திங்கள், 25 மார்ச், 2013

பொள்ளாச்சி-வால்பாறை-டாப்ஸ்லிப்-பரம்பிக்குளம் மற்றும் பன்னீரின் திருமணம்

மார்ச் 18, திங்கள் கிழமையன்று கோயம்பத்தூர் அருகே அரசூரில் நண்பர் பன்னீர் செல்வத்தின் திருமணம். சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சேர  மூன்று நாள் திட்டம் உருவானது. என்னோடு அலுவலக நண்பர்கள் நந்தகிஷோர் மற்றும் சக்தி முருகன்.   மார்ச் 15 வெள்ளி மாலை அலுவலகத்திலிருந்து இரண்டு மணி முன்னதாகவே கிளம்புவதாகத் திட்டம். நண்பர் பன்னீருக்கு பரிசுப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, 4.30 மணிக்கு நந்த கிஷோர் காரில் பொள்ளாச்சி நோக்கி பயணம் தொடங்கினோம். நள்ளிரவிற்குள் சென்று சற்று ஓய்வெடுத்து மறுநாள் சுற்றத்  தொடங்குவதாகத் திட்டம். தரமான சாலைகள். திட்டமிட்டது போலவே இரவு ஒரு மணிக்கு பொள்ளாச்சி செல்ல முடிந்தது. முன் உறுதி செய்யப்பட்ட விடுதியில், தங்கினோம். வாடகை மூவருக்கு 900 ருபாய் என்று நினைக்கிறேன்; காலைச் சிற்றுண்டி இதில் அடக்கம். தங்குமிடம் சுத்தமாக, தங்குவதற்கு ஏற்றதாக இருந்தது. காலையில் 7 மணிக்கு எழுந்து கொண்டு 8 மணிக்கு தயாரானோம். காலை உணவும் நன்றாகவே  இருந்தது; இட்லி, வடை மற்றும் பீட்ரூட் துவையல். பீட்ரூட்க்கான இனிப்பு சுவையே இன்றி நல்ல ருசியுடன் இருந்தது. 

முதலில் வால் பாறை செல்வதாகத் திட்டம். பொள்ளாச்சி சந்தை வழியாக வால் பாறை சாலை அடைந்தோம். பொள்ளாச்சி சந்தையில் உள்ள மாரியம்மன் கோவில் கோபுரத்தில் முதல் அடுக்கின் மையத்தில் காந்தியடிகள், அவருக்கு வலது புறம் ராமகிருஷ்ண பரமஹம்சர், இடது புறம் புத்தர் இருப்பதை கண்டேன். மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது. இது யாருடைய எண்ணம்? எப்படி கோவில் கோபுரத்தில் உருப்பெற்றது? 
எதனால் இவர்கள் மூவரும்? மையமாக காந்தி எதனால்?பல கேள்விகள். விசாரித்தரியும் அவகாசம் இல்லை அன்று.

ஆழியாறு அணைக்கட்டில் சிறிது நேரம் செலவழித்தோம். பராமரிப்பு ஏதுமற்று அலட்சியமாக விடப்பட்டிருகிறது அணைப் பூங்கா. பிளாஸ்டிக் குப்பைகள் வேறு. இத்தகைய அலட்சியப் போக்கிற்கு மாறாக, சுற்றுலாப் பகுதிகளை கேரளாவிடமும் கர்நாடகாவிடமும் கொடுத்துவிடலாம். முறையாகப் பராமரிக்கவாவது செய்வார்கள்.
 12 மணிக்குள் வால் பாறை சென்றோம். வால் பாறை ஒரு நகரம் போல் கடைகள் மற்றும்  மக்கள் கூட்டம் பெருகிக் காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் எவ்விதத் தடையுமின்றி உபயோகிக்கப்படுகிறது. எவ்விவிதப் பொறுப்புமின்றி குப்பைகளாய் சிதறடிக்கப்படுகிறது. இனிமேலும் இங்கே சூழல் பேணப்படும் என்ற கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையையும் அங்கே சிதறவிடப்பட்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் தகர்த்தெரிகின்றன.  
முன் உறுதி செய்யப்பட்ட விடுதியில் அறை  எடுத்துக்கொண்டோம்.  மதிய உணவின் போது சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. உணவு முடித்து, சின்னக்கல்லார் செல்ல முடிவெடுத்தோம் .
கோவிலின் கர்ப்பக் கிரகங்கள் போன்ற காடுகள் அழிக்கப்பட்டு எங்கும் தேயிலைத் தோட்டங்கள். பல்லுயிரியம் இங்கே எப்படி செழிக்கும்? மண்ணரிப்பைத் தடுக்க, ஆறுகள் பெருகிட புற்கள் வேண்டும். கடந்து செல்லும் மேகம் குளிர வானுயர்ந்த மரங்கள் வேண்டும். எல்லாம் இருக்கவே செய்தது ஒரு காலத்தில். பேராசையினால் அனைத்தும் சுரண்டப்பட்டுவிட்டபின், இயற்கைச் சமநிலைக்கு வழி ஏது? மீண்டும் காடுகளை இங்கே உருவாக விடுவது இன்னமும் சாத்தியம்தான் எனத் தோன்றுகிறது. ஆனால், தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் பெருமுதலாளிகள் வசம். அரசு பெருமுதலாளிகள் வசம். இதைப் பற்றி யாரும் பேசக்கூட முடியுமா என்ன? ஒழுங்கில் கத்தரிக்கப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்கள் சொல்வது மாபெரும் இயற்கைச் சீரழிவின், பேராசையின், சுரண்டலின் துயரக்கதை. இவற்றை எப்படி அழகென்று கொண்டாட முடியும்?
சின்ன கல்லார் பகுதியை சின் கோனா, சின்ன சிரபுஞ்சி என்று அழைக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்கள் தவிர அனைத்து மாதங்களும் மழை இருக்கக் கூடிய பகுதி. கோடை மாதங்களில் கூட கோடை மழை உண்டு. ஆனால், அங்கேகூட வறட்சி தென்படுகிறது இம்முறை. தண்ணீர் குறைவாகவே இருந்தது அருவியில். வனக் காவலர், ராமச்சந்திரன்; மிக இயலாபகப் பழகக் கூடிய, வெள்ளந்தியான பேச்சு கொண்ட மனிதர். அன்பு நிறைந்த, அரிதாகிவிட்ட கிராமத்து வாசனை இவர் பழகும் விதத்தில். நான் யானைகள்  பற்றி அதிகம் கேட்க, தன்னுடைய அனுபவங்களைச் பகிர்ந்து கொண்டிருந்தார். 5 வருடங்களாக இங்கே பணி புரிகிறார். தற்காலிக ஊழியர் 8000 ஊதியம். நிரந்தரமாகிவிடும் என்றார். 

சின்ன சிரபுஞ்சியில் தூறல் போட்டது. யானைகள் காணக் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். ஏக்கம் ஏக்கமாகவே இருந்தது. அடுத்து நீரார் ஆணை சென்றோம். அழகான சூழலில் அமைந்த உயரமான அணை. உயர்ந்த இரு சிகரங்களுக்கு இடையே செல்லும் ஆற்றைத் தடுத்து கட்டியிருக்கிறார்கள்.
இன்னும் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் ஆனை  முடி. 5 மணிக்கு பிறகு அங்கே பார்க்க அனுமதி இல்லை. நாங்கள் சென்ற போது 6-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வனக் காவலர் அனுமதி மறுத்தார். எங்கள் அதிர்ஷ்டம். அத்தனை நேரம் இருந்த தூறல் நின்று  மேக  மூட்டம் விலகி வெயில் அடித்து வெளிச்சமிட்டிருந்தது. இது எங்களுக்கு சாதகமாக  அமைய வனக் காவலரிடம் கெஞ்சி உள்ளே சென்றோம். செஞ்சிவப்பாய் மேற்கில் ஆதவன், மேகங்களில் வண்ணங் குழைத்து விளையாடிய படியிருந்தான்.
 ஆனை முடி உச்சியில் மேகங்கள் மலை ஆழத்தில் தெரிகின்றன. மிக ரம்மியமான தோற்றம். கிளம்ப மனசில்லை ஆனை  வரும் பகுதி என்றார்கள். வராதா  என்ற நினைப்பு எனக்கு. விரைவாகவே திரும்பினோம்.
ஆனை முடி செல்ல ஓடிய போது எதிரே சிவப்புத் துண்டணிந்து கம்யுனிஸ்ட் தோற்றம் தந்த ஒரு தாத்தா குழு ஒன்றோடு வந்துகொண்டிருந்தார். உள்ளூர் வாசி. சொந்த ஊர் மன்னார்குடி. டீ குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் சிகரம் ஒன்றைக் காண்பித்து, நிறைய காதலர்கள் அங்கே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்.  இவருடைய காதலுக்கும் இதே மலைத் தொடர்கள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளது.  தான் காதலித்த பெண்ணைத் 
திருமணம்  செய்து  இங்கே வந்து டீ எஸ்டேட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 
இவர் தந்த அதிர்ச்சி செய்தி தனக்கு இரண்டு மனைவி என்பது. காதல் திருமணம் செய்த ஒருவரிடம் இதனை எதிர்பார்க்காத என்னுடைய மனம் இந்த அதிர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.  ஆனால் அவர் இதை எங்களிடம் வெகு இயல்பாகவே சொன்னார். முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகள் என்று நினைக்கிறேன்.  தான் யானைகளிடம் இருந்து தப்பியது பற்றியும், சமீபத்தில் சிறுத்தை குழந்தைகளைத் தாக்கியது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். விடைபெற்று அறைக்குத் திரும்பி இரவுணவு முடித்து உறங்கச் சென்றோம் 

மறுநாள் காலை, டாப் ஸ்லிப் மற்றும் பரம்பிக்குளம்.  6 மணி போல எழுந்து தயாரானோம். இயற்கை காலை வேளையில் குதூகலமாய் காட்சியளித்தது. பறவைகளின் கீச்சொலி காதுகளைத் துளைத்தது. சற்று முன்னதாக எழுந்து காலை நடை செல்லாமல் விட்டதற்காக வருந்தினேன். வால்பாறையிலிருந்து கீழிறங்கும் மலைச்சாலையில், காலைச்சூரிய ஒளி  பூமியைத் தொட முயற்சிக்க காற்றில் அசையும் இலைகள் கண்ணாமூச்சி ஆடித் தடுக்க முயற்சி செய்த வண்ணம் இருந்தது.  இலைகளின் அசைவு சூரிய ஒளியையும் நடனமாட  விட்டிருந்தது; கால் மாற்றித் தவிக்கும் கானுயிர்கள் போல நேர்கோட்டு நடனம்.



பாதி தூரத்தில் வரையாடு ஒன்று சாலை ஓரத்தில் தனித்து நின்று மேய்ந்துகொண்டிருந்தது. எளிமையான அழகு இந்த வரையாடு. அருகி வரும் இனம். மேற்கு தொடரின் இப்பகுதியிலேயே இவ்வினம் தற்போது இருக்கிறது. தமிழ் நாட்டின் மாநில விலங்கு. வால் பாறையில் நாங்கள் கண்ட ஒரே காட்டுயிர்:)

ஆழியாறு அணை வாசலில் சிறிய கடை ஒன்றில் காலை உணவு. இது போன்ற சிறு கடைகளில் கூட  கண்ணாடி தம்ளர்களில் டீ கிடைப்பதில்லை இப்போது. மக்கள் 'சுத்தமென்று' விரும்புவது மெழுகு தடவப்பட்ட அட்டை தம்லர்களையே. கண்ணாடித் தம்ளர்கள் கொஞ்ச நாளில் வழக்கொழிந்து போகும் போல. கடையில் டீ குடித்தால் கண்ணாடி தம்ளரில் குடிப்பதே  நான் விரும்புவது. 
   
அடுத்த அரை மணி நேரத்தில் டாப் ஸ்லிப் அடைந்தோம். டாப் ஸ்லிப்பும், பரம்பிக்குளமும் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயங்கள். டாப் ஸ்லிப் தமிழக எல்லை; பரம்பிகுளம் கேரள எல்லை. டாப் ஸ்லிப் தமிழக வனத்துறை பராமரிப்பில். பரம்பிக்குளம் கேரள வனத்துறை பராமரிப்பில்.  எல்லையில் வனத்துறை சோதனை மற்றும் பதிவு. குறிப்பாக மது எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை செய்கிறார்கள். மது முற்றிலும் தடை செய்யப்பட்ட வனப் பகுதி. வனப் பகுதிக்குள் காரில் இசை வேண்டாம் என்று  அறிவுறுத்துகிறார்கள். மக்கள் அதனை மதித்துச் சென்றது பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. புலிகள் வாழும் பகுதி என்பதால் இரு சக்கர வாகனங்களில் செல்ல  அனுமதி கெடையாது. நாங்கள் அனுமதி பெற்ற நேரத்தில், இரு சக்கர வாகனங்களில் வந்த நால்வர் அனுமதி மறுக்கப்பட, அதில் ஒருவர் அப்பாவியாக 'நடந்து செல்ல அனுமதி உண்டா?' என்றார். 



மழையின்றி வறட்சியே மலைகளிலும் தென்பட்டது அதோடு இது கோடையின் தொடக்கம். மிக மிக மோசமான சாலை தமிழக எல்லை வரை. சாலையில் கார் நகரும் சத்தம், அதோடு பறவைகளின் ஒலி,   காற்றில் அசையும் மூங்கில் எழுப்பும் 'கரக்' ஒலி அவ்வப்போது. மற்றபடி வனம் சோர்வுகொண்டு உறங்கும் அமைதி.
பரம்பிக்குளம் எல்லையில் கேரளத்தின் வன சோதனை மற்றும் அனுமதி மையம். வனத் துறை வாகனங்கள் மற்றும் சரணாலயத்தில் தங்குவோர் வாகனங்கள் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கானுலா செல்வதற்கு ஒரு வாகனத்திற்கு 18 பேர் தேவை. நாங்கள் மூவரே முதல்வர். ஆகவே காத்திருந்தோம். அடுத்து ஒரு நால்வர் குழு வந்தது அதனை அடுத்து பத்து பேர் கொண்ட ஒரு குழாம் வந்து சேர்ந்தது. நால்வர் மற்றும் பத்து பேர் குழு இரண்டுமே இளைஞர் பட்டாளம். வனம், கானுயிர், இயற்கை பற்றி எவ்வித அக்கறையும் அற்ற கும்பல். கானுலாவில்கூட சினிமாபேசி  கிண்டல செய்து சிரிப்பதே இவர்கள் அறிந்தது. வனம் இவர்களுக்கு குளிர் பிரதேசம். கானுயிர் இவர்களுக்கு வேடிக்கைப் பொருட்கள். வனத்தில் கானுலா செல்லும்முன்பு, பரம்பிக்குளம் வனச் சரணாலயம் பற்றி, அங்கு செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை பற்றி ஒரு காணொளி பார்க்கச் செய்தார்கள். மிக அழகாக  அதனைத்  தயாரித்திருந்ததார்கள். காணொளி முடியும் போது என் கண்கள் உணர்வு வசத்தால் நீர் கோர்த்துக்கொண்டன. கண் முன்னால் சிதைத்து சின்னா பின்னமாகும் இயற்கை. அக்கறையற்ற ஒரு சமூகம். கண்ணீர் வராமல் என்ன செய்யும்?

பரம்பிக்குளம் கேரளாவில் இருந்தாலும் தமிழர்களே அப்பகுதியில் பெரும்பாலும்  வசிக்கிறார்கள் போல. மிக அழகான வனப்பகுதி. பரம்பிக்குளம் அணை  இதற்கு முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தை நினைவுபடுத்தும், அதை விடக் கூட அழகான சூழல் கொண்ட அணை  நீர்த்தேக்கம். பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம் காமராஜர் காலத்தில் 1954-இல் தொடங்கி  1961-இல் முடிக்கப்பட்டுள்ளது 4கி. மீ தூரம் மலையை குடைந்து நீர்வழி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் காமாரஜருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறது. இந்த அணை ஓர் உதாரணம் மட்டுமே. தேர்தலில் தோற்றதால் இழப்பு அவருக்கில்லை,  தமிழக மக்களுக்கே என்று அவருக்குப் பின் மீண்டும் மீண்டும் வரும் ஆட்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தமிழக மக்கள் தங்கள் ஓட்டால் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொண்ட சாபக்கேடு. மக்களாட்சி! 

யானையும், காட்டெருதும்,மானும், மிளாவும் காணக் கிடைத்தன. வாகனத்தில் எழுந்த பேச்சு சத்தத்தில், வந்த யானை கூட்டம் ஒன்று திரும்ப உள்ளேயே சென்று விட்டது.  இத்தனைக்கும் குறைவான சத்தமே. யானைகளின் கூர்மை ஆச்சர்யப்படுத்துவதாக இருந்தது. இன்னும் சற்று தூரத்தில் மற்றுமொரு சிறு  யானைக் கூட்டம் அமைதியாக புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.ஒன்று பெரிய யானை. மற்ற இரண்டும் சற்று சிறியவை. பெரிய யானையின் கால்களுக்குள் அதன் குட்டி நின்றிருந்திருக்கிறது தொலைவில் இருந்து பார்த்த போது தெரியவே இல்லை. நிழல் படத்திலேயே கண்டுகொள்ள முடிந்தது. 

ஒரு சிறு காட்டெருதுக் கூட்டமும், புள்ளிமான் மற்றும் மிளா கூட்டத்தையும் கண்டோம். மதிய உணவு, கானுலாவின் ஒரு பகுதியாக  பரம்பிக்குளத்திலேயே  ஏற்பாடாகி இருந்தது. உணவு நன்றாகவே இருந்தது. 11 மணி போல தொடங்கிய கானுலா 3 மணிக்கு நிறைவுற்றது.
மீண்டும் டாப் ஸ்லிப். ஆனை டாக்டர் திரு கே  கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெயரால் அமைந்த காட்சியகத்தைப் பார்வை இட்டோம், முழுதும் யானை மற்றும் யானை டாக்டரின்  நினைவாக. 30 வருடங்கள் யானைக்காகவே அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். டாப் ஸ்லிப் காட்டில் வாழ்ந்த, வாழும் யானைகளின் புகைப் படங்கள் மற்றும் பாடம் செய்யப்பட்ட விலங்குகள், அவைகளின் உறுப்புகள். யானையின் ஒரு பல்,  மனித முகத்தின் அளவோடு ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது. யானை தன்னுடைய பிரம்மாண்டத்தால் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. 'பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல' என்பார்கள். நகரத்தில் வாழும் மனங்கள் மரத்துப் போன மனங்களோ? யானை பிரமிப்பளிக்கவில்லை என்றால் உணர்வுகள் மரத்துப் போனவர்களாகவே இருக்க வேண்டும்.

டாப் ஸ்லிப்பில், வனத் துறை வசம் பயிற்சியில் உள்ள யானைகள் எதிரே உள்ள புல்வெளியில் நின்றிருந்தன. அதில் கொம்பனும் ஒன்று. கொம்பன் பளீர் வெண்மை, நீள் தந்தங்களுடன் கம்பீரமாக நின்றிருந்தது. நின்ற இடத்தில் யானை நிகழ்த்தும் மிதமான துதிக்கை, கால் மற்றும் காது அசைவுகள் தியானம் போன்று மனதில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தக்கூடியவை. நண்பர்கள் எனைக் கிளப்ப, பார்வை விலக்க மனமின்றிக்  கிளம்பினோம்.
ஆனை மலை வார சந்தையில் பலாச் சுளைகளும், வாழை பழங்களும், வழித் துணைக்கு வாங்கிக் கொண்டோம். பொள்ளாச்சி வரை சென்று இளநீர் குடிக்கவே இல்லை இது வரை. அடுத்த இளநீர் கடையில் நிறுத்துவது என்ற முடிவோடு கோயம்பத்தூர் நோக்கி விரைந்தோம். இளநீர் கடை மட்டும் கண்ணில் படவே இல்லை. 8 மணிக்கு கோவை மாநகர். காந்தி புரம் பேருந்து நிலையம் அருகிலேயே தங்கிவிட எண்ணியிருந்தோம். எங்களை இறக்கி விட்டு, நந்தகிஷோர் தன் பாட்டி வீடு வரை சென்றார் பார்த்து வர. மிகக் குறைந்த வாடகையில், பேருந்து நிலையம் எதிர்கவே சுகாதாரம் பேணப்பட்ட விடுதி ஒன்று கிடைத்தது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. 

பன்னீருக்கு வாங்கிய புத்தகங்களை பரிசுத்தாள் சுற்றி வரலாம் என்று சக்தியும் நானும் சுற்றினோம். சக்தி வீட்டிற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வாங்க எண்ணியிருந்தார். திரும்புவதற்குள் கடை பூட்டிவிட, லாலா ஸ்வீட்ஸ் சென்றோம். அடுத்து மதுரை இட்லி கடை. சக்தி சப்பாத்தி கேட்க, நான் முறைக்க பிறகு இட்லி ஆர்டர் செய்தான். பழங்களே எனக்கு அன்றிரவு போதுமானதாக இருந்தது. முந்தய நாளின் தொந்தரவுபட்ட தூக்கம், மிகுந்த களைப்பைக் கொடுத்திருந்தது.அறைக்குச் சென்றதும் தூங்கிவிட்டேன். 

பன்னீரின் திருமணம் காலை 5 மணிக்கு, அரசூரில். அரைமணி பயணம் கோயம்பத்தூரில் இருந்து. 4 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். காலையில் திருமணத்திற்கு சென்று சேர்ந்த பொழுது மணி 5.45. சென்ற நேரமும் தாலி கட்டும் நேரமும் சரியாக இருந்தது. நாங்களெல்லாம் தீர்க்க தரிசிகள்!
குளிர்ந்த காலை.  அழகிய, எளிய திருமணம். எளிமை அனைத்தும் அழகாகவே இருக்கிறது. ஒருவேளை இது எளிமை பற்றி என் மன மயக்கமோ! சூரியன் எங்களுக்கும்  தாமதமாக ஏறிப் பார்த்தது, முகூர்த்தம் முடிந்ததும்; அத்தனை தூரத்திலிருந்து வருபவனைக் குறை சொல்ல முடியாதுதான்! 

தம்பதியரைச் சந்தித்து பரிசுப் புத்தகம் கொடுத்து வாழ்த்தியானதும், அடுத்த முகூர்த்த நேரம் பந்தியில்! இட்லி, தோசை வடை, அல்வா, சேமியா ....காபியும் குடித்து முடித்து போகலாமா என்று ஒருவரை ஒருவர் பார்த்தோம். சென்னை வந்துதான் ஆக வேண்டும். காலை 8.30 மணிக்கு புறப்பட்டோம். 500 கி.மீ. பயணம். 3.30 மணிக்கெல்லாம் சென்னை அடைந்துவிட்டோம் இதில் நான்கு இடைவெளிகளும் அடக்கம். அருமையான சாலைகளே இதை சாத்தியமாக்கிற்று. அதிகக் களைப்புமில்லை. வெயில் சற்று அதிகமாக இருந்தது. காற்றில் சூடு உணர முடிந்தது; சென்னையில் சற்று குறைவே. காற்றில் வெக்கை தெரியவில்லை. சக்தி என்னை வட பழனியில் இறக்கி, வீடு சென்றான். மூன்று நாள் பயணம் இனிய நினைவுகளோடு நிறைவுற்றது.