திங்கள், 8 அக்டோபர், 2012

இருளர் இன மக்கள்- பாலவாக்கம், திருவள்ளூர்


பொழுது புலரும் வேளையில் தொடங்கியது Youth For Seva நண்பர்களின் பயணம். மெல்லிய தூறலுடன் இதமான காலை. பயணத்தில் பங்கு கொள்வதாக இருந்த ஒன்பது பேரும் கிட்டத்தட்ட குறித்த நேரத்திற்கு குறித்த இடத்திற்கு வந்து சேர, ஏழு மணிக்கெல்லாம் திருமழிசை தாண்டினோம். ஒன்பது மணிக்கு பூண்டி நீர்த்தேக்கம். ஞாயிறுக்கும், ஞாயிறு விடுமுறையோ என்னவோ, சோம்பல் மிக, எழத் தாமதித்திருந்தது. இதமான காற்று வருடிக்கொடுக்க, ஏரி தந்த அமைதியில் திளைத்திருந்தோம்.

அன்றைய தினத்திற்கான பணி முன்னிழுக்க, பாலவாக்கம் இருளர் பழங்குடி இனக் குடியிருப்பு நோக்கி பயணமானோம். பாலவாக்கத்தில் திசை தவறி, காட்டு செல்லியம்மனைத் தரிசித்தோம். படர்ந்திருந்த கொடிகள் கூரை அமைத்திட இயற்கையோடு இயற்கையாய் அமைந்திருந்த அத்தெய்வத்தின் இருப்பிடம், கிடைத்த தரிசனம்.....திசை தவறியதற்காக மகிழ்ச்சியே கொண்டோம்.

மீண்டும் வந்த சாலையில் திரும்பி, சரியான திருப்பம் அடைந்து, இருளர் பழங்குடியினர் குடியிருப்புக்குப் பயணமானோம். நேரம் பத்து மணி. வனவாசி கேந்திரத்தின் நலப் பணியாளர், தமிழ் ஆசிரியர் திரு கண்ணிராஜ் எங்களை வரவேற்று, பரஸ்பர அறிமுகத்திற்குப் பின், அங்கு வசிக்கும் மக்களைப் பற்றி எங்களுக்கு சுருக்கமாக விவரித்தார். அங்கே 150-க்கும் அதிகமான இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி குடும்பங்கள் குடி அமர்த்தப்பட்டிருக்கின்றன. இம்மக்கள், முன்பு கொத்தடிமைகளாக இருந்திருக்கின்றனர். வனவாசி கேந்த்ரா, அரசாங்கத்தின் உதவியுடன் இம்மக்களுக்கான வாழ்வாதாரங்களை உருவாக்கியிருக்கின்றது. பெரும்பாலோர் தற்போது அரிசி ஆலைகளில் கூலி வேலைக்குச் செல்கின்றனர். சிலர் வன அலுவலகங்களிலும் பணி புரிகின்றனர்.







தமிழாசிரியர், அங்கே மருத்துவ தன்னார்வலராகப் பணி புரியும் திரு பூபாலனை அறிமுகம் செய்தார். அக்குடியிருப்பின் குழந்தைகளுக்கு, மாலை மற்றும் சனிக் கிழமைகளில் கூடுதல் வகுப்புகளின் மூலம் பள்ளிக் கல்வியில் அவர்கள் முன்னேற உதவுவதோடு, வாழ்வின் அடிப்படைக் கல்வியினையும் கற்பிக்கிறார், சரண்யா. அவர் சிரிப்பில் மனதுக்குகந்த நற்பணி செய்யும் நிறைவு.

கூடுதல் வகுப்புகளுக்கு ஞாயிறு விடுமுறை எனினும், எங்கள் வருகை காரணமாக, குழந்தைகள் வந்திருந்தார்கள். பத்தில் தொடங்கிய எண்ணிக்கை சற்று நேரத்தில் இருபதாகி, இன்னும் சற்று நேரத்தில் முப்பது ஆனது. பள்ளி செல்ல இருக்கும் குழந்தை முதல், 9 படிக்கும் குழந்தை வரை இதில் அடக்கம். பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளை எண்ணிக்கையில் மிஞ்சியிருந்தது, எங்களை ஆச்சர்யத்திலும் அதே சமயத்தில் மிகுந்த மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

கூடிய குழந்தைகள் ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகம் செய்து கொள்ள, அவர்களுடனான எங்களுடைய கலந்துரையாடல்  தொடங்கியது. முதல் விளையாட்டு, குழந்தைகள் ஒவ்வொருவராக விலங்கு ஒன்றின் பெயரினைச் சொல்ல வேண்டும். ஒருவர் சொல்லிய விலங்கினை இன்னொருவர் சொல்லக் கூடாது. ஆச்சர்யப்படும்படியான விரைவுடன், குழந்தைகள் விலங்குகளின் பெயரை அடுக்கினர். ஒருவர் கூட மற்றவர் சொன்ன விலங்கினை திருப்பிக் கூறவில்லை. அடுத்ததாக, செந்தில் தெரிந்த திருக்குறள் கூறும்படிக் கேட்டார். இரு குழந்தைகள் இருவேறு குறள்களுடன் முன்வந்தனர். பொறுமை பற்றியும், வாய்மை பற்றியும் இருவேறு குறள்கள். அவ்விரண்டு குறள்களுக்கும்  விளக்கம் கூறி விவரித்தார் செந்தில்.  குழந்தைகளுக்கு நேரம் பார்க்கத் தெரியாததது தெரிய வர, செந்திலும் நானும்  நேரம் பார்ப்பது எவ்வாறு என்று விவரித்தோம்.
பேச ஆரம்பித்த சற்று நேரத்திலேயே, எளிதில் திறந்துவிடாத நம் மனம் திறந்து உள்ளமர்ந்து கொள்ளும் ஆற்றல் குழந்தைகளுக்கே இருக்கின்றது. எவ்விதமானதோர் எதிர்பார்ப்பும் இன்றி,  மகிழ்ச்சியாய் எங்களோடு தங்கள் நேரம் செலவழித்தனர். பொய்ப் பணிவு இல்லை. போலி அன்பு இல்லை. ஏன், போலி என்று எதுவும் இல்லை அவர்களிடம். அன்றலர்ந்த மலர்கள்!

குழந்தைகளோடு இணைந்து ஒவ்வொருவர் வீடுகளுக்காகச் சென்றோம். பருவம் அடைந்தவுடன் பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்ட பெண் பற்றிக் கேள்விப்பட்டு, பிரியா அக்குழந்தையிடம் சென்று பேசினார். அப்பெண் குழந்தையின் தாயிடமும் பேசினார். இருந்தும், இதுபோன்ற மனத்தடைகள் ஒரு பகிர்ந்துரையாடலில் அகலுவதில்லை. தொடர்ந்த முயற்சிகள் தேவையாகிறது.




பெரும்பாலான  குழந்தைகளின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். சந்திக்கக் கிடைத்த சிலர், தங்கள் பிள்ளைகளை ஆண், பெண் பாகுபாடு இன்றி பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வத்தோடு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலணிகள் இல்லாது எங்களைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு மத்தியில் காலணிகளோடு செல்வது எங்களுக்கு ஏதோ போல் இருந்தது. காலணிகள் காட்டிலும், அவர்களுடைய உடனடித் தேவை, நல்ல மாற்று உடையும், எழுது புத்தகங்களுமே.

பெற்றோர் சந்திப்பு முடிந்து, இறை, குரு வணக்கப்  பாடல்களுடன் குழந்தைகளுடனான  எங்கள் சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது. ப்ரியாவும், நண்பர்களும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். சிலர் மாலை குளிப்பது தெரியவர, அவர்களை காலையில் பள்ளி செல்லும் முன் குளிக்க வலியுறுத்தினோம். சிறு கணக்குப் புதிர்கள், கதை சொல்லல், பாடல் என்று தொடர்ந்து, குழந்தைகள் கொண்டாட்டமாக நடனமும் ஆடினர்.



2.30 மணிக்கு, சந்திப்பு முடிந்து கிளம்பினோம், நிறைந்து எடை கூடிய மனங்களுடன்.



எங்கள் கைகளை உரிமையோடு பிடித்துக்கொண்டு  எங்களைச் சுற்றி சுற்றி வந்து வழியனுப்பிய இளந்தளிர்கள், மனதின் எடையை மேலும் கூட்டவே செய்தன. கார் கண்ணாடித் திரையில் படிந்திருந்த தூசியில்   தங்கள் கையொப்பம் இட்டு, சுடர் விடும் முகங்களோடு கையசைத்து விடைகொடுத்தனர். திரும்பும் வழியில் சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்ட சிவன் கோவில் சென்று, சென்னை திரும்பினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக