னத்தில் ஒரு ‘இழுப்பு’ இழுத்தார். சரிந்து தலைசாய்ந்தான் கண்ணன். எல்லாரும் ஓடிச் சென்று அவனைத் தூக்கினோம்.
சக்தி வேல் சார் துடித்துப் போனார். அய்யய்ய! என்ன சார் இது? ஒங்க கையால அவன அடிச்சா அவன் ‘செகிழு’ செதஞ்சிரும்ங்க. சின்ன பையன்ங்க. வீட்ல கொஞ்சம் கண்டிச்சு வெப்பெங்கன்னு தான் ஒங்ககிட்ட தகவல் சொன்னேன். நீங்க என்னடான்னா அவன வேரோட பிடுங்கிருவெங்க போல இருக்கே. இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா நான் இவனோட அம்மாவையே வரச் சொல்லியிருப்பேனே. நான் பாத்துகிறேன் சார். நீங்க கெளம்புங்க. நல்ல ஆளு சார் நீங்க. “காஞ்சு கெடக்குதுன்னு கடவுளுக்கு மனுச் செஞ்சா பேஞ்சு கெடுத்துருச்சே பெருமாளே என்ன பண்ணங்க்ற கணக்கு சார் ஒங்க கணக்கு!
கண்ணனை நாங்கள் அடை காத்துக் கொண்டிருந்தோம். முடிவற்ற கண்ணீர்ப் பெருக்கினால் உப்புப் பூத்துப் போயிருந்த முகத்தோடு இடைவெளி விட்டு விட்டு தேம்பிக் கொண்டிருந்தான் அவன்.
எங்கள் ஒவ்வொருவனின் அடி வயிற்றிலும் சக்தி வேல் சாரின் மேல் முடிவிலியாய்ப் பொழிவதற்கு அமில மழை தயாராய் சுரந்து கொண்டிருந்தது.
அட்லஸால் பேச முடியவில்லை. தொண்டையில் அவருக்கு நெருப்பெரிந்தது. இவன ‘மப்ப’க் கழட்டாமா விட மாட்டேன் சார். ஒத்தைக்கு ஒத்த ஆம்பளப் பிள்ள சார். பொம்பளப் பிள்ளைய அடுத்த வருஷம் கெட்டிக் குடுத்துருவேன். இவன் ஆளாயி குடும்பத்தத் தாங்க வேணாம். அவன் பொழப்பக் கூட பொழக்க மாட்யான் போலருக்கே! இதுக்கா சார் வம்பாடு பட்டு இவன படிக்க வக்கிறேன்? வீட்டுக்கு வந்தா டி.வி. அத விட்டா, ஹை ஸ்கூல் கெணத்துல குளிக்க போறது. கூட்டுக் காரெய்ங்களோட சேர்ந்துகிட்டு ‘தைலான்’ குருவி பிடிச்சு சுட்டுத் திங்கிறியான். பாதி நாள் நான் வீட்ல இருக்குறதில்ல. அவ கிட்ட சொல்லிட்டு போன்னா, இவன் அவளுக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துட்டு வெளிய கெளம்பிப் போயிர்றான். இன்னைக்கு இவன ‘வெள்ளாவி’ வெக்காம நான் அடங்க மாட்டேன் சார்.
திமிறிக் கொண்டிருந்த அட்லஸை பொழுது சாயும்வரை வெகுநேரம் தேற்ற வேண்டி இருந்தது சக்திவேல் சாருக்கு. முடிவாக, தேம்பலும் உரக்கச் சடவும் கூடி இருந்த கண்ணனை தன்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்புகையில் சக்தி வேல் சாரைத் திரும்பிப் பார்த்தார் அட்லஸ்.
இவன் முதுகுத் தோல உரிச்சாவது இவன வெளங்க வச்சுருங்க சார், என்று கெஞ்சலாகக் கேட்டார்.
ஒரு வகைக்கு கொண்டு வந்துருவோம் சார். கவலப் படாம போங்க, என்று வழியனுப்பி வைத்தார் சக்திவேல் சார். திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் அட்லஸின் முதுகைப் பார்த்துக் கொண்டே, எங்களிடம் மெதுவாகச் சொன்னார்.
டேய்! கண்ணன் கை கால் சொகத்தோட இருக்கணும்னா அவன் வீட்டுப் பக்கம் தலை காட்டீறாதெங்கடா! இந்த ஆள் சீரப் பாத்தா அவன் மகன நிக்க வச்சு சுட்டு புடுவ்யான் போல இருக்கு.
முதல் முறையாக தலை குனிந்து இருளோடு நடந்து கொண்டிருக்கும் அட்லஸைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தோம்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் கண்ணன் வீட்டுக்குப் போவதை நாங்களாகவே நிறுத்திக் கொண்டோம்.
***
சுழித்துக் கொண்டோடும் கங்கை நதிப் பிரவாகம் போல வாழ்க்கை விரைந்து நகர்ந்தது. மேல்நிலை வகுப்பிற்கு உள்ளூரிலேயே வேறு பள்ளிக்கு மாறினேன். கல்லூரிப் படிப்பு நகரத்தில். வேலை. பணி உயர்வு. மீண்டும் வேலை மாற்றம் என பல காலங்கள் பல இந்திய நகரங்களில் வசித்து, தேன் இருக்கும் பூக்களையெல்லாம் தேடித் போய் உறிஞ்சும் தும்பிப் பூச்சி வாழ்க்கையின் உச்சமாக சிங்கப்பூருக்கும் வந்தாயிற்று. கனவுகள் கண்டு கற்பனையில் புரண்டெழுந்து மணமுடித்து பிள்ளைகள் பெற்று வாழ்வின் நடுவாந்திரத்திற்கும் வந்தாயிற்று. சுடுநீரைக் கால்களில் ஊற்றிக் கொண்டு ஓடியலையும் வாழ்க்கையில் “ பேஸ் புக்”கின் தயவால் அங்கொன்றும் இங்கொன்றும் சிலர் தவிர பல நண்பர்களுடனான தொடர்பை முற்றிலும் இழந்தேன். அவர்கள் எல்லாம் எங்கு சென்று மறைந்தார்கள்? அவர்களுடன் வாழ்ந்த அந்த வசந்த காலம் வெறும் கனவுதானா? ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத காலமா அது?
இப்போதெல்லாம இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஊருக்குச் செல்வது கூட அரிதாகி விட்டது. அபூர்வமாக, சமீபத்தில் குடும்பத்தோடு ஊருக்குச் செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அம்மா அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தி. வண்டிக் காரனிடம்  சவுக்கடி வாங்கி அதி வேகமாய் ஓடும் காளை மாடுகள் போல ஊர் வேகமாய் மாறி விட்டது. நகரம் அதி நகரமாகி விட்டது. கிராமங்கள் சிறு நகரங்களாக மாறி வருகின்றன. 
கிராமம் முற்றிலுமாக மறைந்து விடுமுன் என் நான்கு வயதுப் பையனுக்கு ஊரைச் சுற்றிக் காட்டக் கிளம்பினேன். நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த காட்சிகள், பருகிய அழகுகள், ஊற்றுத் தடங்கள், வாய்க்கால், நதி தீரம், கோயில்கள், தெரிந்தவர் வீடுகள், ஹை ஸ்கூல் மைதானம் என்று ஒரு நாள் முழுதும் சுற்றி அலைந்து இருளத் துவங்கியதும் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம்.
பேச்சியம்மன் கோயில் தாண்டி காளி கடை முன் ஒரு சிறு கூட்டம் தென்பட்டது. ரோட்டின் ஓரமாய் மோட்டார் பைக் ஒன்று விழுந்து கிடந்தது. கைகள் முழுக்க சிராய்ப்புகளோடு இருந்த இளைஞன் ஒருவனுக்கு சிலர் முதலுதவி செய்து கொண்டிருந்தார்கள்.
இளைஞன் தாறுமாறான பதட்டத்துடன் இரைந்தான். நான் ஒழுங்காத்தான் வண்டி ஒட்டிகிட்டு வந்தேன். இந்த கெழவன்தான் கண்ணு மண்ணு தெரியாம குறுக்க வந்தான். "ஹாரன்" அடிச்சுக்கிட்டே ‘வெலகுயா! வெலகுயான்னு’ காட்டுக் கத்து கத்திக்கிட்டு வர்றேன். எளவு! காது சரியாக் கேக்குதோ என்னமோ?
‘சரி ஒரு பேச்சுல விடுப்பா. வயசாளிய மரியாதையா பேசுப்பா. அடி பலமா படல. இந்த மட்ல தப்பிச்சிட்டோம்னு நெனச்சிக்க. இந்தா இந்த சோடாவக் குடிச்சுட்டு போ! என்று ஒரு சோடாவை உடைத்து அவன் முன் நீட்டினாள், கடைகாரக் காளியக்கா.
சோடாவைக் கொடுத்து விட்டு, திரும்பிப் பார்த்து யாரையோ கடுப்பாக ஏசிக் கொண்டிருந்தாள். நீ வீட்டுக்கு போ மாமா. ரோட்டுப் பக்கம் வாறப்ப சூதானமா வர வேணாமா? இன்னைக்கு ஒரு பயல, 'போட்டுப்' பாக்கத் தெரிஞ்சயே? இன்னும் நீ என்ன எளந்தாரியா? ரிடயர் ஆகி பத்து வருசமாகப் போகுது. நிதானம் தவறிக் கிட்டே வருதாயில்லையா? ஒன் மகென்தான் 'டீச்சரா' இருக்கானே. வண்டிய ஓடிக்கிட்டு "சல்லு புல்லு"னு இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் போய் வாறானே? எது வேண்ணாலும் அவென்கிட்ட சொல்லி விட வேண்டியதுதானே? இல்லாட்டி,அக்காகிட்ட சொல்லி விடு. நீ எதுக்கு கெடந்துகிட்டு தவுதாயப் படற?
முதல் பார்வைக்கு அவர் யாரென்று தெரியவில்லை. இருட்டுக்குள் சற்று கூர்ந்து பார்த்தபோது தெளிவாகத் தெரிந்தது. அட்லஸ்... வாழ்வின் நீல்வெளியில் எங்கோ தொலைந்து போயிருந்த அட்லஸ். வெளிறித் தளர்ந்து போன தேகத்தோடு கடை பெஞ்சில் ஆசுவாசமாக அமர வைக்கப் பட்டிருந்தார். கறுத்துச் சுருங்கிக் கன்றிப் போயிருந்த முகச் சதை துடித்துக்கொண்டிருந்தது. வாழை மரம் போல் வடிவாய் இருந்த தோளும் கைகளும் புடலங்காய் போல மெலிந்து வதங்கித் தளர்ந்திருந்தன. கசங்கி இருக்கும் சட்டையும் லுங்கியும் காற்றில் பட படத்து சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நடுங்கிக் கொண்டிருந்த கை விரல்களைத் தாண்டி மணிக்கட்டில் நரம்புகள் விகாரமாய் புடைத்திருந்தன. கழுத்தைச் சுற்றியுள்ள தசைகள் வற்றிப் போய் மெல்லெலும்புகள் தெரிந்தன. நெடுநேரம் மௌனமாய் இருந்தவர், ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி, ஆவேசமாகக் குடித்தார். வாய் வழியே வழிந்த குளிர்ந்த நீர் அவர் நெஞ்சை நனைத்தது. 
வறண்டு கனத்துப் போயிருந்த என் தொண்டையை மெல்ல எச்சில் கூட்டி ஈரப்படுத்தினேன். ஒரு கணம், என் ஆழ்மனதில் சாஸ்வதமாய் பொறித்து வைத்திருந்த அட்லஸின் இளம் பேருருவம் பேரோளியுடன் மேலெழுந்தது. அதற்கு மேல், அங்கிருக்கப் பிடிக்காமல், பையனைக் கூட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
அதுவரை அமைதியாய் இருந்த என் பையன், இப்போது கேட்டான்.
யாருப்பா அது?
அவர் பேரு ‘அட்லஸ்’.
அட்லஸ்ன்னா ?
வறண்ட குரலில் சொன்னேன் . “இந்த பூமியையே தன்னோட தோள்ல தாங்குறவரு”!
இந்த பூமியையா?
ஆமா.
கதவைத் திறந்த என் அம்மா தன் பேரனைப் பார்த்துக் கேட்டார். என்ன தொர? நாளெல்லாம் எங்க போய் சுத்திட்டு வர்றீக? யாரயெல்லாம் பாத்தீக?
விழிகள் விரியக் குழந்தை சொன்னான். பாட்டி! நாங்க அட்லஸப் பாத்தோம்.
அது யாருப்பா எனக்கு தெரியாம இந்த ஊர்ல அட்லஸு?
இது கூட தெரியாதா பாட்டி?  அட்லஸ்தான் இந்த பூமியையே தன்னோட தோள்ல தாங்குறவரு!
உற்சாகமாக கூவியபடி பாட்டியின் தோளை நோக்கிப் பாய்ந்தான்.
(முற்றும்)      - கணேஷ் பாபு

1.        ஹல்க் ஹோகன் – அமெரிக்க மல்யுத்த வீரர்.
2.        கவட்டை – உண்டிவில்
3.        தைலான் – ஒரு வகைக் குருவி. சிறியதாய் கருப்பு நிறத்தில் இருக்கும். மழை பெய்து ஓய்ந்ததும் கூட்டம் கூட்டமாக தாழப் பறக்கும். சிறுவர்கள் , குருவிகள் பறக்கும் இடத்தில் முழமளவு நீளமான ஒரு சிறிய குச்சியை  தரையில் ஊன்றி குச்சியின் முனையில் மாட்டின் வால் முடியை குருவியின் உடல் கொள்ளுமளவு விட்டத்தில் சுருக்கிட்டுக் காத்திருப்பார்கள். கூட்டமாக தரைக்கருகே வேகமாக பறக்கும் குருவிகளில்,சில குருவிகள் மாட்டு வால்ச் சுருக்கில் மாட்டிக் கொள்ளும். 
4.        விசயன் – அர்ச்சுனன்
5.        பெராக்கு – வேடிக்கை
6.        அக்ர அக்ரமா – கெட்ட வார்த்தை பேசுதல் (வட்டார வழக்கு)
7.        மொனப்பு – திமிர் (வட்டார வழக்கு)